தினமலர் விமர்சனம் » 18 வயசு
தினமலர் விமர்சனம்
"ரேணிகுண்டா" இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம், நாயகர் ஜானி உள்ளிட்டவர்களின் அடுத்தபடைப்பு தான் "18 வயசு". இதுதான் இப்படத்திற்கான பெரிய எதிர்பார்ப்பு!
அம்மாவின் தவறு, அப்பாவின் தற்கொலை, மகனின் மனநிலை பாதிப்பு, ஆதரவற்ற அழகிய நாயகி, அவர் மீது மனநிலை பாதித்த நாயகரின் அழகிய அதிரடி காதல், இவர்கள் மீதான ஒரு பெண் மருத்துவரின் கரிசனம், போலீஸாரின் ஆக்ரோஷம்... இதுதான் "18 வயசு" மொத்தமும்!
முதல்படமான "ரேணிகுண்டா"விலேயே எக்கச்சக்க ஸ்கோர் செய்த ஹீரோ ஜானி, இதிலும் நடிப்பிலும், துடிப்பிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார். சக மனநிலை பாதிப்பாளர் சத்யேந்திராவுடன் சேர்ந்து கொண்டு நாயகியை கடத்துவதும், கடத்துவதற்கு முன் காதலிப்பதுமாக பட்டையை கிளப்பி இருக்கிறார் பலே பலே!
நாயகி காயத்ரி அழகு பதுமை முகவாகு, உடல்வாகில் மட்டுமல்ல... நடிப்பிலும் "நச்" என்று முத்திரைப்பதித்து இருக்கிறார் அம்மணி! ஜாக்கியாக வரும் சத்யேந்திரா, ஜானியின் அம்மாவாக வரும் யுவராணி, டாக்டர் ரோகிணி, இன்ஸ்பெக்டர் ஜெ.எஸ். உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
சக்தியின் ஒளிப்பதிவு, தினேஷ்-சார்லஸ் போஸ்கோவின் இசை, குறிப்பாக பின்னணி இசை உள்ளிட்டவைகள் "18 வயசு"வின் பெரும்பலம். ஆர்.பன்னீர்செல்வத்தின் எழுத்தும்-இயக்கமும் "ரேணிகுண்டா" அளவிற்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் இல்லாதது "18 வயசை" பெரிதா பாதிக்குது.
மொத்தத்தில், "18 வயசு" - "பாதித்த மனசு"