‛அமரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் | ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கழுதை! களமிறங்கிய பீட்டா இந்தியா!! | ரஜினியின் ‛வேட்டையன்' ரிலீஸ் : படம் பார்த்த பின் தனுஷ் வெளியிட்ட பதிவு | ''என்னால முடியும்; ப்ரூவ் பண்ணி ஜெயிச்சு காட்டுவேன்'': நெப்போலியன் மகன் வீடியோ வெளியீடு | ரத்தன் டாடா தயாரித்த ஒரே படம் | டைட்டிலை கைப்பற்ற போராடும் ‛கேம் சேஞ்சர்' தயாரிப்பாளர் | விஜய் 69வது படம் தெலுங்கு படத்தின் ரீமேக்கா? | "பொங்கலுக்கு வேற லெவல் என்டர்டெயின்மென்ட்": அஜித் மேனேஜர் பகிர்ந்த புகைப்படம் வைரல் | நாளை வெளியாகும் 'நேசிப்பாயா' படத்தின் முதல் பாடல்! | மகேஷ் பாபு - ராஜமவுலி பட படப்பிடிப்பு எப்போது? |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தியேட்டர் அதிபரான தில் ராஜு தயாரிப்பில், விஜய் நடித்து அடுத்தமாதம் பொங்கலுக்கு வெளிவர உள்ள படம் 'வாரிசு'. இப்படத்தை 'வாரிசுடு' என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்து தமிழில் வெளியாகும் தினத்தன்றே தெலுங்கிலும் பெரிய அளவில் வெளியிட தில் ராஜு திட்டமிட்டுள்ளார். பல மாதங்களுக்கு முன்பே படத்தின் வெளியீடு பற்றி அறிவித்துவிட்டு தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானாவில் பல முக்கிய தியேட்டர்களுக்கு ஒப்பந்தம் போட்டுவிட்டார்.
தெலுங்கு சினிமாவின் முக்கிய ஏரியாக்களான நிஜாம், விசாகப்பட்டிணம் ஏரியாக்கள் கடந்த பல ஆண்டுகளாகவே தில் ராஜு கட்டுப்பாட்டில் உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோக்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா நடித்துள்ள தெலுங்குப் படங்கள் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ள அறிவிப்பை சில வாரங்கள் முன்னர்தான் வெளியிட்டனர்.
'வாரிசுடு' படத்திற்காக தில் ராஜு ஏற்கெனவே பல பெரிய முக்கிய தியேட்டர்களை ஒப்பந்தம் செய்துவிட்ட காரணத்தால் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்களுக்கு இரண்டாம் நிலை தியேட்டர்கள்தான் கிடைக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் படங்களை வாங்கிய வினியோகஸ்தர்களால் நல்ல தியேட்டர்களை தற்போது ஒப்பந்தம் செய்ய முடியவில்லை.
சில வாரங்களுக்கு முன்பு தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மூலமாக நேரடித் தெலுங்குப் படங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். அதன்பிறகு அந்த விவகாரம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துடன் பேசி முடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு விசாகப்பட்டிணம் வினியோகஸ்தர்கள் சார்பாக மீண்டும் ஒரு அறிக்கை வெளியானது. இதனால், மீண்டும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தெலுங்குத் திரையுலகத்தின் முக்கிய நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தான் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்களைத் தயாரித்து பொங்கலுக்கு வெளியிட உள்ளது. தில் ராஜுவுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் சில தெலுங்குத் தயாரிப்பாளர்களும் நெருக்கடி கொடுப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. விரைவில் முக்கிய தயாரிப்பாளர்கள் சிலர் தில் ராஜுவை அழைத்துப் பேச உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
'வாரிசுடு' படத்திற்கு ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியிட சிக்கல் ஏற்பட்டால் எதிர்காலத்தில் தெலுங்குப் படங்களை பான் இந்தியா படமாக வெளியிடுவதில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சிக்கல் உருவாகும் என தில் ராஜு தரப்பு தெரிவிக்கிறதாம். தெலுங்கில் அடுத்தடுத்து சில பான் இந்தியா படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கிலிருந்து வெளியாகும் பான் இந்தியா படங்களுக்கு தமிழகம், கர்நாடகாவில் நல்ல வரவேற்பும் வசூலும் கிடைக்கிறது. அதே சமயம் தமிழிலிருந்து தெலுங்கிற்குச் செல்லும் படங்களுக்கு அந்த அளவிற்கு வரவேற்பு கிடைப்பதில்லை. மாறாக அவர்கள் அப்படங்களை 'டிரோல்' செய்து எதிர்மறையான விமர்சனங்களை அதிகம் பரப்புகிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் 'பொன்னியின் செல்வன்'. இந்த ஆண்டில் இங்கு பெரும் வெற்றி பெற்ற 'விக்ரம்' படம் கூட தெலுங்கில் சரியாக ஓடவில்லை.
'வாரிசு' படத்திற்கு தெலுங்கில் கட்டுப்பாடுகள் விதித்தால், எதிர்காலத்தில் தெலுங்கிலிருந்து தமிழுக்கு வரும் படங்களுக்கும் இங்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என சில தமிழ்த் தயாரிப்பாளர்கள் இப்போதே எதிர்ப்புக் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்களாம். அடுத்த சில தினங்களில் 'வாரிசு' தெலுங்கு விவகாரம் இன்னும் அதிகமான சூட்டைக் கிளப்பும் என்பது டோலிவுட் தகவல்.