நடிகர் சிவகுமார் தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்ற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி வருகிறார். இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடந்தது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா 10,000வீதம் மொத்தம் 2,50,000 வழங்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழைமாணவர்களுக்கான, தாய்தமிழ் பள்ளிக்கு ஒரு லட்சமும், மூத்த ஓவிய கலைஞர் ராமுவுக்கு 50 ஆயிரமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், நடிகர் கார்த்தி பேசியதாவது: அகரம் பவுண்டேஷன் கல்வி பணிகளுக்கான விதை 43 ஆண்டுகளுக்கு முன்னர் விதைக்கப்பட்டது. ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை 43 ஆண்டுகளாக இளம் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருவதன் தொடர்ச்சியே அகரம். நல்ல கல்வி அறிவும் நற்சிந்தனைகளும் சமூக பொறுப்புகளும் நிறைந்த இளம் வயதினரை உருவாக்குவதன் மூலம் சமூக குறைபாடுகளை காலப்போக்கில் களைய முடியும். இளம் மனங்களை கட்டமைப்பதில் கல்வி முக்கியப் பங்காற்றுகிறது என்பதை அகரம் பணிகளில் மூலம் அறிந்திருக்கிறோம்.
இளம் பருவத்தினரில் ஒரு சிலரது வாழ்க்கை கனவுகளை நனவாக்கும் முயற்சியாய் ஆரம்பிக்கப்பட்ட அகரம் விதைத் திட்டம் கடந்த 13 ஆண்டுகளில் 4750 மாணவ மாணவியர்க்கு கல்லூரி கல்வி வாய்ப்பை வழங்கி இருக்கிறது. சரியான சமமான கல்வி வாய்ப்பிற்கான ஒத்த கருத்துடைய மனிதர்கள், அமைப்புகளுடன் இணைந்து அகரம் பணிகளை முன்னெடுத்து வருகிறோம்.
அகரம் தொடங்கப்பட்ட பொழுதும்; விதைத் திட்டத்தின் பதிமூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இன்றைய பொழுதும் ஒவ்வொரு பணிகளில் உச்சபட்ச வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்கிறோம். கல்வியின் மூலம் நிரந்தர, நீடித்த மாற்றங்கள் உருவாக முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் செயல்பட்டு வருகிறது அகரம்.
2020ம் ஆண்டு தொடங்கி கடந்த மூன்று கல்வி ஆண்டுகளிலும் நிகழ்ந்த அசாதாரண சூழல் விளிம்பு நிலை மக்களின் கல்வி வாய்ப்பை இன்னும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. ஊரடங்கு நடைமுறைகளால் வேலைக்கு சென்று தினக்கூலி பெறமுடியாத குடும்பங்களுக்கு இணைய வழி கல்வி கூடுதல் சுமையை உருவாக்கியது.
40 ஆண்டுகளாக எங்கள் தந்தை தொடர்ந்து நடத்தி வந்த இந்த குடும்ப விழாவை கடத்த இரண்டு ஆண்டுகள் நடத்திட இயலவில்லை. இருப்பினும், களங்களின் யதார்த்தமே அகரத்தின் பணிகளை தீர்மானிக்கிறது. அசாதாரண சூழலில் எளிய குடும்பங்கள் எதிர்கொண்ட சிரமங்களை சிறு அளவிலாவது குறைத்திடும் பணிகளை முன்னெடுத்திருந்தோம்.
ஊரடங்கு காலம், நோய் அச்சம் இயல்பு வாழ்வை புரட்டி போட்டிருந்த சூழலிலும் அகரம் தன்னார்வலர்கள் மேற்கண்ட பணிகளை தொடர்ந்திருந்தனர். அகரம் என்றாலே அதன் அர்பணிப்புமிக்க தன்னார்வலர்களே. அவர்கள் ஒவ்வொருவருக்கும் இத்தருணத்தில் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். பெருந்தொற்று நோய் காலத்தை தொடர்ந்து மாணவர்களிடம் கவன சிதறல்கள் அதிகரித்து இருக்கிறது. மாணவர்களின் கல்வி தொடர்ச்சியில் பாதிப்புகள் இன்னும் தொடர்கின்றன.
இவ்வாறு கார்த்தி பேசினார்.