''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
விழுப்புரத்தில் 1916ல், காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ல் பிறந்தவர் ப.நீலகண்டன். சிறு வயது முதல் கலைகள் மீது ஆர்வம் கொண்ட இவர் தனது பட்டப்படிப்பை முடித்து திருச்சியில் "ஜீவமணி" என்ற பத்திரிகையில் ஒரு பத்திரிகையாளராக தனது முதல் பணியை ஆரம்பித்தார்.
காங்கிரஸ்காரராக இருந்த இவர், எழுத்திலும், படிப்பிலும் ஏற்பட்ட ஆர்வத்தால் நாடகங்களை இயக்கினார். இவர் எழுதிய "முள்ளில் ரோஜா" என்ற நாடகம், அன்றைய நாடக உலகில் பிரபலமான டிகேஎஸ் சகோதரர்களால் விரும்பப்பட்டு அரங்கேற்றமானது. இதனைத் தொடர்ந்து நாடக உலகில் இவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின.
இவரின் "தியாக உள்ளம்" நாடகத்தை பார்த்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அதை "நாம் இருவர்" என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார். தொடர்ந்து, ஏ.வி.எம்., நிறுவனத்தின் கதை இலாகாவில் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து ஏவிஎம்மின் "வாழ்க்கை" திரைப்படத்தின் கதையையும் ப நீலகண்டனே எழுதினார். டிஆர் ராமசந்திரன், வைஜெயந்திமாலா நடித்த இத்திரைப்படம் வெள்ளி விழா கண்டது. அண்ணாதுரையின், ஓர் இரவு திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக வெள்ளித் திரைக்கு அறிமுகமானார். மேலும் படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
தொடர்ந்து சிவாஜி கணேசன், பத்மினி, டிஆர் ராமசந்திரன் நடிப்பில், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான பிஆர் பந்துலுவின் "பத்மினி பிக்சர்ஸ்" சார்பில் வெளிவந்த "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" திரைப்படத்தையும் இயக்கினார். மீண்டும் சிவாஜி கணேசன் நாயகனாக நடிக்க 1955ல் வெளிவந்த "முதல் தேதி" திரைப்படத்தையும் இயக்கி வெற்றிப் படமாக்கினார்.
எம்.ஜி.ஆருடன், சக்கரவர்த்தி திருமகள் படத்தில் இணைந்த ப.நீலகண்டன், நல்லவன் வாழ்வான் பட இயக்கத்தில் நண்பரானார். சிவாஜி கணேசனோடு இணைந்து "அம்பிகாபதி" படத்தையும் இயக்கினார். 1937ம் ஆண்டு இயக்குநர் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் எம்கே தியாகராஜ பாகவதர் நடித்து வெளிவந்த "அம்பிகாபதி" திரைப்படத்தின் மறுபதிப்பாக இத்திரைப்படம் ப நீலகண்டனின் இயக்கத்தில் வெளிவந்தது. இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன்னரே இத்திரைப்படத்தில் நடித்திருந்த கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் காலமானார். 1958ல் சிவாஜி கணேசன், சந்திரபாபு நடித்து, இயக்குநர் பிஆர் பந்துலு தயாரித்து இயக்கியிருந்த "சபாஷ் மீனா" திரைப்படத்திற்கு ப நீலகண்டன் தான் வசனம் எழுதியிருந்தார் என்பது பலருக்குத் தெரியாது.
1961ல் மீண்டும் எம்ஜிஆரை நாயகனாக்கி "திருடாதே" திரைப்படத்தை இயக்கி அதையும் மிகப் பெரிய வெற்றிப் படமாக்கிய ப நீலகண்டன், அதே ஆண்டில் எம்ஜிஆர் நடித்து, வெளிவந்த "நல்லவன் வாழ்வான்" திரைப்படத்தை தானே தயாரித்து, இயக்கியுமிருந்தார். இதனைத் தொடர்ந்து "கொடுத்து வைத்தவள்", "பூம்புகார்", "பூமாலை", "ஆனந்தி", "அவன் பித்தனா" ஆகிய படங்களை இயக்கி வந்த ப நீலகண்டன், 1967ல் எம் ஜி ஆரின் துப்பாக்கி சூடு விபத்திற்குப் பின் வெளிவந்த "காவல்காரன்" திரைப்படத்தை இயக்கியதிலிருந்து "கணவன்", "கண்ணன் என் காதலன்", "மாட்டுக்கார வேலன்", "என் அண்ணன்", "குமரிக் கோட்டம்", "நீரும் நெருப்பும்", "ஒரு தாய் மக்கள்", "சங்கே முழங்கு", "ராமன் தேடிய சீதை", "நேற்று இன்று நாளை", "நினைத்ததை முடிப்பவன்", "நீதிக்குத் தலைவணங்கு" என 1967 தொடங்கி 1976 வரை 10 ஆண்டுகள் தொடர்ந்து எம்ஜிஆர் படங்களை மட்டுமே இயக்கி வந்தார்.
எம்ஜிஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்" மற்றும் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" ஆகிய படங்கள் எம்ஜிஆர் இயக்கிய படங்களாக இருந்தாலும் இத்திரைப்படங்களில் எம்ஜிஆருக்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர் இயக்குநர் ப நீலகண்டன். அந்த நன்றிக்காக படத்தின் டைட்டிலில் நீலகண்டனுக்கு தனது நன்றியினை தெரிவித்திருப்பார் எம்ஜிஆர்.
எம்.ஜி.ஆரை மக்கள் திலகமாக்கிய திரைப்படங்களை இயக்கிய இவர், 1992ல் இதே நாளில்(செப்டம்பர் 3) தன், 76வது வயதில் மறைந்தார். எம்.ஜி.ஆர்., அன்புடன் அளித்த, 'கலைத்துறை அமைச்சர்' பதவியை, உயரிய பண்பால் தவிர்த்த ப.நீலகண்டனின் நினைவு தினம் இன்று.
சாதாரண ஒரு நாடக கலைஞராக தனது கலை வாழ்க்கையை துவக்கி தனது கதை வசனங்களாலும், இயக்கத்தாலும், அனைவரது இதயங்களையும் வென்றெடுத்த ப நீலகண்டன், எம்ஜிஆர் என்ற ஒரு மிகப் பெரிய ஆளுமையை வைத்து பல படங்களை இயக்கிய இயக்குநர்களின் பட்டியலில் தனி இடம் பிடித்து 17 படங்கள் வரை இயக்கி தென்னிந்திய திரைவானில் ஒரு சரித்திரம் படைத்திருக்கின்றார் என்றால் அது மிகையன்று.