மலையாள சினிமாவின் முன்னணி குணசித்ர நடிகர் பைஜு சந்தோஷ். நேற்று முன்தினம் நள்ளிரவு இவர் திருவனந்தபுரம் வெள்ளயம்பலம் பகுதியில் மதுபோதையில் காரை ஓட்டிச் சென்றார். இதனால் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதோடு சிக்னலில் இடித்தபடி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் சேதமடைந்தது. மேலும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருவனந்தபுரம் மியூசியம் போலீசார் விரைந்து வந்து காயமடைந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மதுபோதையில் இருந்த நடிகர் பைஜூ சந்தோஷை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது மதுபோதையில் இருந்ததால் அவரை பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ரத்த பரிசோதனைக்கு மறுத்து விட்டார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து பைஜூ சந்தோஷை கைது செய்தனர். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சொந்த ஜாமீனில் அவரை போலீசார் விடுவித்தனர்.