Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

நான்

நான்,Naan
04 செப், 2012 - 11:50 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » நான்

  

தினமலர் விமர்சனம்பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம்! விஜய் ஆண்டனியின் இசையில் வெளிவந்திருக்கும் 25வது படம்! விஜய் ஆண்டனியின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் முதல்படம்! என ஏகப்பட்ட சிறப்புகளுடன் வந்திருக்கும் திரைப்படம் தான் "நான்!"

கதைப்படி ஆதரவற்ற அனுதாபத்திற்குரிய கார்த்திக், ஒரு பேருந்து விபத்தில் சிக்குவதால் முகம்மது சலீமாகி, மருத்துவ கல்லூரி மாணவர் ஆகிறார். அதன் மூலம் ஒருபக்கம் வசதியான நண்பர்கள், வளமான வாழ்க்கை என கிடைக்க ஆரம்பித்ததும், மற்றொருபக்கம் உண்மையும் உலகிற்கு தெரிய வருகிறது. அந்த உண்மையை மீண்டும் உறங்க செய்ய உடன் தங்கும், இவருக்கு வசதியான வாழ்க்கையை தந்த சக மாணவர்களையே தீர்த்து கட்டும் கார்த்திக் அலைஸ் சலீம், கடைசியில் கம்பி எண்ணினாரா? எண்ணிய வாழ்க்கையை எண்ணியபடி வாழ்ந்தாரா? என்பது தான் "நான்" படத்தின் மொத்த கதையும்! இந்த கதையை எத்தனை ரிச்லுக்காக தரமுடியுமோ அத்தனை ரிச்லுக்காக தந்திருக்கிறார் படத்தின் அறிமுக இயக்குநர் ஜீவா சங்கர் என்பதுதான் சிறப்பு!

கார்த்திக் அலைஸ் சலீம்மாக விஜய் ஆண்டனி தன் இசை மாதிரியே நடிப்பிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். தன்னை தாக்க இன்னும் சிலருடன் பாய்ந்து வரும் சீனியர் மாணவரையும், அடிக்கடி பணம் கேட்டு பிளாக் மெயில் பண்ணும் தன் போலி அப்பா கிருஷ்ணமூர்த்தியையும் ஒரு சேர பயமுறுத்த பீர்பாட்டிலை கிருஷ்ணமூர்த்தியின் தலையில் உடைத்து அதன்பாதியை சீனியர் மாணவரின் வயிற்றில் வைத்து அழுத்தி மிரட்டும் ஒரு சீன் போதும், விஜய் ஆண்டனியின் குரூர நடிப்பிற்கு கட்டியம் கூறுவதற்கு... பேஷ், பேஷ்!

ரூபாமஞ்சரி, அனுயா, விபா என ஒன்றுக்கு மூன்று நாயகிகள் இருந்தும் யாருமே விஜய்க்கு ஜோடி கிடையாது என்பது தான் வேதனை! எனினும் இவர்களது பங்கு படத்தில் மகத்தானது. அதிலும் "மக்கயாலா... மக்கயாலா..." பாடலில் ரூபா மஞ்சரியின் பர்பாமெண்ட்ஸ் படுசூப்பர்! நாயகிகள் மாதிரியே இணை, துணை நாயகர்கள், நண்பர்களாக வரும் அசோக் எனும் சித்தார்த், சுரேஷ் எனும் விஜய் விக்டர், சதீஷ்-ஷ்யாம் உள்ளிட்ட எல்லோரும் சூப்பர்ப்!

நான்கைந்து நல்ல நண்பர்களை கொன்றுவிட்டு ஒரு மெர்ஸி கில்லிங் செய்ய ‌வேண்டிய கிழவரை காபந்து செய்யும் ஹீரோவையும், கதையையும் எந்த லிஸ்டில் சேர்ப்பது? என்பது தான் நான் படத்தை பொறுத்தவரை புரியாத புதிர்! மற்றபடி நீலன் கே.சேகரின் வசனம், விதேஷின் கலை இயக்கம், சூர்யாவின் படத்தொகுப்பு, விஜய் ஆண்டனியின் இசை, நடிப்பு, தயாரிப்பு, ஜீவா சங்கரின் எழுத்து-இயக்கம் உள்ளிட்ட சிறப்பம்சங்களால் "நான்" நன்றாகவே இருக்கிறது! ஆனால் "நாமாக" இல்லாதது வருத்தம்!!------------------------------------------------------

குமுதம் விமர்சனம்


இளமை பருவத்தை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் கழித்து விட்டு, ஏறக்குறைய ஓர் அனாதையாக உலகத்தை எதிர்கொள்ளும் கட்டாயத்தில் இருக்கும் இளைஞன் கார்த்திக். ஒரு சாலை விபத்தும் அதை பயன்படுத்தி அவன் செய்யும் ஆள்மாறட்டமும் அவனது வாழ்க்கையை திருப்பி போடுகின்றன. எம்.பி.பி.எஸ். மாணவன் ஆகிறான். எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்து கொள்ள கார்த்திக் நடத்தும் வன்முறை சற்று தூக்கலான போராட்டம் தான் நான்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி முதன்முதலாக ஹீரோ அரிதாரம் பூசியிருக்கிறார். அப்பாவி ஆனால் கொலைக்காரன் என்கிற இரண்டும் கெட்டான் கேரக்டரில் அனுபவம் உள்ள ஹீரோக்களுக்கு சமமாக இவர் நடித்திருப்பது ஆச்சரியம்.

