
ஜென்டில்வுமன்
விமர்சனம்
தயாரிப்பு : கோமளா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓசன் பிக்சர்ஸ்
இயக்கம் : ஜோஸ்னா சேதுராமன்
நடிகர்கள் : லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன் லாஸ்லியா, ராஜீவ் காந்தி, தரணி, வைரபாலன்
இசை : கோவிந்த் வசந்தா
வெளியான தேதி : 07.03.2025
நேரம் : 2 மணி நேரம் 5 நிமிடம்
ரேட்டிங் : 2.75/5
கதைக்களம்
எல்ஐசி நிறுவனத்தில் பணிபுரியும் ஹரி கிருஷ்ணன் உறவுக்கார பெண்ணான லிஜோமோல் ஜோஸை திருமணம் செய்து கொண்டு சென்னையில் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இந்த நிலையில் ஒரு இன்டர்வியூ விசயமாக லிஜோமோலின் சகோதரி அவரது வீட்டில் தங்குகிறார். அவரிடம் தவறாக நடக்க முயல்கிறார் ஹரிகிருஷ்ணன். அப்போது மனைவி லிஜோமோல் வந்து விடுகிறார். இதனிடையே ஹரி கிருஷ்ணன் குறித்து போனில் விசாரிக்கிறார் லாஸ்லியா. அதன் பிறகு நடந்தது என்ன? லாஸ்லியாவிற்கும் ஹரி கிருஷ்ணனுக்கும் என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதி கதை.
ஆண் என்கிற திமிரில் கணவன் எவ்வளவு தவறு செய்தாலும் அதை பொறுத்துக் கொண்டு வாழ்ந்த மனைவியர், இப்போது புதுமைப் பெண்களாக மாறிவிட்டனர். தவறு செய்யும் ஆண்களை சட்டப்படி தண்டனை வாங்கி தருகின்றனர், சில சமயங்களில் தாமாகவும் தண்டித்து விடுகின்றனர். அப்படி ஒரு பெண்ணின் கதை தான் இந்த ஜென்டில் உமன்.
சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் தவறு செய்த மனைவியை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேகவைத்து குளத்தில் வீசிய செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. இதை அப்படியே திரைக்கதை எழுதி படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் ஜோஸ்னா சேதுராமன். அதோடு கதைக்கு ஏற்ற டைட்டிலையும் அழகாக தேர்வு செய்துள்ளார்.
படத்தின் ஒட்டுமொத்த சுமையையும் லிஜோமோல் ஜோஸ் சுமந்துள்ளார். அமைதியான மனைவியாகவும், கணவன் தவறு செய்யும் போது ஆக்ரோஷமான பெண்ணாகவும் அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார். அதேபோல் ஒல்லியான உருவம், திருட்டு முழி என பெண்களிடம் லீலைகள் செய்பவராக ஹரி கிருஷ்ணன் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். மேலும் லாஸ்லியாவும் தன் பங்குக்கு ஸ்கோர் செய்கிறார். இவர்களுடன் படத்தில் பலர் நடித்திருந்தாலும் இவர்கள் மூன்று பேரை சுற்றிய கதை நகர்கிறது. கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. காத்தவராயன் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகிறது.
பிளஸ் & மைனஸ்
கணவனுக்கு மனைவி அடிமை இல்லை என்பதையும், கணவன் என்ன தவறு செய்தாலும் அதை பொறுத்துக் கொண்டு வாழும் சாதாரண பெண்ணாக இருக்கக் கூடாது என்பதை ஆணித்தனமாக சொல்லி இருந்தாலும், அதற்கு இவ்வளவு பெரிய சம்பவத்தை செய்யலாம் என்பது சினிமாவுக்கு மட்டுமே பொருந்தும். பாபநாசம் பட பாணியில் கடைசி வரை தப்பை கண்டு பிடிக்காதது சினிமாத்தனமாக உள்ளது.
ஜென்டில்வுமன் - புதுமைப்பெண்