சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, பட்டாசு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படம் 'கருடன்'. இதில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரிபிரியன், பிரிகிடா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்தர் ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் தயாரித்திருக்கிறார். வருகிற 31ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜய் சேதுபதி பேசியதாவது: யாராவது ஒருவர் வெற்றி பெற்று விட்டால் அவரது தொடக்க காலகட்டத்தில் தான் முன்னேறுவதற்கு ஊக்கமளிப்பார்கள். அதன் பிறகு மறந்து விடுவார்கள். ஆனால் சூரி நடிகராக அறிமுகமாகி இந்த அளவிற்கு உயர்ந்திருப்பது பெரிய சாதனை தான். காமெடியனாக இருக்கும்போது ஒரு காட்சியை கொடுத்தால்.. அதை அவருடைய கோணத்தில் உள்வாங்கி எப்படி திரையில் தோன்றி சிரிக்க வைப்பது என யோசித்து.. அந்தக் காட்சியின் ஏற்ற இறக்கங்களை கணித்து அதன் பிறகு இயக்குநருடன் பேசி நடிப்பது என்பது ஒவ்வொருவரும் பயன்படுத்தும் ஒரு உத்தி.
நானும், சூரியும் ஒரு சில படங்களில் மட்டும் தான் இணைந்து நடித்திருக்கிறோம். ஒரு படத்தில் காமெடிக்காக மட்டுமே யோசித்து நடித்த நடிகர். அதில் பெற்ற பயிற்சியை மனதில் வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு கதையின் நாயகனாக நடிக்க வேண்டும் என விரும்புகிறார். இதற்காக சூரியை பாராட்டுகிறேன். விடுதலை படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஒரு படம் நடித்திருக்கிறார். தொடர்ந்து அவர் பல உயரங்களை தொடுவார். இதற்கு இந்த படத்தின் முன்னோட்டத்தில் இடம் பிடித்த இயற்கையும் கடவுளும் அவருக்கு துணையாக இருக்கும் என்ற வசனங்களே சான்று. அவருடைய அடுத்தடுத்த படங்களும் அதற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. சூரியைப் நான் ரசிக்கிறேன். நம் மண்ணுக்கேற்ற முகம். கருப்பான அழகன். மேலும் மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன். என்றார்.
சிவகார்த்திகேயன் பேசியதாவது: சூரி உண்மையிலேயே எனக்கு அண்ணன் தான். அவரை எப்போதும் ஆத்மார்த்தமாக அண்ணன் என்றுதான் அழைப்பேன். அவரும் என்னை எப்போதும் ஆத்மார்த்தமாக தம்பி என்று தான் அழைப்பார். இது சினிமாவை கடந்த நட்பு. சூரியை முதன்முதலாக கதையின் நாயகனாக நீங்கள் நடிக்கலாம் என்று சொல்லி, அதற்காக அவரிடம் கதையும் சொன்னது நான்தான். 'சீம ராஜா' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது கிடைத்த இடைவெளியில் நீங்கள் ஏன் கதையின் நாயகனாக நடிக்க கூடாது? என கேட்டேன். அப்போது அதற்கு சிரித்துக் கொண்டே மறுப்பு தெரிவித்தார். அதன் பிறகு ஒரு நாள் என்னை சந்தித்து 'வெற்றிமாறன் இயக்கத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறேன்' என்றார். உடனே வாழ்த்துக்கள் தெரிவித்தேன். வெற்றிமாறன் படத்தில் நடித்தால், உங்களது திரையுலக பயணத்திலேயே பெரிய திருப்புமுனை ஏற்பட்டுவிடும் என்று சொன்னேன்.
அப்போது படத்தின் கதை என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் சூரியின் நடிப்பு திறமை பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஏனெனில் அவருடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அவருடன் நிறைய நேரம் செலவழித்து இருக்கிறேன். காமெடியாக நடிக்கும் ஒருவரால் நிச்சயமாக உணர்வுபூர்வமாக நடிக்க முடியும். இதனால் காமெடியாக நடிக்கும் நடிகர்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். இதற்கு சிறந்த உதாரணம் சூரி அண்ணன்.
சூரிக்கு 'விடுதலை' படத்தின் மூலம் புதிய அடையாளத்தை கொடுத்திருக்கிறார் வெற்றிமாறன் . நாங்கள் தயாரித்திருக்கும் 'கொட்டுகாளி' படத்தில், சிறிதளவு கூட குறையாமல் அதற்கு ஒரு படி மேலே தான் சூரியை பயன்படுத்தி இருக்கிறோம் என நான் நம்புகிறேன். 'கருடன்' படத்தில் சூரி ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியாக நடித்திருக்கிறார். அவர் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பது புதிதல்ல. ஏனெனில் எப்போதும் அவர் உடற்பயிற்சி உடற்பயிற்சி என அந்த மனநிலையில் தான் இருப்பார். அதனால் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதற்கு அவர் எப்போதோ தன்னை தயார் படுத்திக் கொண்டு விட்டார்.
இப்போது அவரை தேடி அதற்கான கதைகள் வந்து கொண்டிருக்கிறது. இப்போது நடிகர் சூரி 'இனி ஹீரோவாகத்தான் நடிப்பேன்' என்பதில் தெளிவாக இருக்கிறார். நிறைய நேரம் இன்ஸ்டாகிராமில் தனக்கான கதாநாயகியைத் தேடிக் கொண்டிருக்கிறார். நானும் சூரியைப் போல் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான வாய்ப்பு விரைவில் சாத்தியமாகும் என நம்புகிறேன் என்றார்.