ஹிந்தியில் 'டாப் ஸ்டார்' ஆகும் ராஷ்மிகா மந்தனா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனியை அரங்கேற்றும் லிடியன் நாதஸ்வரம் | நீண்ட நாள் நண்பரை கை பிடிக்கும் அபிநயா | புதிய சீரியலில் மான்யா ஆனந்த் | மீண்டும் வெளியாகும் பாஸ் என்கிற பாஸ்கரன் | போதை பொருள் விளம்பரம் : ஷாருக்கான், அஜய் தேவ்கான் ஆஜராக நுகர்வோர் கமிஷன் உத்தரவு | ரசிகர் கன்னத்தில் பளார் விட்ட ராகினி | தமிழ் சினிமாவை குறை சொன்ன ஜோதிகா: மவுனம் கலைப்பாரா சூர்யா? | பிளாஷ்பேக்: முதல் கன்னடத்து பசுங்கிளி | ஆரம்பமானது 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு |
சிந்தனைத் திறன் மேலோங்கிய ஒரு சீர்மிகு படைப்பாளியாக தமிழ் திரைப்பட ரசிகர்களால் பார்க்கப்படுவர்தான் நடிகரும், இயக்குநருமான ஆர் பார்த்திபன். தனது ஒவ்வொரு படைப்பிலும் ஏதாவது ஒரு புதுமையைச் செய்து, மற்ற படைப்பாளிகளிலிருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்வதில் ஒரு வித்தகர் இவர். சமீப காலங்களில் வெளிவந்த இவரது “ஒத்த செருப்பு சைஸ் 7”, “இரவின் நிழல்”, “டீன்ஸ்” போன்ற இவரது படைப்புகள் அதை மேலும் உறுதி செய்திருந்தன. இதுபோன்ற இவரது புதிய முயற்சிகளுக்கு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஒருபுறம் இருந்தாலும், எதிர்வினையாற்றும் ஒரு சாராரும் உண்டு என்பதுதான் உண்மை.
அதுபோல் அனைத்துத் தரப்பு மக்களாலும் பெரிதும் ஆராதிக்கப்பட்டு, அமோக வெற்றியை சுவைத்த இவரது ஒரு படைப்பு உண்டு என்றால், அது 1989ம் ஆண்டு இவரது முதல் படைப்பாக வெளிவந்த “புதிய பாதை” என்பது அனைவரும் அறிந்ததே. இயக்குநர் கே பாக்யராஜின் “தாவணிக் கனவுகள்” திரைப்படத்தின் மூலம் அவரது உதவியாளராக இணைந்த ஆர் பார்த்திபன், ஒரு சிறு வேடமேற்று அதில் நடித்திருந்தாலும், நடிப்பதை விட, அவரது குருநாதர்போல் படங்களை இயக்க வேண்டும் என்பதிலேயே முனைப்பும் காட்டி வந்தார். ஒருசில படங்கள் அவரோடு பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு, அங்கிருந்து வெளிவந்து தனியாக படம் இயக்க முயற்சித்ததன் விளைவுதான் “புதிய பாதை”.
“கேள்விக்குறி” என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஓரிரு நாள்கள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென நின்று போக, அதன் பின் தயாரிப்பாளர் சுந்தரம் தயாரிக்க முற்பட்டு “புதிய பாதை”யாக மாறியது. முதலில் இத்திரைப்படத்தின் நாயகனாக இயக்குநர் பார்த்திபன் நினைவில் இருந்தவர்கள் நடிகர் அர்ஜுன் மற்றும் சத்யராஜ். அதன் பின் படத்தின் தயாரிப்பாளர் சுந்தரம் வற்புறுத்தலின் பேரில் பார்த்திபனே நாயகனாக தோன்றி நடித்திருந்தார்.
அதேபோல் படத்தின் நாயகியாக நடிகை குஷ்புதான் பார்த்திபனின் தேர்வாக இருந்தார். அந்தக் காலகட்டங்களில் நடிகை குஷ்புவின் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு சிறப்பானதாக இல்லாததால் அவரையும் நிராகரித்தார் படத்தின் தயாரிப்பாளர் சுந்தரம். அதன்பின் நாயகியாக நடிகை சீதா தேர்வானார். மேலும் படத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவை அணுக, அவர் மறுப்பு தெரிவிக்க சந்திரபோஸ் படத்தின் இசையமைப்பாளரானார்.
“அப்பா யாரு அம்மா யாரு நானும் பாக்கல”, “பச்சபுள்ள அழுதுச்சுன்னா பாட்டு பாடலாம்”, “கண்ணடிச்சா கல்லெடுப்பேன்” என படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புக்குள்ளாயின. சிறந்த படம் மற்றும் சிறந்த கதாசிரியருக்கான தமிழ்நாடு அரசு சினிமா விருதினையும், சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதினை நடிகை மனோரமா பெறவும் வழிவகுத்துத் தந்தது இந்த “புதிய பாதை”. படத்தின் நாயகன் கதாபாத்திரத்திற்கு நடிகர் பார்த்திபனைத் தவிர வேறு யாரையும் பொறுத்திப் பார்க்க இயலாத அளவிற்கு தனது சிறப்பான நடிப்பை வழங்கி, ரசிகர்களின் சிந்தை மகிழச் செய்திருப்பார் நடிகர் பார்த்திபன்.
தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தின் கதை தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என மற்ற மொழிகளிலும் படமாக்கப்பட்டது. 1989ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு வெளியீடாக வந்த இத்திரைப்படம் இயக்குநர் ஆர் பார்த்திபனுக்கு முதல் படம் மட்டுமின்றி, தமிழ் திரையுலகில் அவர் அடுத்தடுத்து புதுமைகள் படைக்க “புதிய பாதை”யை காட்டிய திரைப்படமாகவும் இருந்தது.