நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
கேரளாவில் வருடம் தோறும் அரசு கலைநிகழ்ச்சியாக கலோல்சவம் என்கிற பெயரில் கலைத்திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் பல இடங்களில் இருந்தும் பள்ளி மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து கொள்வார்கள். அதில் குறிப்பாக நடன நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து கொள்ளும் மாணவிகளுக்கு நடனம் கற்றுத் தருவதற்காக பிரபல நடிகைகள் ஒவ்வொரு வருடமும் கலந்து கொண்டு பயிற்சி அளித்து வருகிறார்கள். இதற்காக அவர்களுக்கு குறிப்பிட்ட தொகையும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வருடம் நடைபெற இருக்கும் இந்த கலோல்சவம் நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு நடனம் சொல்லித் தர பிரபல நடிகை ஒருவரை அணுகியதாகவும் அவர் சில தினங்களுக்கு தினசரி வெறும் 10 நிமிடங்கள் நடனம் சொல்லித் தருவதற்கு 5 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் கேரளா கல்வித் துறை அமைச்சர் வி.சிவன் குட்டி மிக பரபரப்பான குற்றச்சாட்டை கூறியிருந்தார். இது போன்ற கலை நிகழ்ச்சிகளில் துவக்கத்தில் கலந்துகொண்டு தங்களை பிரபலப்படுத்தி, பின்னர் சினிமாவில் வாய்ப்பு பெற்று உயரத்திற்கு சென்றவர்கள் அதை மறந்துவிட்டு இதுபோன்று அடாவடியாக அதிக பணம் கேட்பது தவறு என்று காட்டமாக கூறியிருந்தார்.
ஆனால் சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை அவர் வெளியிடவில்லை. அதேசமயம் மலையாள திரையுலகில் நன்கு நடனம் தெரிந்த நடிகைகள் என்றால் ஷோபனா, மஞ்சு வாரியர், ரீமா கலிங்கல், ஆஷா சரத் உள்ளிட்ட வெகு சிலர் மட்டுமே. இதில் எந்த நடிகை பற்றி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார் என சோசியல் மீடியாவில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் த்ரிஷ்யம் புகழ் நடிகை ஆஷா சரத் தானாகவே முன்வந்து ஒரு விளக்கம் அளித்துள்ளார்.
இந்த சர்ச்சை குறித்து அவர் கூறும்போது, “மாணவிகளுக்கு இப்படி நடனம் கற்றுத் தர பணம் கேட்ட விவகாரம் மிகப்பெரிய சர்ச்சை ஆகி உள்ளது. அதே சமயம் கடந்த வருடம் நான் தான் மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்தேன். அதற்காக ஒரு ரூபாய் கூட அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளவில்லை. அது மட்டுமல்ல துபாயிலிருந்து என்னுடைய சொந்த பணத்தில் தான் டிக்கெட் செலவு செய்து கேரளா வந்து சென்றேன். பல நாட்கள் தினசரி குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரம் நடன பயிற்சி அளித்தேன்
இது போன்ற கலை நிகழ்ச்சிகள் என்னைப் போன்ற கலைஞர்களுக்கு ஒரு கனவு தளம் ஆகும். அப்படி இதில் கலந்துகொண்டு இளைய தலைமுறையினருக்கு பயிற்சி அளிப்பது எனக்கு மகிழ்ச்சியான இதயம் நிறைந்த ஒரு அனுபவம்” என்று கூறியுள்ளார். அது மட்டுமல்ல நடனம் சொல்லித்தர பணம் கேட்பது சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவகாரம் என்றாலும் கூட இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நடிகைகளுக்கு அவர்களுக்கு ஏற்ற ஒரு நியாயமான ஊதியத்தை அரசாங்கம் தரவே செய்கிறது என்றும் கூறியுள்ளார்.