மலையாளத்தில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் தொடர்ந்து மிகப்பெரிய வெற்றிகளை பெற்று வருகின்றன. கேரளாவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் கூட இந்த படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்படும் குருவாயூர் அம்பல நடையில் திரைப்படம் வரும் மே 16ம் தேதி வெளியாக இருக்கிறது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் பிரித்விராஜ் வில்லத்தனம் கலந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் கதாநாயகனாக மின்னல் முரளி இயக்குனர் பஷில் ஜோசப் நடித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஜெய ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் விபின் தாஸ் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். நடிகர் யோகி பாபு இந்த படத்தில் நடித்ததன் மூலம் முதன்முறையாக மலையாளத் திரை உலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.