திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் |

ஆண்டனி ட்ரோலோப் என்ற ஆங்கில எழுத்தாளரின் கதை “தண்ணீர் சுமப்பவன்”. தண்ணீர் கிடைக்காத பஞ்சகாலத்தில் பல மைல் தூரங்களுக்கு அப்பால் உள்ள ஒரு ஏரியிலிருந்து தண்ணீர் சுமந்து வந்து ஊர் மக்களுக்கு அதை விநியோகம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் பிழைப்பு நடத்திவரும் ஏழை ஒருவனுக்கு ரகசியப் புதையல் உள்ள குகை பற்றிய விபரமும், ஒரு மெழுகுவர்த்தியும் கிடைக்க, அதில் குறிப்பிட்டுள்ள விபரப்படி குகைக்குச் சென்று, மெழுகுவர்த்தியை எரியவிட்டு, அது அணைந்துவிடும் முன் குகைக்குள் உள்ள வைரங்களை அள்ளிக் கொண்டு வெளியில் வந்து பெரும் பணக்காரன் ஆகிறான் அந்த ஏழை என்று இந்தக் கதையில் வரும் குகையையும், மெழுகுவர்த்தியையும் மையப் பொருளாக வைத்து, பெண்களை கண்ணீர் சிந்த வைக்கும் ஓர் கதையை உருவாக்கினர் “நாராயணன் கம்பெனி” என்ற தயாரிப்பு நிறுவனத்தினர்.
கதையின் நாயகன் ஆணழகன். எதிர்பாராதவிதமாக ஒரு சாபத்துக்குள்ளாகி நாயகன் அருவருப்பான தோற்றமுடையவனாகிவிட, அவனை மீண்டும் பழைய உருவத்திற்கு கொண்டு வரும் சக்தி ஒரு குகைக்குள் இருப்பதுபோல் திரைப்படத்திற்காக கதை புனையப்பட்டிருந்தது. படத்தின் நாயகனாக சிவாஜிகணேசனை நடிக்க வைக்க வேண்டும் என படத்தின் தயாரிப்பாளரான கே எஸ் நாராயண அய்யங்கார் நினைக்க, நரசு ஸ்டூடியோவில் ஒரு படப்பிடிப்பில் இருந்த சிவாஜிகணேசனை போய் பார்த்து கதையைச் சொல்லி அவருடைய சம்மதத்தையும் பெற்றுவிட்டது தயாரிப்பு நிறுவனம்.
இந்த தயாரிப்பு நிறுவனத்தின் படமான “மனம்போல் மாங்கல்யம்” திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் ஜெமினிகணேசனுக்கு தயாரிக்கப் போகும் இந்த திரைப்படத்திலும் நடிக்க வேண்டும் என ஆசை தொற்றிக் கொள்ள, படக் கம்பெனியை தொடர்பு கொண்டு வாய்ப்பு கேட்க, பலதரப்பட்ட குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரம் இது. ஜெமினிகணேசனால் செய்ய முடியாது என படத்தின் தயாரிப்பாளரான கே எஸ் நாரயாண அய்யங்கார் சொல்லிவிட, ஓர் நாள் நாராயண அய்யங்காரின் வீட்டிற்கு அடர்ந்த தாடி, மீசையோடு ஒரு பிச்சைக்காரன் வந்து நின்று, நாராயண அய்யங்காரிடம் “அய்யா பிச்சை போடுங்கய்யா” என கேட்க, போ! போ!! என அவர் விரட்ட, வீட்டிற்குள் நிற்கும் பிச்சைக்காரனை பார்த்துக் கொண்டிருந்த படத்தின் மற்றொரு தயாரிப்பாளரான பட்டண்ணாவைப் பார்த்து, என்ன நீயும் வேடிக்கை பாத்துக்கிட்டு நிக்கிறே… இவனை விரட்டு என நாராயண அய்யங்கார் கூற, நல்லாப் பாருங்க, அது நம்ம கணேஷ்தான் என பட்டண்ணா கூறியவுடன் ஜெமினி கணேசன் நாராயண அய்யங்காரின் முன் தனது பிச்சைக்கார வேடத்தை கலைந்தார்.
ஏன் இந்த பிச்சைக்கார வேஷம்? என நாராயண அய்யங்கார் ஜெமினிகணேசனைப் பார்த்து கேட்க, வேஷப் பிச்சை வேணும். நீங்க தயாரிக்கப் போகிற “கணவனே கண்கண்ட தெய்வம்” படத்தில் கதாநாயகனாக என்னை நடிக்க வைக்க வேண்டும் என ஜெமினிகணேசன் அவரிடம் கூற, பின்னர் படத்தின் நாயகனாக ஒப்பந்தமானார் நடிகர் ஜெமினிகணேசன். 1955 மே 6 அன்று வெளிவந்த இத்திரைப்படம் வணிக ரீதியாக மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்தது. பல திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்து ஓடி நடிகர் ஜெமினிகணேசனின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல் திரைப்படமாக அமைந்தது இந்த “கணவனே கண்கண்ட தெய்வம்”.