தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! | ‛மதராஸி' படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக திட்டமிடும் படக்குழு! | கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை தவறவிட்ட நாயகிகள்! | கணவரை பிரிந்து வாழ்கிறாரா ஹன்சிகா? | ‛‛அப்செட் ஆனால் இதை செய்வேன்'': ரகசியம் சொன்ன கீர்த்தி சுரேஷ் | தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” |
தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட முதல் காவியத் திரைப்படமாக வெளிவந்ததுதான் இந்த “கண்ணகி”. பெரும்பாலும் மன்னர் குலத்து மாந்தரையே காப்பியங்களின் முதன்மையானவர்களாக சித்தரித்து வந்த இலக்கியம் சார்ந்த படைப்புகளில், முதல் முறையாக ஒரு வணிக குலத்து மாந்தரை முதன்மை படுத்திய, இலக்கியம் சார்ந்த ஒரு வெள்ளித்திரைப் படைப்பாக வந்ததுதான் “கண்ணகி”.
ஆரம்ப காலங்களில் நாடக வடிவிலும், தெருக்கூத்து வடிவிலும் நடிக்கப்பட்டு வந்த இந்த “கண்ணகி”யின் கதை, 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 2 அன்று திரைப்படமாக வெளிவந்து மாபெரும் வெற்றியை சுவைத்தது. 1940ம் ஆண்டு “அசோக்குமார்” திரைப்படத்தில் எம் கே தியாகராஜ பாகவதருக்கு சித்தியாக நடித்திருந்த நடிகை கண்ணாம்பா, 1942ம் ஆண்டு பி யு சின்னப்பாவுடன் இணைந்து “கண்ணகி” திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடித்த பின்புதான் தமிழ் நாட்டில் ஒரு புகழ்மிக்க நடிகையாக அறியப்பட்டார்.
தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட இவர், “கண்ணகி” திரைப்படத்தில் தன் கணவன் கோவலனின் துர்மரணத்திற்கு நியாயம் கேட்டு, கால் சலங்கையுடன் பாண்டியனின் அரசவையில், மன்னனிடம் வாதாடி, நீதியை நிலைநாட்டி, மதுரை மாநகரை தீக்கிரையாக்கும் காட்சியில் தனது ஆர்ப்பரிக்கும் நடிப்புக் கலையை, தெளிவான தமிழ் உச்சரிப்போடு, கனல் தெறிக்க இவர் பேசி நடித்திருந்த காட்சி, பின்னாளில் வந்த திரைக்கலைஞர்களுக்கு தமிழ் வசனத்தை எப்படி தெளிவாக காட்சிக்கு ஏற்ப பேசி நடிக்க வேண்டும் என்பதற்கு ஒரு சரியான பாடமாக அமைந்திருந்தது என்றால் அது மிகையன்று.
இந்தப் படம் தயாரிக்கப்பட்ட நாட்களில் மிகவும் பிஸியான வசனகர்த்தாவாக பார்க்கப்பட்டு வந்தவர் இளங்கோவன். ஒவ்வொரு நாளும் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் சிலமணி நேரங்களுக்கு முன்புதான் வசனம் எழுதப்பட்ட காகிதங்களை காரில் கொண்டுவந்து கொடுத்துவிட்டு செல்வார்களாம். 'பத்தினி தெய்வம்' என்ற பெயரில் வந்த கோவலன் நாடகக் கதை, இளங்கோ அடிகளின் 'சிலப்பதிகாரம்', 'சிலம்பு காப்பிய நாடகக் காட்சிகள்', 'நாடோடிக் கதைகள்', 'கர்ண பரம்பரைக் கதைகள்' மற்றும் 'கோவலன் - மாதவி', 'கோவலன் - கண்ணகி தெருக்கூத்துக்கள்' என எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து அதன் பின்புதான் இத்திரைப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியதாக படத்தின் இயக்குநரான ஆர் எஸ் மணி கூறியிருக்கின்றார்.
மார்க்கஸ் பார்ட்லே மற்றும் டபுள்யு ஆர் சுப்பாராவ் ஆகிய இருவரின் ஒளிப்பதிவில் வெளிவந்த திரைதப்படம்தான் “கண்ணகி”. துர்க்கையின் சிலை உயிர் பெற்று தன் கையை நீட்ட, கீழே துண்டிக்கப்பட்டு கிடக்கும் மனிதனின் தலை எழும்பிப் பறந்து துர்க்கையின் கையில் அமர்ந்து பேசுவது, பின்னர் மின்னலென உருமாறி ஜோதியாக கிளம்பிச் சென்று பட்டத்து ராணியின் வயிற்றில் கருவாக இடம் பெறுவது என பல தந்திரக் காட்சிகள் படத்தில் இடம் பெற்று, தமிழ் சினிமா வரலாற்றில் ஒளிப்பதிவாளர்கள் பாராட்டுப் பெறக் காரணமாக அமைந்த முதல் திரைப்படமாகவும் அமைந்தது இந்த “கண்ணகி”தான்.
பொம்மன் இரானி என்ற இயக்குநரால் ஆரம்பத்தில் இயக்க ஆரம்பித்த இத்திரைப்படம், பின்னர் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரை நீக்கிவிட்டு, ஆர் எஸ் மணியை இயக்குநராக்கினர் தயாரிப்புத் தரப்பினர். பி யு சின்னப்பா, கண்ணாம்பா, எம் எஸ் சரோஜா, டி பாலசுப்ரமணியம், எம் ஆர் சுவாமிநாதன், யு ஆர் ஜீவரத்தினம், என் எஸ் கிருஷ்ணன், டி ஏ மதுரம், டி ஆர் ராமச்சந்திரன் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து, 1942ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 2 அன்று வெளிவந்த இத்திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்ததோடு, வணிக ரீதியாகவும் நல்ல வசூலையும் பெற்றுத் தந்தது இந்த “கண்ணகி” திரைப்படம்.