முத்தையா இயக்கத்தில் அருள்நிதி! | ரஜினி பிறந்த நாளில் முதல் முறையாக ரீ ரிலீஸ் ஆகும் தளபதி படம்! | நயன்தாரா விவகாரம்: தனுஷ் அப்பா கஸ்தூரிராஜா என்ன சொல்கிறார்? | 'கங்குவா' பற்றி ஜோதிகாவின் விமர்சனமும், விமர்சனங்களுக்கான விமர்சனமும்… | துளைக்க வந்தது…'விடுதலை 2' - தினம் தினமும்…சிங்கிள் | பிளாஷ்பேக்: நாடகத்தின் நாயகனாக சிவாஜியும், திரைப்படத்தின் நாயகனாக எம் ஜி ஆரும் நடித்திருந்த “என் தங்கை” | தனுஷ் - நயன்தாரா விவகாரம், எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் அசிங்கமான சண்டை | 'நானும் ரௌடிதான்' - பட்ஜெட் மற்றும் வசூல் எவ்வளவு ? | திரிசூலம், ஜே ஜே, சிங்கம்-2 - ஞாயிறு திரைப்படங்கள் | கங்குவா பட நாயகி திஷா பதானியின் தந்தையிடம் ரூ.25 லட்சம் மோசடி |
எம் கே தியாகராஜ பாகவதர், பி யு சின்னப்பா என்ற இருபெரும் தமிழ் திரையுலக உச்ச நட்சத்திரங்களுப் பின், நாடக மேடையிலிருந்து சினிமாவின் வெளிச்சம் கிடைக்கப் பெற்று, 1950களில் வளரும் நாயகர்களாக அறியப்பட்ட எம் ஜி ஆரும், சிவாஜியும் அவரவருக்குரிய தனித்தன்மையோடு கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து, அடுத்த தலைமுறை உச்ச நட்சத்திரங்களாக உயர்வு பெற்றனர்.
அழுத்தமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து, நடிப்பின் உச்சம் தொட்டவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் என்றால், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்கங்களுடன், சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தும் புரட்சிகரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து, கலையுலகின் உச்சம் தொட்டவர் புரட்சி நடிகர் எம் ஜி ஆர். இருவேறு நாயகர்களின் கலைப்பயணத்தில் சில ஒற்றுமைகளும் இருந்ததுண்டு. தவிர்க்க முடியாத சில காரணங்களால் இவர் நடிக்க வேண்டிய திரைப்படத்தில் அவரும், அவர் நடிக்க இருந்த திரைப்படத்தில் இவரும் நடித்த நிகழ்வுகளும் நடந்ததுண்டு. அவ்வாறு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நாயகனாக நடித்து வெற்றி பெற்ற ஒரு நாடகம் சினிமாவாக உருப்பெறும்போது, அதில் புரட்சி நடிகர் எம் ஜி ஆர் நாயகனாக நடித்து வெற்றி பெற்றதன் பின்னணியைத்தான் நாம் இங்கே காண இருக்கின்றோம்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் அறிமுகத் திரைப்படமான “பராசக்தி”யும், புரட்சி நடிகர் எம் ஜி ஆர் நடிப்பில் வெளிவந்த “என் தங்கை” திரைப்படமும் 1952ல் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படங்கள். திண்டுக்கல் நகரில் கே என் ரத்தினம் என்பவர் நடத்தி வந்த “என் தங்கை” நாடகத்திற்குத் தலைமை தாங்க, நாடகத்தை எழுதிய டி எஸ் நடராஜன், இயக்குநர் ஏ எஸ் ஏ சாமியை அழைக்க, அழைப்பை ஏற்று நாடகத்தை கண்டுகளித்த ஏ எஸ் ஏ சாமிக்கு, நாடகத்தில் உணர்ச்சிகரமாக நடித்திருந்த ஒரு நடிகரின் நடிப்பு மிகவும் பிடித்துப் போக, தான் பார்த்து மகிழ்ந்த நாடகத்தைப் பற்றியும், அதில் நடித்திருந்த நடிகரின் அபார நடிப்பைப் பற்றியும் ஜுபிடர் பிக்சர்ஸ் சோமுவிடம் எடுத்துக் கூற, ஜுபிடர் பிக்சர்ஸார் “என் தங்கை” நாடகத்தைப் படமாக்கத் தீர்மானித்து, ஏ எஸ் ஏ சாமியே படத்தை இயக்கவும் வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
