தினமலர் விமர்சனம் » தேனீர் விடுதி
தினமலர் விமர்சனம்
"பூ", "களவாணி" உள்ளிட்ட வெற்றிப்படங்களின் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் எழுதி, இசைத்து, இயக்கி, தயாரிக்கவும் செய்திருக்கும் படம் தான் "தேநீர் விடுதி". இத்தனை பொறுப்புகளை ஏற்றிருக்கும் எஸ்.எஸ்.குமரன், இசையமைக்கும் பொறுப்பை மட்டுமாவது இன்னும் பொறுப்பாய் செய்திருந்தார் என்றால் "தேநீர் விடுதி" இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும் என்பது தான் நமது பர்ஸ்ட் கமெண்ட். அதுதான் இப்படத்திற்கான பெஸ்ட் கமெண்ட்டாகவும் இருக்க கூடும்!
கதைப்படி, அந்த ஏரியாவில் நடைபெறும் விழா வேத்திகளுக்கும், இன்னும் பல வீட்டு விசேஷங்களுக்கும் பந்தல் உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யும் சகோதரர்கள் ஹீரோ ஆதித்தும், கொடுமுடி சுரேஷூம். பந்தலுடன் ஆங்காங்கே பந்தாவும் பண்ணும் இவர்களது சேட்டையில் ஹீரோ ஆதித்தை லவ்வுகிறார் ஹீரோயின் ரேஷ்மி! சார்பதிவாளரின் மகளான ரேஷ்மி சாதாரண பந்தல்காரனை லவ்வுவதை விரும்பாத ஊரும், உறவும் அந்த காதலுக்கு எப்படி எல்லாம் முட்டுக்கட்டை போடுகின்றனர் என்பதும், அதை நாயகனும், நாயகியும் எவ்வாறு தகர்த்தெறிந்து இணைந்தனர் என்பதும் தான் தேநீர் விடுதி படத்தின் கதை! படத்திற்கு "தேநீர் விடுதி" எனப் பெயர் சூட்டியதைவிட "பந்தர்ல்காரன்", "பந்தாக்காரன்" இப்படி ஏதாவது பெயர் சூட்டியிருக்கலாம்.
ஹீரோ ஆதித்துக்கும், ஹீரோயின் ரேஷ்மிக்கும் "இனிது இனிது" படத்தில் இணைந்த ஜோடி! இதிலும் மெச்சும்படி இணைந்து இருக்கின்றனர். ஹீரோவின் அம்மா "அங்காடித்தெரு" சிந்து ஆரம்பகாட்சியில் பிணமாக படுத்து மிரட்டுவது, ரேஷ்மியின் அப்பா நாச்சியப்பராக பிரபாகர் பண்ணும் கலாட்டா, மணவாளனின் ஒளிப்பதிவு எல்லாம் ஓ.கே.,!
மொத்தத்தில் "தேநீர்விடுதி"யில் இன்னும் "சற்றே நிறம், மணம், குணம்" இருந்திருக்கலாம்! எல்லோரையும் கவர்ந்திருக்கலாம்!!