தினமலர் விமர்சனம் » புதுமுகங்கள் தேவை
தினமலர் விமர்சனம்
2012 டிசம்பர் இறுதிவாரத்தில் திரைக்கு வந்ததால் கடந்த ஆண்டின் சிறந்த படங்கள் லிஸ்ட்டில் சேராத வித்தியாசமும், விறுவிறுப்புமிக்க படம்தான் "புதுமுகங்கள் தேவை" என்றால் அது மிகையல்ல!
கதைப்படி, உதவி இயக்குனரான சிவாஜி தேவ், புதியபடம் பண்ண தயாரிப்பாளர் தேடி அலைகிறார். யாரும் கிடைக்காத விரக்தியில் ஒரு கட்டத்தில் நண்பரின் சாதாரண ஓட்டலில் சப்ளையராக, ஓ சாரி, பில் கலெக்டராக வேலைக்கு சேருகிறார். ஆனாலும் சினிமா தாகத்தில் இருக்கும் அவருக்காக கையில் காலணா காசு இல்லாமல் பட தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார் ஓட்டல் முதலாளி நண்பர். அவருக்கு உறுதுணையாக மற்றொரு சப்ளையர் நண்பரும், சிவாஜி தேவின் காதலியும், கதாநாயகியுமான விஷ்ணு ப்ரியாவும் கையில் கிடைக்கும் காசு பணத்தையும், கழுத்தில், காதில் தொங்கும் நகை நட்டுக்களையும் கழற்றி கொடுத்து உதவுகின்றனர். சிவாஜிதேவ் இயக்குனர் ஆனாரா...? படம் தயாரானதா என்பது மீதிக்கதை!
இப்படி ஒரு வித்தியாசமும், விறுவிறுப்புமான கதையில், சிவாஜிதேவ் இப்பொழுது நடித்திருப்பதற்கு பதில் முன்பே முதல்படமாக நடித்திருந்தார் என்றால் இந்நேரம் பெரிய இளம் ஹீரோக்கள் வரிசையில் இணைந்திருப்பார். அதிலும் அந்த செயற்கை தாடியையும், மீசையையும் தவிர்த்திருந்தார் என்றால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும்! போகட்டும் விடுங்கள். சிவாஜிதேவ் மாதிரியே யதார்த்த நடிப்பில் ஒளிப்பதிவாளர் ராஜேஷ்யாதவ், ஆதிஷ், நடிகை பானு, எம்.எஸ்.பாஸ்கர், நாயகி விஷ்ணுப்ரியா உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். பலே! பலே!!
ராஜேஷ் யாதவ், சரவணனின் ஒளிப்பதிவும், டிவின்ஸ் டியூன்ஸின் இசையமைப்பும், கவிதாபாரதியின் வசனங்களும், நடிகையாக வரும் பானுவும் படத்திற்கு பக்காபலம் புதியவர் மனீஷ் பாபுவின் இயக்கத்தில் "புதுமுகங்கள் தேவை", "பீட்சா", "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" உள்ளிட்ட சமீபத்திய வித்தியாச வெற்றிப்பட வரிசையில் இணைவது நிச்சயம்!!
மொத்தத்தில், "புதுமுகங்கள் தேவை" - இதுமாதிரி தமிழ் சினிமாவிற்கு நிறைய "புதுமையான படங்கள் தேவை"!!