திரு மாணிக்கம் படத்தை பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த் | அப்பாவுடன் மோதும் அதிதி ஷங்கர்! | விடாமுயற்சி பின்வாங்கியதால் பொங்கல் ரேஸில் குட் பேட் அக்லி களம் இறங்குகிறதா? | சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படத்தின் டைட்டில் லீக் ஆனது! | 200 கோடி லாபத்தை நெருங்கும் 'புஷ்பா 2' | சிறு பட்ஜெட் படங்கள் தான் வாழ்வியலை பேசும்: சங்ககிரி ராஜ்குமார் சொல்கிறார் | தமிழ் படத்தில் லண்டன் நடிகை | மீண்டும் வருகிறார் 'ஆரண்ய காண்டம்' யாஸ்மின் பொன்னப்பா | வணங்கானில் உண்மை சம்பவம்: பாலா | பிளாஷ்பேக்: இரண்டு ஹாலிவுட் படங்களை காப்பியடித்து எடுக்கப்பட்ட 'ராஜபார்வை' |
2024ம் ஆண்டு தமிழ் சினிமா பெரும் வசூல் சாதனையைக் குவிக்கும் என ஆண்டின் ஆரம்பத்தில் திரையுலகினர், வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவருமே எதிர்பார்த்தார்கள். பல முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டில் வெளியாகும் நிலை இருந்ததே அதற்குக் காரணம். ஆனால், எதிர்பார்த்ததை விடவும் இந்த ஆண்டில் ஏமாற்றத்தைத் தரும் விதத்தில்தான் படங்களின் வசூல் இருந்தன. ஒரு சில படங்களைத் தவிர நிறைய படங்கள் லாபத்தைத் தரவில்லை.
இந்த ஆண்டில் மட்டும் சுமார் 230 படங்கள் தியேட்டர்களில் வெளியாகின. அவற்றில் நல்ல வசூலைக் கொடுத்த படங்கள், ஓரளவுக்கு வசூலைக் கொடுத்த படங்கள் என 20 படங்கள் வரை குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்த ஆண்டில் அதிகமான பட்ஜெட்டில் தயாரான படம் 'தி கோட்'. அந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் 400 கோடி என்றார்கள். படத்தின் வசூல் 450 கோடி வரை இருந்தது. தியேட்டர் வசூல் தமிழகத்தில் மட்டும் ஓரளவுக்கு லாபத்தைக் கொடுத்தது. மற்ற மாநில வசூல் லாபம் தரவில்லை. தயாரிப்பாளரைப் பொறுத்தவரையில் ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை, இதர உரிமை என 'டேபிள் பிராபிட்' பார்த்திருப்பார்கள்.
பெரிய பட்ஜெட் படம் என்பதால் இங்கு 'தி கோட்' படத்தின் பட்ஜெட், லாபத்தைப் பற்றி மட்டும் குறிப்பிட்டோம். அடுத்து பெரிய பட்ஜெட்டில் தயாராகி நஷ்டத்தைக் கொடுத்த படங்களாக 'லால் சலாம், இந்தியன் 2, தங்கலான், வேட்டையன், கங்குவா' ஆகிய படங்களைச் சொல்லலாம். இந்தப் படங்களின் மொத்த பட்ஜெட் மட்டும் சுமார் 1100 கோடி இருந்திருக்கலாம். ஆனால், இந்தப் படங்களின் மொத்த வசூல் 500 கோடியைக் கடந்திருந்தாலே அது அதிகமான தொகைதான். இந்தப் படங்கள் மட்டும் சுமார் 600 கோடி நஷ்டத்தைக் கொடுத்திருக்க வாய்ப்புள்ளது.
சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாரான 'அமரன்' படம் 300 கோடிக்கும் அதிகமாக பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு வசூலித்தது. அந்தப் படத்தின் சாட்டிலைட் டிவி உரிமை, ஓடிடி உரிமை என அதன் மூலமும் தயாரிப்பாளருக்கு பெரும் வருவாய் கிடைத்திருக்கும். இந்த ஆண்டில் பட்ஜெட்டை விட அதிகம் வசூலித்து, லாபத்தைக் கொடுத்த ஒரே படம் என்றால் இந்தப் படத்தை சொல்லலாம். இதற்கடுத்து 'மகாராஜா' படம் லாபகரமான படங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும். 100 கோடி வசூலில் குறைவான லாபத்தைத் தந்த படமாக 'ராயன்' படம் இருந்திருக்கும். சிறிய பட்ஜெட் படங்களில், “அரண்மனை 4, கருடன், டிமாண்டி காலனி 2, லப்பர் பந்து, பிளாக்' ஆகிய படங்கள் லாபத்தைத் தந்த படங்கள்.
