இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
படித்தவன் முதல் பாமரன் வரை அறியும் பொருட்டு, எளிய தமிழ் சொற்களைக் கொண்டு ஆழ்ந்த கருத்தை வெளிப்படுத்தும் வல்லமைமிகு கவிஞனாக பார்க்கப்பட்டவர்தான் 'கவியரசர்' கண்ணதாசன். “எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும், இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது, பாதை எல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும், மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்” என்று மனித வாழ்க்கையை போகிறபோக்கில் எல்லோரும் அறியும் வண்ணம் எளிய தமிழில் பாடிச் சென்றவன் இவன்.
“நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே, வளர் பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு பொழிந்த தமிழ் மன்றமே” என்ற ஒற்றை வரியில் ஒட்டு மொத்த தமிழினத்தையும், இலக்கிய ஞானம் பெற்ற சமூகமாக மாற்றி அமைத்த மந்திரம் அறிந்த கவிஞன் இவன்.
மானே, தேனே, பொன்மானே என்று பெண்களை வர்ணித்து வந்த கவிஞர்கள் மத்தியில், “காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம், மாதங்களில் அவள் மார்கழி, மலர்களிலே அவள் மல்லிகை” என்று இலக்கிய நெடியோடு இதயம் தொட்டுச் சென்ற இணையற்ற கவிஞன் இவன்.
ஆத்திச்சூடி பாடித் தந்த அவ்வைக்கே அழகு தமிழில் ஆன்மிகப் பாடல் தந்து ஆச்சர்யப் படுத்தியவர் இவர். “திருவிளையாடல்” திரைப்படத்தில் வந்த இவரது கவி விளையாடல்களில் ஒன்றுதான் “ஒன்றானவன் உருவில் இரண்டானவன், உருவான செந்தமிழில் மூன்றானவன், நன்றான வேதத்தில் நான்கானவன், நமச்சிவாய என ஐந்தானவன், இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன், இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன், சித்திக்கும் பொருள்களில் எட்டானவன், தித்திக்கும் நவரச வித்தானவன், பத்தானவன் நெஞ்சில் பற்றானவன், பன்னிரு கை வேலவனைப் பெற்றானவன்” என்று பரம்பொருளை வரிசைப் படுத்திப் பாடி நம்மை பரவசப்படுத்திச் சென்ற பைந்தமிழ் கவிஞன் இவன்.
நகைச்சுவைப் பாடல்களில் கூட நல்ல பல கருத்துக்களை நயம்பட கூறிச் செல்வதில் இவருக்கு நிகர் இவரே. “வரவு எட்டணா செலவு பத்தணா, அதிகம் ரெண்டனா கடைசியில் துந்தணா துந்தணா…” என்ற இவரது இந்தப் பாடல் மாதச் சம்பளம் பெறும் மத்திய தர வர்கத்தினருக்கு இன்றும் கூட பொருந்திப் போகும் ஒரு மந்திரப் பாடல் என்றால் அது மிகையன்று.
காதல், சோகம், வீரம், விரக்தி, வேதனை, ஏமாற்றம், சோதனை, பக்தி என இவர் பாடாத பாடல்களே இல்லை எனும் அளவிற்கு மனித வாழ்வு மொத்தத்தையும் தனது பாட்டிற்குள் அடைத்துச் சென்ற இந்த சிறுகூடல்பட்டி சித்தர், “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்று பாடி மரணத்தையும் வென்று, மனித மனங்களில் இன்றும் தனது படைப்புகளால் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மாபெரும் கவிமகன். கவியரசர் கண்ணதாசனின் நினைவு நாளான இன்று அவரது திரையிசைப் பாடல்கள் என்ற தேன்கிண்ணத்தில் ஒரு சில துளிகளை நாம் நினைவு கூர்ந்து சுவைத்ததில் பெருமை கொள்வோம்.