தொடர்ந்து குத்து பாடல் வாய்ப்பு - மறுக்கும் தமன்னா | உண்மையிலேயே பஹத் பாசிலுக்கு தான் அந்த தைரியம் உண்டு : நடிகை ஊர்வசி புகழாரம் | கமலுக்கான கதையை மோகன்லால் - மம்முட்டி படத்திற்கு பயன்படுத்தவில்லை : இயக்குனர் விளக்கம் | மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | பெஞ்சல் புயல் : ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் | சூர்யா 45வது பட படப்பிடிப்பில் இணைந்தார் த்ரிஷா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம் | 'ஒரு பெண் போல சண்டை செய்' - சமந்தாவின் பதிவு யாருக்காக? | தமிழகத்தில் ஒரு கோடி பேர் பார்த்த 'அமரன்' | புஷ்பா 2 பட குழுவுக்கு நன்றி தெரிவித்த சாம் சி.எஸ் |
சினிமாவில் கிருஷ்ணர் வேடங்களில் அதிகம் நடித்தவர் யார்? என்று கேட்டால் என்.டி.ராமராவ் என்று பளிச்சென்று சொல்லிவிடுவார்கள். அவர் 17 படங்களில் கிருஷ்ணராக நடித்தார். ஆனால் அவருக்கும் முன்பாக 11 படங்களில் கிருஷ்ணராக நடித்தவர் செருகளத்தூர் சாமா. இயல்பாகவே தெய்வீக முகம் கொண்ட அவரைத்தான் கிருஷ்ணர் வேடத்திற்கு அழைப்பார்கள். அவருக்காக காத்திருந்த படங்களும் உண்டு.
தஞ்சாவூர் மாவட்டம், குடவாசலை அடுத்த செருகளத்தூரின் மிராசுதார் வைத்தியநாத ஐயரின் முதல் மகனாக 1904ம் ஆண்டு பிறந்தார். 5 வயதிலேயே தாயை இழந்ததால், தஞ்சை நகரத்தில் தாய்மாமாவின் வீட்டில் வளர்ந்தார். அங்கே பள்ளி இறுதி வகுப்பையும் கர்நாடக சங்கீதத்தையும் கற்றுக்கொண்டார். இயற்கையிலேயே கலை ஆர்வம் கொண்ட சாமா, 'பாகவத மேளா' நாடகத்தில் நடித்து வந்தார்.
பின்னர் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னை வந்தார். ஸ்டூடியோ பணியாளராக, ஒப்பனை கலைஞராக பணியாற்றி வாய்ப்பு தேடினார். கிடைக்காததால் சென்னையில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப்பில் கிளார்க்காக வேலைக்கு சேர்ந்தார். அந்த கிளப்புக்கு அடிக்கடி வரும் சிவகங்கை நாராயணன் என்ற ஸ்டூடியோ உரிமையாளர் சாமாவை 'ஸ்ரீனிவாச கல்யாணம்' படத்தில் நாரதராக அறிமுகப்படுத்தினார். பின்னர் திரௌபதி வஸ்திராபகரணம் (1934) திரைப்படத்தில் கிருஷ்ணனாக வேடமேற்று நடித்தார். தொடர்ந்து மாயா பஜார் (1935), கருடகர்வ பங்கம், பாமா பரிணயம், சிந்தாமணி ஆகிய படங்களிலும் கிருஷ்ணன் வேடத்திலேயே நடித்தார். பல படங்களில் நடித்த சாமா சொந்தமாக படம் தயாரித்தார் அதுவே அவரது வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது. அவர் தயாரித்த படங்கள் வெற்றி பெறாததால் இருந்த பொருள் அனைத்தையும் இழந்தார்.
இதனால் சாப்பிடவும், வாழவும் உதவித் தொகை கேட்டு மெட்ராஸ் ஸ்டேட் சங்கீத நாடக சங்கத்தில் விண்ணப்பித்தார். அந்த உதவி அவரை வந்தடையும் முன்பே சாமா காலமானார்.