நடிகர் சங்க தேர்தல் : நாசர் - விஷால் அணி வெற்றி ; தில்லு முல்லு என எதிரணியினர் குற்றச்சாட்டு
20 மார், 2022 - 05:49 IST
சென்னை : மூன்றாண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட நடிகர் சங்க தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை இன்று(மார்ச் 20) நடந்தது. இதில் நாசர் தலைமையில் போட்டியிட்ட விஷால், கார்த்தி, கருணாஸ் உள்ளிட்ட பாண்டவர் அணியினர் வெற்றி பெற்றனர். அதேசமயம் இந்த ஓட்டு எண்ணிக்கையில் தில்லு முல்லு நடந்திருப்பதாக கூறி எதிரணியனரான பாக்யராஜ் அணி குற்றம்சாட்டி உள்ளனர்.
வழக்குகடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியினரும், நாசர் தலைமையில் பாண்டவர் அணியினரும் போட்டியிட்டனர். ஆனால் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தலை செல்லாது என்ற அறிவித்த நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கைக்கும் தடை விதித்தது. இதை தொடர்ந்து இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தொடர்ந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தேர்தல் செல்லும் என்று அறிவித்து வாக்குகளை எண்ணவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஏழுமலை என்ற துணை நடிகர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
மூன்றாண்டுகளுக்கு பின் ஓட்டு எண்ணிக்கைஇந்த நிலையில் இன்று (மார்ச் 20) சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இந்த ஓட்டு எண்ணிக்கை தேர்தல் அதிகாரி, நடிகர் சங்க தனி அதிகரி மற்றும் போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாண்டவர் அணி வெற்றிநடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் வெற்றி பெற்றுள்ளார். இந்த அணியை சேர்ந்த பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி, துணை தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன்(1612 ஓட்டுகள்), கருணாஸ்(1605 ஓட்டுகள்) ஆகியோரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
முன்னதாக ஓட்டு எண்ணிக்கையின் போது பாக்யராஜ் தலைமையிலான அணியினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். பதிவான ஓட்டுகளை விட ஓட்டு எண்ணிக்கையின் போது கூடுதல் ஓட்டு உள்ளதாக பாக்யராஜ் அணியினர் குற்றம் சாட்டினர். இதனால் ஓட்டு எண்ணிக்கை சிறிதுநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தேர்தல் அதிகாரி ஏற்காததால் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடத்திலிருந்து வெளியேறினர். இந்த தேர்தலில் 100க்கும் அதிகமான ஓட்டுகள் கூடுதலாக உள்ளதாகவும், ஓட்டு எண்ணிக்கையில் தில்லு முல்லு நடந்திருப்பதாகவும் பாக்யராஜ் அணியினர் குற்றம் சாட்டினர்.
அணியினர் பெற்ற ஓட்டு எண்ணிக்கை விபரம்:
தலைவர்கள்:
திரு: நாசர்: - 1701
திரு: பாக்கியராஜ்: - 1054
துணை தலைவர்கள்:
திரு: கருணாஸ்: -1605
திருமதி: குட்டி பத்மினி: - 1015
திரு: பூச்சி முருகன்: - 1612
திரு: உதயா:- 973
பொருளாளர்:
திரு: Si. கார்த்தி:-1827
திரு: பிரசாந்த்:- 915
பொது செயலாளர்;
திரு: ஐசரி கணேஷ்:1032திரு: விஷால்: -1720