கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்
29 அக், 2021 - 02:56 IST
பெங்களூரு : பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்(46) திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் காலையில் உடற்பயிற்சி செய்ய ஜிம்மிற்கு சென்றார். அங்கு உடற்பயிற்சி செய்தபோது திடீரென மயக்கம் அடைந்து விழுந்தார். இதையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது.
புனித் ராஜ்குமாரின் சினிமா பயணம்
"அன்னாவரு" என்று கன்னட ரசிகர்களால் அன்பாகவும், மரியாதையாகவும் அழைக்கப்பட்ட கன்னட சூப்பர் ஸ்டார் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் கடைசி மகனும், கன்னட திரையுலகின் முன்னணி கதாநாயகனுமான புனித் ராஜ்குமார் 1975ம் ஆண்டு மார்ச் 17ம் சென்னையில் பிறந்தார். இவரது நிஜப்பெயர் லோஹித். புனித்திற்கு ஆறு வயது இருக்கும் போது, அவரது குடும்பம் மைசூருக்கு குடிபெயர்ந்தது. 1976 ஆம் ஆண்டு தனது தந்தையின் நடிப்பில் வெளிவந்த "பிரேமதா கனிகே" என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். தொடர்ந்து நடிகர் ராஜ்குமாரின் 15 படங்களில் குழந்தைநட்சத்திரமாக நடித்து வந்தார். குறிப்பாக 7-8 மாத குழந்தையாக இருந்த சமயத்தில் கூட கைக்குழந்தையாக படங்களில் தோன்றி உள்ளார்.
2002 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான "அப்பு" திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். அப்போது முதல் ரசிகர்கள் இவரை செல்லமாக அப்பு என்றே அழைக்க தொடங்கினர். தொடர்ந்து கதாநாயகனாக இவர் நடித்து வெளிவந்த "அபி", "வீரகன்னடிகா", "மௌரியா", "ஆகாஷ்", "அஜய்", "அரசு" ஆகிய திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக மிகப் பெரிய வெற்றி பெற்று கன்னட திரைவானில் தவிர்க்க முடியா முன்னணி நாயகர்களில் ஒருவராக உருவெடுத்தார்.
20 படங்களுக்கும் மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான "தேசிய விருது" 1985 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த "பெட்டட ஹவு" என்ற திரைப்படத்திற்காக பெற்றார். கன்னட அரசின் சிறந்த நடிகருக்கான விருது, பிலிம்பேர் விருது போன்ற விருதுகளையும் வென்றுள்ளார். பாடகர், தயாரிப்பாளர், சின்னத்திரை தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர். சின்னத்திரையில் கன்னட கோடீஸ்வரன்
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி உள்ளார்.
இந்நிலையில் இவரது திடீர் மரணம் கன்னட திரையுலகினர், ரசிகர்கள் இடையே கடும் அதிருப்தியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. புனித் ராஜ்குமாருக்கு அஸ்வினி ரேவாநத் என்ற மனைவியும், திரிதி, வந்திதா என்ற மகள்களும் உள்ளனர். புனித் ராஜ்குமாரின் சகோதரர்களான சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோரும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.
கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அவரது அதிர்ச்சி மரணத்தை கேட்டு தங்களது இரங்கலை சமூகவலைதளங்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.
தந்தை வழியில் கண்தானம்கன்னடத்தில் 49 படங்களில் நடித்துள்ள புனித் ராஜ்குமார், தனது கண்களை தானம் செய்துள்ளார். தந்தை ராஜ்குமார் போலவே இவரும் கண்களை தானமாக கொடுத்துள்ளார்.
புனித் ராஜ்குமாரின் புகைப்பட தொகுப்பு