கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'தங்கலான்' படத்தின் ரிலீஸை தொடர்ந்து மாளவிகா மோகனின் தற்போது ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளில் மாறி மாறி நடித்து வருகிறார். இதில் தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக 'ராஜா சாப்' படத்திலும் கார்த்திக் ஜோடியாக 'சர்தார்-2' படத்திலும் நடித்து வரும் மாளவிகா மோகனன் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹிருதயபூர்வம்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இது குறித்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ள மாளவிகா மோகனன் கூறும்போது, “என்ன அற்புதமான ஒரு மாதமாக அது இருந்தது. ஒரு படத்தில் இருந்து இன்னொரு படத்திற்கு தாவி வரும்போது புது குழுவினர், புது நட்பு என பல விஷயங்கள் கிடைக்கின்றன. அதிலும் ஹி'ருதயபூர்வம் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஒரு குடும்பத்திற்குள் இருந்த உணர்வை ஏற்படுத்தியது. அது மட்டுமல்ல மோகன்லால், சத்யன் அந்திக்காடு போன்ற ஜாம்பவான்களுடன் கூடவே இருந்தாலே, அவர்கள் செய்வதை கவனித்துக் கொண்டிருந்தாலே நிறைய கற்றுக்கொள்ள முடியும்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் மாளவிகா மோகனன்.