ஆனந்த தாண்டவம் சித்தார்த் கொஞ்சம் நட்பு, நிறைய தெனாவட்டு டைப் மாணவன்.  அசோக்காக மனதில் நின்று விடுகிறார். சித்தார்த்தின் காதலியாக வரும் ரூபா மஞ்சரி சின்சியர் லவ்வர்கேரக்டரில் சின்சியராகவே நடித்திருக்கிறார். விஜய் ஆண்டனியின் மிமிக்ரி திறமையை வைத்து ரூபா அவரை சந்தேகப்படுவது சற்று தாமதம்தான் என்றாலும் அந்த காட்சியில் திக் திக் குக்குக் குறைவு இல்லை. திரைக்கதைக்கு வேகம் சேர்க்க திடீர் தோழியாக வரவழைக்கப்படும் அனுயாவை ரசிக்கலாம்.  ஏதோ பர்த்டே கிப்டை பேக் பண்ணும் கடைக்காரர் மாதிரி விஷய் ஆண்டனி படு புரொபஷனலாக  உடல்களை அப்புறப்படுத்துவது சலிப்பு, நகைப்பு. அறிமுக இயக்குநரான ஜீவாசங்கரே செய்துள்ள ஒளிப்பதிவு கதைக்கு வலு சேர்க்கிறது.

விஜய் ஆண்டனி செய்யும் இரு கொலைகளிலும் அவரது பக்கமே ஆடியன்ஸை நிறுத்திவிடுவதில் இயக்குநருக்கு வெற்றி தான். கொலைக்கு பிறகு தேவைப்படுகிறது லாஜிக் தான் இந்த க்ரைம் சப்ஜெக்ட்டில் அநியாயத்துக்கு பற்றாக்குறை.

நான்- பில்டிங் மட்டும் ஸ்ட்ராங்.----------------------------------------------

கல்கி விமர்சனம்அறியாத வயதில் ஒருவன் அறிந்து செய்கிற தப்பில் ஆரம்பிக்கிற “நான்’ படம் போகப்போக தப்புகளிலேயே தப்புத்தாளம் போடுகிறது. தப்புகளை வேறொரு பக்கம் திருப்பிவிட்டு அதிலிருந்து புத்திசாலித்தனமாக ஒருவன் தப்புவதை சினிமாத் தனத்தோடு சொல்லித் தப்பியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கம் இயக்குனர் ஜீவாசங்கர்.

ஹீரோவாக தமது அமைதியான நடிப்பால் கவனம் ஈர்க்கும் விஜய் ஆண்டனி, பெயர் மாற்றி அப்பாவியாக நடிப்பதிலாகட்டும் உண்மை தெரிந்ததும் நண்பர்களைக் கொலை செய்வதிலாகட்டும் நிதானமோ நிதானம். அழும்போதுகூட மிகையில்லை.

நீண்ட நாட்களுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கு“ சித்தார்த், ப்ளேபாய் கேரக்கடருக்குள் சடுகுடு ஆடும்போது ரசிக்கலாம். பிறகு விஜய் ஆண்டனியால் கொலை செய்யப்படும்போது ரெண்டு மூணு அச்சச்சோக்களை வாங்கிக் கொள்கிறார் அவ்வளவுதான்.

நாயகி ரூபாமஞ்சரி, காதலிக்கவும் சண்டைபோடவும் சந்தேகப்படவும்... தொட்டுக் கொள்ளப்பட்டு பிறகு விட்டுவிட்டார்கள் ஊறுகாயைப் போல. என்ன... அழகாக இருக்கிறார் என்று ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான். அனுயாவின் கேரக்டர் தக்கூணூண்டுக்கும் தக்கூணூண்டு.

சிற்சில ஓட்டைகளோடு நின்று நிதானமாக விளையாடுகிறது திரைக்கதை. நாலைந்து இடங்களில் “நல்ல கதையால்ல இருக்கு என்று சுணக்கம் தட்டுவதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

எப்போதும்போல இசையமைப்பாளராக விஜய் ஆண்டனியின் கொடி உயரத்தில் பறக்கிறது. “நாக்கமூக்க போல இந்தப் படத்தில் “மக்கையாலா’. அதுவும் ரூபாமஞ்சரி “மக்கையாலா... மக்கையாலா’ என்று ஆடும் போது மனசுக்குள் மத்தளம் அதிர்கிறது. மற்ற பாடல்கள் காதோடு நின்றுவிடும் ரகம்.

ஆள்மாறாட்டக் கதையில் இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனியை, ஹீரோ ஆட்டம் ஆட வைத்த இயக்குனர் ஜீவா சங்கருக்கு உண்மையிலேயே துணிச்சல். ஒளிப்பதிவும் உறுத்தாத ரகம். விஜய் ஆண்டனி, தொடர்ந்து தப்புகள் செய்தாலும் அவ்வப்போது அவருக்கு மனசாட்சி உறுத்துவதைப் போல காட்டிவிட்டு க்ளைமாக்ஸில் தப்புகள் தொடரும் என்று இயக்குனர் எண்ட் கார்டு போடுகிறாரே ஏன்? என்ன சொல்ல வருகிறார்? குழப்பி இருக்க வேண்டாம்.வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

நான் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in