கூகுள் குட்டப்பா
விமர்சனம்
தயாரிப்பு - ஆர்கே செல்லுலாயிட்ஸ்
இயக்கம் - சபரி - சரவணன்
இசை - ஜிப்ரான்
நடிப்பு - கேஎஸ் ரவிக்குமார், தர்ஷன், லாஸ்லியா
வெளியான தேதி - 6 மே 2022
நேரம் - 2 மணி நேரம் 11 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
மலையாளத்தில் 2019ம் ஆண்டு வெளிவந்து 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25' படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த 'கூகுள் குட்டப்பா'.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து மலையாளப் படங்களின் ரீமேக் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், ஹீரோவை மையப்படுத்திய கதைகளை ரீமேக் செய்ய தேர்வு செய்யாமல், கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை ரீமேக் செய்யும் இயக்குனர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். ஆனால், அந்த ரீமேக்கை சரியாகச் செய்திருந்தால் கூடுதலாகப் பாராட்டலாம்.
அறிமுக இயக்குனர்கள் சபரி - சரவணன், மலையாளப் படத்தை கோயம்புத்தூர் பின்னணியில் கொடுத்திருக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு சாதிப் பெயரைக் குறிப்பிட்டு வந்துள்ள படம் இது. அப்படியே 90களின் தமிழ் சினிமாவுக்கு நம்மை அழைத்துக் கொண்டு சென்றது போல உள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட ஒரு கதாபாத்திரம்தான் இப்படத்தின் கதாநாயகன். அவருக்கும் அவருக்கு உதவி செய்வதற்காக அமைக்கப்பட்ட ரோபோவான குட்டப்பனுக்கும் இடையில் உள்ள பாசப் பிணைப்புதான் இந்தப் படம்.
கோயம்பத்தூர் அருகில் உள்ள கிராமத்தில் மகன் தர்ஷனுடன் வசிப்பவர் கேஎஸ் ரவிக்குமார். மிகவும் சிக்கனமானவர், இஞ்சினியரிங் படித்து முடித்த மகனையும் வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப மறுப்பவர். அப்பாவுடன் சண்டை போட்டு ஜெர்மனியில் வேலைக்குச் சேர்கிறார் தர்ஷன். இருப்பினும் அப்பாவைப் பார்த்துக் கொள்ள தனது கம்பெனி பரிசோதித்து வரும் ரோபோ ஒன்றை அப்பாவுக்குத் துணையாக இருக்க வைக்கிறார். முதலில் ரோபோவை ஏற்க மறுக்கும் ரவிக்குமார், போகப் போக அதனுடன் நெருக்கமாகப் பழகிவிடுகிறார். நான்கு மாத பரிசோதனை காலம் முடிந்த காரணத்தால் ரோபோவை எடுத்து வர வருகிறார் தர்ஷன். ஆனால், ரவிக்குமார் ரோபோவை அனுப்ப மறுக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் தலைப்பு 'கூகுள் குட்டப்பா' தான் என்றாலும் படத்தின் நாயகனாக கேஎஸ் ரவிக்குமார்தான் இருக்கிறார். அவரைச் சுற்றித்தான் முழு படமும் நகர்கிறது. அவருக்கும் குட்டப்பாவுக்கும் இருக்கும் பாசம், அவருக்கு முன்னாள் காதலியுடன் மீண்டும் துளிர்க்கும் காதல் இவைதான் படத்தை அதிகம் ஆக்கிரமித்துள்ளன. படத்தில் உள்ள இளமைக் காதலர்களான தர்ஷன் - லாஸ்லியாவிற்குக் கூட காதல் காட்சிகள் இல்லை. கேஎஸ் ரவிக்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் முதல் படம். அவருடைய அனுபவ நடிப்பை மொத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ரவிக்குமார் மகனாக தர்ஷன். இஞ்சினியரிங் முடித்து வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார். பிறகு எப்படியோ சண்டை போட்டு போய்விடுகிறார். ஜெர்மனி போனதுமே லாஸ்லியா மீது உடனடியாக காதல் வருவது நம்பும்படியாக இல்லை. பெயருக்கு ஒரு இளம் நாயகியாக லாஸ்லியா. தர்ஷன் முதல் படத்திலேயே குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்.
யோகிபாபு உறவினராக நடித்திருக்கிறார். எங்காவது சிரிக்க வைப்பார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. கூகுள் குட்டப்பனாக உண்மையிலேயே ஒரு இயந்திரத்தை நடிக்க வைத்திருப்பார்களா என்பது சந்தேகமாக உள்ளது. யாரோ ஒரு சிறுவனுக்கு ரோபோ வேடம் போட்டு நடிக்க வைத்திருக்க வாய்ப்புள்ளது.
ஜிப்ரான் பின்னணி இசை பரவாயில்லை ரகம். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என மேக்கிங் எல்லாமே சுமார் ரகம். கேஎஸ் ரவிக்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தில் இப்படி இருப்பது ஆச்சரியம்தான்.
இம்மாதிரியான படங்களை குழந்தைகளும் ரசிக்கும் விதத்தில் எடுத்திருக்க வேண்டும். அதைவிட்டு முதியோர் காதலைப் பற்றிச் சொல்லி பொறுமையை சோதித்திருக்க வேண்டாம்.
கூகுள் குட்டப்பா - 'எரர்' உடன்…