ஏற்கனவே ஜுபிடர் பிக்சர்ஸ் கம்பெனியின் 3 திரைப்படங்களின் பணியில் இருந்து வந்த ஏ எஸ் ஏ சாமியால் அந்த வாய்ப்பை ஏற்க முடியாத நிலை ஏற்பட, அங்கு பணிபுரிந்து வந்த வேறொரு இயக்குநரை வைத்துப் படமாக்கலாம் என்று ஏ எஸ் ஏ சாமி யோசனை கூற, அதன்படி அந்த இயக்குநர் திண்டுக்கல் சென்று “என் தங்கை” நாடகத்தைப் பார்த்து வந்து தனக்கு அந்த நாடகம் பிடிக்கவில்லை என்று கூற, சில மாத இடைவெளிக்குப் பின் 'நேஷனல் பிக்சர்ஸ்' பி ஏ பெருமாள் “பராசக்தி” நாடகத்தைப் படமாக்க நினைத்திருப்பதாகக் கூறி, அதற்கு திரைக்கதை வசனம் எழுதித் தருமாறு ஏ எஸ் ஏ சாமியிடம் கேட்க, “என் தங்கை”, “பராசக்தி” இரண்டு நாடகங்களுமே கதாநாயகனின் தங்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. மேலும் “என் தங்கை” நாடகத்தில் பல சிறப்பான கட்டங்கள் இருக்கின்றன. இரண்டு நாடகக் கதைகளையும் இணைத்து ஒரு புதிய திரைக்கதையை அமைக்கலாம் என்று இயக்குநர் ஏ எஸ் ஏ சாமி யோசனை கூறினார் 'நேஷனல் பிக்சர்ஸ்' பி ஏ பெருமாளிடம்.
முதலில் நாடகத்தைப் பார்க்கலாம் என்றார் பி ஏ பெருமாள். அதன்படி ஏ எஸ் ஏ சாமியும், பி ஏ பெருமாளும் திருச்சி சென்று அங்கு “என் தங்கை” நாடகத்தைப் பார்த்தனர். மறுநாள் “என் தங்கை” நாடகத்தின் ஆசிரியரான டி எஸ் நடராஜனை, ஏ எஸ் ஏ சாமியும், பி ஏ பெருமாளும் சந்தித்து விபரத்தைக் கூற, “பராசக்தி”, “என் தங்கை” இரண்டு நாடகங்களின் காட்சிகளையும் ஒன்றாக இணைக்க “என் தங்கை” நாடக ஆசிரியர் டி எஸ் நடராஜன் ஒத்துக் கொள்ளவில்லை.
அதன் பின் “பராசக்தி” கதையை ஏ வி எம் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து திரைப்படமாக்க முயற்சித்தார் பி ஏ பெருமாள். “என் தங்கை” நாடகத்தின் நாயகனான சிவாஜிகணேசனையே “பராசக்தி” திரைப்படத்தின் நாயகனாக்கினார் பி ஏ பெருமாள். இதனை அறிந்த 'அசோகா பிக்சர்ஸ்' என்ற படநிறுவனம் “என் தங்கை” நாடகக் கதையை வாங்கி அதே பெயரிலேயே படமாக்கினர். சிவாஜியின் நடிப்பில் நாடகமாக அரங்கேறி வெற்றி பெற்ற “என் தங்கை” நாடகம் திரைப்படமாக உருமாறியபோது புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அதில் நாயகனானார். “பராசக்தி” படத்திற்கு முன்னதாகவே 'அசோகா பிக்சர்ஸ்” நிறுவனத்தினர் தங்களது “என் தங்கை” திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டனர். எம் ஜி ஆர் அண்ணனாகவும், விழியிழந்த தங்கையாக ஈ வி சரோஜாவும் நடித்திருந்த இத்திரைப்படத்தில் நரசிம்ம பாரதி, பி எஸ் கோவிந்தன், மாதுரிதேவி, எம் ஜி சக்கரபாணி, சி எஸ் பாண்டியன், எம் என் ராஜம் ஆகியோர் நடித்திருந்தனர். 1952 மே 31 அன்று இயக்குநர் சி எச் நாராயணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது.