சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த போது நடிகர் சங்கக் கடன்களை அடைத்ததில் பெரும் பங்காற்றியவர் மறைந்த நடிகர் விஜயகாந்த். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவும் பல நடிகர்கள், நடிகைகள் வரவில்லை. அது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதன்பின் சிலர் அவரது நினைவிடத்திற்கும், வீட்டிற்கும் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். சினிமா ரசிகர்களிடையே இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜனவரி 19ம் தேதி சென்னை, காமராஜர் அரங்கில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்திற்கு இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும்படி நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அதன் தலைவர் நாசர் வீடியோ ஒன்றின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். நாளை நடைபெற உள்ள இந்த இரங்கல் கூட்டத்தில் அனைத்து நடிகர்களும், நடிகைகளும் கலந்து கொள்வார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் விஜயகாந்த் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். விஜயகாந்த் நினைவிடத்திற்கும் வீட்டிற்கும் சென்று சரத்குமார், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், ஆர்யா, ராகவா லாரன்ஸ், ஜெயம் ரவி, சசிகுமார், அருண் விஜய் அஞ்சலி செலுத்தினார்கள். இந்தக் கால முன்னணி நடிகைகள் யாரும் எங்குமே சென்று அஞ்சலி செலுத்தவில்லை. நடிகர் அஜித் இதுவரையில் ஒரு இரங்கல் அறிக்கை கூட வெளியிடவில்லை. விஜயகாந்த் குடும்பத்தினரிடம் போனில் இரங்கல் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளும், விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களாக இருந்த சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுதான் நாசர் தலைமையிலான அணி நடிகர் சங்க நிர்வாகத்தைக் கைப்பற்றியது. அதனால், சரத்குமார், ராதாரவி தங்கள் பகையை மறந்து வருவார்களா என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில முக்கிய நடிகர்கள் விஜயகாந்த் இறுதி நிகழ்விலும், சிலர் அவரது வீட்டிற்கும் சென்று அஞ்சலி செலுத்தியதால் இந்த இரங்கல் கூட்டத்தைத் தவிர்ப்பார்களா என்பதும் நாளை தெரியும். நடிகர் சங்கம் நடத்தும் எந்த நல்லது, கெட்டது நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் சிலர் ஒதுங்கியே இருப்பார்கள், அவர்கள் நாளை வருவார்களா ?.
ஒரு மூத்த நடிகர், நடிகர் சங்க கடனை அடைத்த ஒரு தலைவர், மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட ஒரு நடிகரின் இரங்கல் கூட்டத்திற்கு எந்தவித வேறுபாடும் இல்லாமல் அனைத்து நடிகர்களும், நடிகைகளும் வந்து கலந்து கொண்டு இந்த இரங்கல் கூட்டத்திலாவது அஞ்சலி செலுத்துவார்களா ?.