பிரபல சின்னத்திரை நடிகை வைஷ்ணவி. பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்தார். பாபா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார். வைஷ்ணவியும் சின்னத்திரை நடிகர் தேவ் ஆனந்த்தும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கடந்த 2006-ம் ஆண்டு வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டார்.
வைஷ்ணவியின் தற்கொலைக்கு தேவ் ஆனந்த்தின் தூண்டுதலே காரணம் என்று வைஷ்ணவியின் பெற்றோர் அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டியதாக தேவ் ஆனந்த் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்றம், கடந்த 2011ம் ஆண்டு தேவ் ஆனந்த்துக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தேவ் ஆனந்த் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் தேவ் ஆனந்த் மீதான குற்றம் வலுவான சாட்சியங்களுடன் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி மகளிர் நீதிமன்றம் விதித்த 5 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தது.