மேலே குறிப்பிட்ட படங்களைத் தவிர்த்துப் பார்த்தால் இன்னும் 200 படங்களைப் பற்றிய கணக்குகளைச் சொல்ல வேண்டும். இவற்றில் மீடியம் பட்ஜெட் படங்கள், சிறிய பட்ஜெட் படங்கள், மிகச் சிறிய பட்ஜெட் படங்கள் ஆகியவைதான் இடம் பிடிக்கும். இவற்றில் 100 படங்கள் வரையில் மீடியம் பட்ஜெட் படங்களாகவும், மற்ற படங்களை சிறிய, மிகச் சிறய பட்ஜெட் படங்களாகவும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
மீடியம் பட்ஜெட் படங்களின் பட்ஜெட் என்பது சராசரியாக ஒரு படத்திற்கு 10 கோடி என்றும், சிறிய பட்ஜெட் படங்களை ஒரு படத்திற்கு 5 கோடி பட்ஜெட் எனவும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த 200 படங்களின் பட்ஜெட் 1500 கோடி வரும். இவற்றில் இந்தப் படங்கள் வசூலித்தது என அதிகபட்சமாக 100 கோடி கணக்கில் வரவாக வைத்துக் கொள்ளலாம். இந்தப் படங்கள் மூலம் கிடைத்த நஷ்டம் மட்டும் 1400 கோடி வரும்.
மேலே குறிப்பிட்ட பெரிய படங்கள் மூலம் ஏற்பட்ட நஷ்டம் 600 கோடியையும் சேர்த்துக் கொண்டால் சுமார் 2000 கோடி வரை இந்த ஆண்டு நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம். இது ஒரு தோராய கணக்குதான்.
சினிமாவைப் பொறுத்தவரையில் 'பட்ஜெட், வசூல்' என எந்த ஒரு தயாரிப்பாளரும் அதிகாரப்பூர்வமாக என்று அறிவிக்கும் தொகைகளில் எவ்வளவு உண்மை இருக்கும் என்று தெரியாது. அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.
வியாபாரத்திற்காக படங்களின் பட்ஜெட் அதிகமாகச் சொல்வதும், வசூல் தொகையிலும் கூடுதலாகச் சொல்வதும் பலரது வழக்கம். அப்படி சொன்னால்தான் இப்போதைய வியாபாரத்திற்கும், எதிர்கால வியாபாரத்திற்கும் உதவியாக இருக்கும்.
2000 கோடி வரை நஷ்டம் என்பது சாதாரணமல்ல. இந்த நஷ்டத்தை சரி செய்யலாம். அதற்கு தயாரிப்பாளர்கள் சரி செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது ஹீரோக்களின் சம்பளம். இங்குள்ள முன்னணி நடிகர்கள் இரண்டு பேருக்கு ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் என்கிறார்கள். அடுத்து சில நடிகர்களுக்கு 100 கோடி ரூபாய் சம்பளமாம். 50 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் சில பேர்.
ஹீரோக்கள் குறைவான அளவில் சம்பளம் வாங்கும் மலையாள சினிமாவிலேயே நஷ்டத் தொகை 700 கோடி என்கிறார்கள். அதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ் சினிமாவில் நஷ்டத் தொகை 2000 கோடிக்கும் அதிகமாகத்தான் இருக்கும்.
தமிழ் சினிமாவைக் காப்பாற்ற ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் சில சங்கங்கள், சில சினிமா பிரபலங்கள் பேசுவார்கள். ஆனால், அவையனைத்தும் பேச்சோடு போய்விடும். ஏதாவது செய்து மட்டும்தான் தமிழ் சினிமாவை வரும் காலங்களில் காப்பாற்ற முடியும். அதை யார் முன்னெடுக்கப் போகிறார்கள் என்பதுதான் கேள்வி?.