மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் சிம்பு! | மீண்டும் வாடிவாசல் தள்ளிப்போகிறதா? ரெட்ரோ படத்தின் புரமோஷனில் அடுத்த படத்தை அறிவித்த சூர்யா! | ஒரே நாளில் சந்தானம், சூரி படங்களுடன் மோதும் யோகி பாபு | 45 வயது சந்தானத்துக்கு அம்மாவான கஸ்தூரி ! | சுதாவின் அடுத்த பட ஹீரோ சிம்பு! - ‛வேட்டை நாய்' நாவல் படமாகிறது! | வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன்! | நீண்ட வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும் கே.எஸ். அதியமான்! | ‛மெய்யழகன்' குறித்து நெகிழ்ந்து பேசிய நானி! | பல விஷயங்களில் மனம் மாறிய நடிகை | 1000 கோடி வசூல் கனவுக்கு சிக்கல்: அதிர்ச்சியில் உச்ச நடிகர் |
சிரிக்கும் விழி, சிருங்கார நாட்டியம், சீர்மிகு நடிப்பு, சிலை போல அழகு என அத்தனையும் ஒருங்கே அமைந்த நவரச நாயகிதான் 'நாட்டியப் பேரொளி' பத்மினி. அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானமாக இருந்த திருவனந்தபுரம்தான் இவரது பூர்வீகம். இவருடன் பிறந்த லலிதா, ராகினி என்ற மற்ற இரு சகோதரிகளோடு தனது நான்காவது வயதிலேயே நாட்டியம் பயில ஆரம்பித்தவர் இவர். கதகளி, பரதம், மணிப்புரி, குச்சிப்புடி, மோகினியாட்டம் என அனைத்து வகை நடனங்களையும் முறைப்படி கற்று, பின்னாளில் கலையுலகினரால் 'நாட்டியப் பேரொளி' என அழைக்கப்பட்டவர். 'திருவிதாங்கூர்' சகோதரிகள் என அழைக்கப்படும் லலிதா, பத்மினி, ராகினி ஆகிய இம்மூவரும் சினிமாவில் நடிகைகளாக அறிமுகமாவதற்கு முன் நடன மங்கைகளாக, நாட்டியத் தாரகைகளாகத்தான் வெள்ளித்திரையின் வெளிச்சத்தில் பிரகாசித்து வந்தனர்.
உலகப் புகழ் பெற்ற நடனக் கலைஞர் உதயசங்கர் 'கல்பனா' என்ற பெயரில் நாட்டிய நாடகம் ஒன்றை சென்னையில் தங்கி, ஜெமினி ஸ்டூடியோவில் மூன்றாண்டு காலம் படப்பிடிப்பினை நடத்தி அதனை இந்தி திரைப்படமாக வெளியிட்டார். 'கல்பனா' படத்திலும், அவரது மற்ற நாட்டிய நிகழ்ச்சிகளிலும் அவரையும் அவரது மனைவியையும் தவிர இரண்டு இளம் பெண்கள் பிரதானமாக புகழ் பெற்று வளர்ந்து கொண்டிருந்தனர். 'திருவிதாங்கூர்' சகோதரிகள் என்ற சிறப்புப் பெயருடன் வலம் வந்து கொண்டிருந்த அந்த சகோதரிகளைத் தான் அடுத்து எடுக்க இருக்கும் திரைப்படமான “வேதாள உலகம்” திரைப்படத்தில் நடிக்க வைக்க விரும்பினார் ஏ வி மெய்யப்ப செட்டியார்.
அது சம்மந்தமாக அவர்களிடம் பேச, நாங்கள் 'திருவிதாங்கூர்' ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். படத்தில் நடனக் காட்சி என்றால் மட்டும்தான் நடிப்போம் என அவர்கள் கூற, டி ஆர் மகாலிங்கம், யோக மங்கலம், கே சாரங்கபாணி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த “வேதாள உலகம்” திரைப்படத்தில் கதைக்கு சம்மந்தமேயில்லாத ஒரு நாட்டியக் கதையை உருவாக்கினார் ஏ வி மெய்யப்ப செட்டியார்.
“வாசமுள்ள பூப்பறிப்பேனே” என்று பாடிய படி தனது மனைவிக்காக பூப்பறிக்கப் போகின்றான் பாம்பாட்டி ஒருவன். புதரிலிருந்த பாம்பு அவனை கடித்து விட, கதறியபடி பாம்பாட்டியின் மனைவி பச்சிலைகளைப் பிழிந்து அவன் வாயில் ஊற்ற, பாம்பாட்டி பிழைத்துக் கொள்கின்றான். கிராமிய நடன பாணியில், அபிநயங்கள் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடிய ஒரு சிறிய நாட்டியக் கதை உருவாக்கப்பட்டது. 'திருவிதாங்கூர்' சகோதரிகளில் சின்னவரான நடிகை பத்மினி பாம்பாட்டியாகவும், பெரியவர் லலிதா பாம்பாட்டியின் மனைவியாகவும் நடனமாடியிருந்தனர். 1948ம் ஆண்டு வெளிவந்த “வேதாள உலகம்” படத்தின் பிரதானக் கதையைக் காட்டிலும், இந்த நடனக் கதை அப்போது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டிருந்தது.