அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை 19ம் நூற்றாண்டின் இறுதியில் எழுதிய நாடகக் காப்பியம்தான் “மனோன்மணீயம்”. இது 1942ம் ஆண்டு திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. சேரநாட்டு மன்னன் புருஷோத்தமன், நேர்மையும், வீரமும் பொருந்திய பாண்டிய நாட்டு மன்னன் ஜீவகன், தன்னலம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டிருக்கும் பாண்டிய மன்னனின் அமைச்சர் குடிலன், பாண்டிய நாட்டு இளவரசி மனோன்மணி இவர்களைச் சுற்றிச் சுழலும் கதையே இந்த “மனோன்மணி”.
ஓர் நள்ளிரவில் பாண்டிய நாட்டு இளவரசி மனோன்மணியின் கனவில் ஓர் ஆணழகன் (புருஷோத்தமன்) தோன்ற, அதேபோல் சேர நாட்டு மன்னன் புருஷோத்தமனின் கனவில் ஓர் பெண்ணழகி (மனோன்மணி) தோன்ற, அவன் யார்? என்று இவளுக்குத் தெரியாது. இவள் யார்? என்று அவனுக்கும் தெரியாது. கனவிலேயே காதலர்களாக அறிமுகமாகி, காதல் மலர்கின்றது.
பாண்டிய மன்னனின் நல விரும்பியான சுந்தர முனிவரின் ஆலோசனைப்படி மனோன்மணியை திருமணம் செய்து கொள்ளுமாறு சேர மன்னனுக்கு தூதனுப்ப முடிவு செய்து, பாண்டிய மன்னனின் அமைச்சரான குடிலனின் சூழ்ச்சியின் படி, அவனது மகன் பலதேவனை தூதுவனாக அனுப்புகின்றனர். வஞ்சகத் தூதுவனால் வம்பு வளர்கிறது. போர் உருவாகிறது. பாண்டியனின் படை தோல்வியுற்று, தளபதியின் சாகஸத்தால் பாண்டிய மன்னன் ஜீவகன் தப்புகின்றான். நிலைமையின் உக்கிரத்தை உணர்ந்து, சுரங்க வழியாக மனோன்மணியை தனது ஆஸ்ரமத்திற்கு அழைத்து வருமாறு சுந்தர முனிவர் ஆலோசனையைத் தர, தீய அமைச்சரான குடிலன் அதை மாற்றி, தனது மகன் பலதேவனுக்கு மனோன்மணியை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை மேற்கொள்கின்றான்.
சுரங்க வழியே வரும் அமைச்சர் குடிலன் அங்கே சேர மன்னன் புருஷோத்தமனை பார்க்க நேர்ந்துவிட, புருஷோத்தமா! பாண்டிய மன்னன் ஜீவகனை நான் பிடித்துக் கொடுக்கின்றேன். நீ எனக்கிந்த பாண்டிய நாட்டை பரிசாகக் கொடுத்து விடு என்று கூற, இந்த வஞ்;சக சூழ்ச்சியை ஏற்க மறுத்த புருஷோத்தமன் பாண்டிய நாட்டு அமைச்சர் குடிலனை கைது செய்து, சுரங்க வழியாக அரண்மனையில் அமைக்கப்பட்டிருக்கும் மணமேடைக்கு வர, இவரே என் கனவில் வந்த ஆணழகன் என்று மனோன்மணி கூற, இவளே என் கனவில் வந்த பெண்ணழகி என்று சேர மன்னன் புருஷோத்தமனும் சொல்ல, கனவில் காதலர்களாக அறிமுகமான இவர்கள் மேடையில் மணமக்களாகின்றனர்.
“மாடர்ன் தியேட்டர்ஸ்” தயாரிப்பில் டி ஆர் சுந்தரம் தயாரித்து, இயக்கிய இத்திரைப்படத்தின் நாயகன் மற்றும் நாயகியைத் தேர்ந்தெடுக்க, பத்திரிகை விளம்பரங்கள் மூலம் பொதுமக்களிடம் கோரிக்கை வைக்க, பெரும்பான்மையான மக்களின் விருப்ப நாயகனாக, நாயகியாக அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் பி யு சின்னப்பா, டி ஆர் ராஜகுமாரி. 1942ல் வெளிவந்த இத்திரைப்படம் 25 வாரங்கள் வரை ஓடி வெள்ளி விழா கண்டது. பின்னாளில் 1996ல் வெளிவந்த “காதல் கோட்டை” திரைப்படத்தின் நாயகன், நாயகியான அஜித் மற்றும் தேவயானியின் காதல் காட்சிகள் கூட ஏறக்குறைய இந்த சாயலில்தான் அமைத்திருப்பர்.