'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
'நடிகர் பிரகாஷ்ராஜ், உரிய அனுமதி இன்றி பங்களா கட்டலாமா?' என கொடைக்கானல் தாலுகா, பேத்துப்பாறையில் இருந்து கடுமையான எதிர்ப்பு குரல் கிளம்பியுள்ளது.
கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர் கூட்டம், கடந்த 21ல் நடந்தது. அதில் பங்கேற்ற பேத்துப்பாறை, வில்பட்டி கிராமத்தை சேர்ந்த வாழை விவசாயி மகேந்திரன், ஆர்.டி.ஓ., ராஜாவிடம், 'நடிகர் பிரகாஷ் ராஜ் பங்களா, எப்படி அரசு அனுமதியின்றி கட்டப்பட்டது? அதிகாரிகள் எப்படி அனுமதித்தீர்கள்?' என, கேள்வி எழுப்ப, ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் ஆடிப் போயினர்.
மகேந்திரன் கூறியதாவது: கொடைக்கானலுக்கு, 10 கி.மீ., முன்னதாகவே இருக்கிறது பேத்துப்பாறை. பக்கத்தில் இருக்கும் கிராமம் வில்பட்டி. இயற்கை எழில் சூழ்ந்திருக்கும் இந்த கிராமத்தில் பங்களா கட்டி, இயற்கையை ரசிப்பதற்காக, சமீப காலமாக வெளியூர்களில் இருந்து பெரும் முதலாளிகள், இடங்களை வாங்கி போடுகின்றனர். அப்படித் தான், ஓராண்டுக்கு முன், நடிகர்கள் பாபி சிம்ஹாவும், பிரகாஷ் ராஜும், வில்பட்டி கிராமத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி, பங்களா கட்டி உள்ளனர்.
நடிகர் பாபி சிம்ஹா, தன் பங்களாவை ஒட்டி இருக்கும், 2 ஏக்கர் அரசு நிலத்தை, தன் எல்லைக்குள் கொண்டு வந்து ஆக்கிரமித்துள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ், தன் பங்களாவுக்கு உரிய அரசு அனுமதி, அதாவது பஞ்சாயத்தில், அனுமதி பெறவில்லை. ஆனால், அந்த பங்களாவுக்கு வணிக பயன்பாட்டுக்கான மின்சார அனுமதி கொடுத்துள்ளனர். லஞ்சம் கொடுத்து, உரிய பஞ்சாயத்து அனுமதி இல்லாமல், சட்டத்துக்கு புறம்பாக மின் அனுமதி பெற்றுள்ளார். அத்துடன், அருகில் இருக்கும் ரோட்டில் இருந்து, தன் பங்களாவுக்கு செல்ல, அரசு அனுமதியின்றி, பட்டா இடத்தில் ரோடு அமைத்துள்ளார். அது தனியார் நிலத்தில் அமைக்கப்பட்ட சாலை தான் என்றாலும், உரிய அரசு அனுமதி பெறவில்லை.
சாலையின் துவக்கத்தில், 'கேட்' போட்டு தடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், அந்த சாலை வழியாக தான், பிரகாஷ்ராஜ் பங்களாவுக்கு அருகில் இருப்பவர்கள், தங்கள் இடங்களுக்கு செல்ல வேண்டும். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பொது மக்களை திரட்டி, கோட்டாட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனுமதி பெறவில்லை
வில்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாக்கியலட்சுமி ராமசந்திரன் கூறியதாவது: வில்பட்டி பஞ்சாயத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் பெயரில் வாங்கப்பட்டுள்ள நிலத்தில், வணிக பயன்பாட்டுக்காக பங்களா கட்டப்பட்டது, எங்களுக்கு தெரியாது. பேத்துப்பாறை விவசாயி மகேந்திரன், ஆர்.டி.ஓ.,விடம் கேட்ட பின் தான், எங்கள் கிராம பஞ்சாயத்துக்குள் இப்படியொரு பங்களா கட்டப்பட்ட விபரம் தெரிய வந்துள்ளது.
பங்களா, எங்கள் பஞ்சாயத்து அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருக்கிறது. அதேபோல, அடிமனைக்கான ரசீதும் கொடுக்கப்படவில்லை. ஆவணங்களை பார்த்து விட்டு தான் சொல்கிறேன். அனுமதி பெறாத பங்களாவுக்கு எப்படி வணிக பயன்பாட்டுக்கான மின் இணைப்பு கொடுத்தனர் என்பதை, மின் வாரியம் தான் சொல்ல வேண்டும். அதேபோல, பஞ்சாயத்து பகுதியில், அவர்கள் சாலை அமைத்திருந்தால், அதுவும் தவறு தான். அது குறித்தும் பஞ்சாயத்துக்கு தகவல் இல்லை. இது தொடர்பாக, வருவாய் துறை தான் விசாரிக்க வேண்டும்.
வருவாய் துறையோ, மின் வாரியமோ, பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் மக்கள் நலனுக்காக, நியாயமான விஷயங்களை செய்து கொடுங்கள் என்று சொன்னால், அதை செய்வதில்லை. ஆனால், இப்படி, தனியாருக்கு சட்ட விரோதமாக சலுகைகள் செய்கின்றனர். நடிகர் பாபி சிம்ஹா பங்களா, தொடர்பான விதிமீறல்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
‛வரி ரசீது போதும்' - முருகேசன் (உதவி கோட்டப் பொறியாளர், மின் வாரியம், கொடைக்கானல்)
நடிகர் பிரகாஷ்ராஜ் பங்களாவுக்கு, தற்காலிக மின் இணைப்பு கேட்டு முறையாக விண்ணப்பித்துள்ளனர். வில்பட்டி பஞ்சாயத்துக்கு கட்டும் வரி ரசீது இணைக்கப்பட்டு உள்ளது. மின் வாரிய விதிகள்படி, தற்காலிக இணைப்புக்கு பஞ்சாயத்து வரி ரசீது இருந்தால் போதும்; கட்டட அனுமதி தேவையில்லை. பங்களா கட்டுமான பணிக்கு தான், இந்த இணைப்பு வாங்கி உள்ளனர். கட்டுமான பணி முடித்து, உரிய கட்டட அனுமதியோடு, மீண்டும் மின் வாரியத்தை அணுகினால், நிரந்தர மின் இணைப்பு வழங்கப்படும். யாராக இருந்தாலும், இது தான் நடைமுறை.
விசாரிக்கப்படும் - கோட்டாட்சியர், கொடைக்கானல்
விவசாயி மகேந்திரன், நடிகர் பிரகாஷ்ராஜ் பங்களா குறித்து சொல்லும் புகார் மிகவும் சீரியசானது. அதனால் தாசில்தாரை அழைத்து, விசாரிக்கச் சொல்லி உள்ளேன். நடிகர் பாபி சிம்ஹா பங்களா குறித்தும், இடம் ஆக்கிரமிப்பு குறித்தும் புகார் கூறப்பட்டது. இரண்டு புகார்கள் மீது விசாரிக்கப்படும். தேவையானால், சம்பந்தப்பட்ட இடங்கள் அளக்கப்படும். ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும்.
-- நமது நிருபர் -