சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் யதா சத்யநாராயணா இயக்கி உள்ள படம் 'ரஸாக்கர்'. பாபி சிம்ஹா, வேதிகா, ஜான் விஜய், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், ஐதராபாத் நகரில் உண்மையில் நிகழ்ந்த, மறைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வை, அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் வேதிகா பேசியதாவது: இந்தப் படத்தில் நடிக்க என்னை அழைத்தபோது எனக்கே உண்மையான வரலாறு தெரியாது. ஐதராபாத் மாநிலத்திற்கு 1948ல் தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆனால் அது பலருக்கு தெரியாது. எனக்குமே தெரியாது. அந்த வரலாற்றின் உண்மையைச் சொல்லும் படத்தில் நானும் இருப்பது பெருமை. வரலாற்றுப் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நிஜத்தில் வாழ்ந்தவர்களை மீண்டும் கொண்டு வருவது என்பது சவால் நிறைந்தது.
நம் சுதந்திர வாழ்க்கைக்காக எத்தனை மனிதர்கள் தியாகம் செய்துள்ளார்கள், போராடியிருக்கிறார்கள் அவர்களின் கதையை இந்தப் படம் சொல்லும். தயாரிப்பாளர் குடூர் பிரம்மாண்டமாக இப்படத்தை எடுத்துள்ளார். எந்த மொழி படாக இருந்தாலும் ஆதரவு தரும் தமிழ் ரசிகர்கள் இந்த படத்திற்கும் ஆதரவு தர வேண்டும். தமிழ் ரசிகர்கள் எனக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள். இப்போதும் இருக்கிறார்கள். என்றார்.