ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா |
1970ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி தீபாவளி வந்தது. அந்த நாளில் ஜெமினிகணேசன், சரோஜா தேவி நடித்த 'மாலதி', சிவாஜிகணேசன் நடித்த இரண்டு படங்களான “எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம்” ஆகிய படங்கள் வெளிவந்தன.
அவற்றில் “எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம்” ஆகிய இரண்டு சிவாஜிகணேசன் படங்களும் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தன. “எங்கிருந்தோ வந்தாள்” படத்தை ஏசி திருலோகச்சந்தர் இயக்க, எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். சிவாஜி ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார்.
குல்ஷன் நந்தா எழுதிய 'பத்தர் கே ஹோந்த்' என்ற நாவல் 1963ல் 'புனர்ஜென்மா' என தெலுங்குத் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. அந்தப் படத்தை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ரீமேக் செய்து 'எங்கிருந்தோ வந்தாள்' படமாக எடுத்தார்கள்.
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த சிவாஜி ஒரு பெண்ணைக் காதலிக்க அந்தப் பெண் இறந்துவிடுகிறார். சிவாஜி மனநலம் பாதிக்கப்படுகிறது. மகனைப் பார்த்துக் கொள்ள நடனப் பெண்ணான ஜெயலலிதாவை அழைத்து வருகிறார் அப்பா மேஜர் சுந்தர்ராஜன். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
எம்எஸ் விஸ்வநாதன் இசையில் “ஒரே பாடல் உன்னை அழைக்கும்,நான் உன்னை அழைக்கவில்லை, சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே,” ஆகிய பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்.
அதே தினத்தில் வெளியான மற்றொரு படமான 'சொர்கக்ம்' படத்தை ராமண்ணா இயக்க எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். கேஆர் விஜயா, சிவாஜியின் ஜோடியாக நடித்திருந்தார். கல்லூரிப் படிப்பை முடித்த சிவாஜிக்கு பணம் சம்பாதிப்பதே லட்சியம் என நினைக்கிறார். பணக்கார நண்பன் சகவாசத்தால் மதுப்பழக்கத்துக்கும், புகை பழக்கத்துக்கும் அடிமையாகிறார். அதனால் அவரது குடும்ப வாழ்க்கையில் சிக்கல் வருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
இப்படத்தில் எம்எஸ்வி இசையில் இடம் பெற்ற, “பொன்மகள் வந்தாள், ஒரு முத்தாரத்தில், சொல்லாதே யாரும் கேட்டால், அழகு முகம்,” ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.
ஒரே நாளில் வெளிவந்த இந்த இரண்டு படங்களுமே 100 நாட்களைக் கடந்து ஓடின. இரண்டு படங்களுக்கும் வெற்றி விழாவை ஒரே மேடையில் கொண்டாடி கலைஞர்களுக்கு ஷீல்டுகளை வழங்கினார்கள்.
1967 தீபாவளி தினத்தில் சிவாஜிகணேசன் நடிப்பில் வெளியான “ஊட்டி வரை உறவு, இரு மலர்கள்” ஆகிய இரண்டு படங்களும் 100 நாட்களைக் கடந்து ஓடின. அதற்குப் பிறகு 1970ல் வெளியான 'எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம்” ஆகிய படங்களும் 100 நாட்கள் ஓடின. 1970ம் வருடத்தில் சிவாஜிகணேசன் நடித்து வெளியான படங்கள் 8. அதில் 4 படங்கள் 100 நாட்கள் ஒடின.
ஒரே நாளில் சிவாஜிகணேசன் நடித்து 17 முறை இது போல இரண்டு படங்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வேறு எந்த ஒரு நடிகரும் இப்படிப்பட்ட சாதனைகளை இதுவரை புரிந்ததில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.