பாதுகாப்பு வீரர்களின் தியாகம்: சமந்தா நெகிழ்ச்சி | 23வது ஆண்டில் தனுஷ்! - குபேரா படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியானது! | ‛ஜனநாயகன்' படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய்! லீக் அவுட் ஆன புகைப்படம்!! | பாடகி கெனிஷாவுடன் என்ட்ரி கொடுத்த ரவி மோகன்- ஆர்த்திக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராதிகா - குஷ்பூ! | கமலின் 237வது படத்தை இயக்கும் அன்பறிவ் பிறந்த நாள் - வீடியோ வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்! | ரஜினி அடுத்த பட ரேசில் வினோத், அருண்குமார்! | சிவாஜி குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகர்! | சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மோகன்லால்? | பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி |
நடிகர் திலகம் சிவாஜியின் 86வது பிறந்த நாளை சிவாஜி குடும்பத்தினர் சென்னை மியூசிக் அகாடமியில் கொண்டாடினார். இதையட்டி கலை உலகில் சாதனை படைத்த பாடகி ஜமுனா ராணி, நாட்டிய பேரொளி பத்மா சுப்பிரமணியம், நடிகர்கள் வி.எஸ்.ராகவன், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சி.ஆர்.பார்த்திபன் ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சான்றிதழுடன் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
இதனை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:
நாடகத்தில் பெண் வேடத்தில் நடித்து தன் நடிப்பு வாழ்க்கையை தொடங்கியவர் சிவாஜி. நாடக நடிப்பால் வெறும் கணேசன், சிவாஜி கணேசன் ஆனார். சிவபெருமான், முருகன், பாரதத்தாய் போன்ற கடவுள்களையும், திருவருட் செல்வர் போன்ற ஆன்மீக குருக்களையும், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற சுதந்திரபோராட்ட தியாகிகளையும் நமக்கு காட்டியவர் அவர்.
அழுகை, சிரிப்பு, ஆடல், பாடல் என எல்லாவற்றையும் அவரிடமிருந்து கற்றுக் கொண்டோம். ஒரு வழக்கறிஞர், போலீஸ் அதிகாரி, நீதிபதி எப்படி இருக்க வேண்டும் என்பதை நடித்துக் காட்டினார். சிவாஜி ஒரு பல்கலைகழகம் அவரிடம் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக இன்றைய நடிகர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். கல்விக்கு சரஸ்வதி பூஜை நடத்துவதைப்போல நடிப்புக்கு சிவாஜி பூஜை நடத்த வேண்டும்.
சினிமாவில் ஜெயித்த அவரால் அரசியலில் ஜெயிக்க முடியாமல் போனது. காரணம் அவருக்கு நிஜ வாழ்வில் நடிக்கத் தெரியவில்லை. ஆனாலும் தமிழ் சினிமாவின் நிரந்தர முதல்வர் அவர்தான்.
கலைத்துறை சிவாஜிக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை என்பது என் ஆதங்கம். அவரது பெயரில் மிகப்பெரிய விருதுகள் வழங்கப்பட வேண்டும். சிவாஜி குடும்பம் அவரது பிறந்த நாளை கொண்டாடினால் போதாது. நடிகர் சங்கம் ஆண்டு தோறும் அவரது பிறந்த நாளை கொண்டாட வேண்டும். அதுதான் அவர்கள் சிவாஜிக்கு செய்யும் மரியாதை. அடுத்த ஆண்டு முதலே சிவாஜி பிறந்த நாளை நடிகர் சங்கம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
முன்னதாக சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் வரவேற்றார். முடிவில் இளையமகன் பிரபு நன்றி கூறினார்.