நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
'கருத்த இருளை
அறையெங்கும் நிரப்பி வைத்தேன்
கொஞ்ச நேரத்தில்
இருள் மெல்ல மெல்ல
வெளிச்சத்தை சொட்டுகிறது...'
அதிருப்தி உலகத்தில் வாழும்மனிதர்களுக்கு கவிதைகளும், பாடல்களும் தான் நம்பிக்கை ஊட்டுகின்றன. அப்படி சோர்ந்து கிடக்கும் மனிதர்களின் உணர்வுகளை தனது கவிதை வாயிலாக கூர்தீட்டிமனதில் நம்பிக்கையூட்டி வருகிறார் கவிஞர் தரன்.
அவருடன்பேசியபோது; நான் பிறந்து, வளர்ந்தது வடசென்னை. கல்லுாரியில் சேர்ந்த போதுமுதலில் கணினியியல் துறையை தேர்வு செய்தேன். அப்போது எனக்கு வந்த தமிழ் ஆசிரியர் செந்தில்குமரன், தமிழை பற்றி பேசும் போது வியப்பாக இருந்தது. அவரிடம் கவிதை எழுதி காண்பிப்பேன்.
படித்துவிட்டு எனக்கு கவிதை எழுதக் கூடிய ஆற்றல் உள்ளது என்றார். அந்த பாராட்டுஎழுதும் ஆர்வத்தை துாண்டியது.
முறையாக கவிதை, பாடல் எழுத தமிழ் படிக்க வேண்டும் என முடிவு செய்து, கணினியியல் துறையில் இருந்து வெளியே வந்து தமிழ் துறையில் சேர்ந்தேன்.
அங்கு தொடங்கிய கவிதை பயணம் பின்னாளில் திரைப்படத்தில் பாடல் எழுதுவது வரை கொண்டு சென்றது. இதுவரை பட்டதாரி, ஓ2 உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளேன். கடலை மீறிய நதிகள், விண்மீன்களின் விலாசம், ஒரு துளித் தமிழ், பூ அவிழும் சமிக்ஞை ஆகிய கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளேன்.
திரையிசை பாடல் எழுதும் போது மற்றொருவரின் கற்பனைக்கு நான் வடிவம் கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் கவிதையில் சமூகம் சார்ந்து எனக்கு எழும் கேள்விகளை எளிமையாக கேட்க முடியும். கவிதை எழுதும் போது குறிப்பிட்ட தலைப்பை எடுத்துக் கொண்டு எழுதாமல் அப்போதைய மனநிலையில் தோன்றுவதை எழுதுவேன். கவிதை எழுதுவதற்கு முன்னாள் மனம் பக்குவப்பட வேண்டும். தினமும் ஒரு கவிதை என எழுதாமல், இன்றைக்கு கவிதை எழுத வேண்டும் என்ற மனநிலை இருந்தால் மொத்தமாக எழுதிவிடுவேன்.
அதன்பின், கவிதை எழுத வேண்டும் என்ற மனநிலை என்றைக்கு தோன்றுகிறதோ அப்போது தான் எழுதுவேன்.'பூ அவிழும் சமிக்ஞை' கவிதை தொகுப்பு பொள்ளாச்சி எம்ஜிஎம் கல்லுாரியின் முதுகலை தமிழ் மாணவர்களுக்கு பாடமாக உள்ளது. தொல்காப்பியத்தில் 8 வகையான மெய்ப்பாடு இருக்கும். அதன் அடிப்படையில் இந்த நுாலை அணுகினேன்.
திரையிசையில் தமிழ் இசை
கடந்த 10 ஆண்டுகளில் திரையிசையில் மொழிக்கான முக்கியத்துவம் குறைந்திருப்பதை உணர முடிகிறது. ஓசை மட்டும் பாடல் ஆகாது. காலம் கடந்து ஒரு பாடலை நிலை நிறுத்துவது பாடல் வரிகள் தான். மனித வாழ்வின் பிம்பங்களாக பாடல்கள் விளங்குகின்றன. அதனால் தான் சங்க இலக்கியம் முதல் தற்போது வரை மனித உணர்வுகளை அடிப்படையாக கொண்டு பாடல்கள் அமைகின்றன. சங்க இலக்கிய பாடல்களின் தாக்கத்தை தற்போதைய திரையிசையிலும் காண முடியும்.
'யாயும் யாயும்' எனும் குறுந்தொகை பாடல் முழுவதும் தற்போது திரையிசை பாடலாக வந்துள்ளது.
'இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து' - எனும் குறள் காதலியின் ஒரு கண் நோய் தருவதாகவும், இன்னொரு கண் அந்த நோய்க்கு மருந்தாக அமைவதாகவும் வள்ளுவர் பதிவு செய்துள்ளார். இதை அடிப்படையாக வைத்து பட்டதாரி படத்தில் ஒரு பாடல் எழுதியிருந்தேன்.
நவீன இலக்கியம்
ஒரு எழுத்தாளருக்கு ஊக்கம் தருவது மக்களின் ஆதரவு தான். போதிய வரவேற்பு இல்லாத போது எழுத்தாளர் தனக்குள் உள்ள வேட்கையை அணையாமல் காப்பாற்றிக்கொள்வது பெரிய சவால். நவீன கால வாசகர்கள் புத்தகங்கள் வாயிலாக படிக்கும் நிலையை ஏற்படுத்தி கொண்டால் நவீன இலக்கியம் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி செல்லும்.
தமிழில் மக்களுக்கான படைப்புகளை அதிகம் கொண்டுவர வேண்டும் என்பது தான் எதிர்கால இலக்கு. சமீபகாலமாக திரைக்கதையில் பணிபுரிந்து வருகிறேன். அயலக தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க 'பழகுதமிழ்' எனும் இணையதளம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். அது சார்ந்த பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.