தினமலர் விமர்சனம் » மீராவுடன் கிருஷ்ணா
தினமலர் விமர்சனம்
சைக்கோ கணவன்! சைலண்ட் மனைவி! இதுதான் "மீராவுடன் கிருஷ்ணா" படத்தின் மொத்த கதையும்!!! கணவர், சைக்கோ ஆன காரணமும் அலசப்பட்டிருப்பது கூடுதல் கதை!
கதைப்படி, கதாநாயகர் கிருஷ்ணா ரொம்ப நல்லவர்.... புல் மப்பில் இருக்கும் கிருஷ்ணாவை நண்பர்கள் விபச்சார பெண் ஒருவருடன் உல்லாசமாக இருக்க ஒரே ரூமில் பூட்டி வைத்தாலும், உள்ளே போகும் கிருஷ்ணா, அந்த பொண்ணுக்கு யோகா, தியானம் எல்லாம் கற்றுக் கொடுக்கும் அளவிற்கு நல்லவர்! ஆனால் ஆசை ஆசையாய் உடன் வாழும் மனைவியை மட்டும் சந்தேகப்பட்டு தாறு மாறாக சிந்திப்பார். அவர் அவ்வாறு சிந்திக்க காரணம், அவருக்கு குரு மாதிரியான ஒருத்தரின் அழகான மனைவி செய்த துரோகம் தான் காரணம் என்று போகிறது மீராவுடன் கிருஷ்ணா படத்தின் மீதிக்கதை!
இப்படத்தின் எண்ணத்திற்கும், எழுத்திற்கும், இயக்கத்திற்கும் சொந்தக்காரரான கிருஷ்ணா தான் படத்தின் கதாநாயகர் கிருஷ்ணாவும் கூட! கதைக்கருவில் இருக்கும் விறுவிறு இவரது இயக்கத்திலும், நடிப்பிலும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்!
கதாநாயகி ஸ்வேதா டாக்டர் மீராவாக நச் சென்று இருக்கிறார். நடிக்கிறார்...! பேஷ் பேஷ்!! புதியவர்களின் ஒளிப்பதிவு, இசை எல்லாம் ஓஹோ என்றிருந்தும், ஆ.கிருஷ்ணாவின் எழுத்தும், இயக்கமும்(நடிப்பும் கூட...) ஓ.கே. எனும் அளவிலேயே இருப்பது, "மீராவுடன் கிருஷ்ணா"வை, "மிரட்சியான கிருஷ்ணா" ஆக்கி விடுகிறது பாவம்!