தருணம்
விமர்சனம்
தயாரிப்பு - ழென் ஸ்டுடியோஸ்
இயக்கம் - அரவிந்த் ஸ்ரீனிவாசன்
இசை - தர்புகா சிவா
நடிப்பு - கிஷன்தாஸ், ஸ்மிருதி வெங்கட்
வெளியான தேதி - 14 ஜனவரி 2025
நேரம் - 2 மணி நேரம் 16 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5
பெண்கள் மீதான பாலியன் வன்கொடுமையை மையமாக வைத்து கதையை உருவாக்குவதுதான் இப்போதைய டிரெண்ட். அந்த விதத்தில் வந்துள்ள மற்றுமொரு படம் தான் இது. 'தேஜாவு' படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கொஞ்சம் கவனிக்கப்பட்டவர் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். அந்தப் படத்துடன் ஒப்பிடும் போது இந்தப் படத்திற்கான தருணம் சரியில்லை என்றே தோன்றுகிறது.
சிஆர்பிஎப்-ல் அதிகாரியாக இருப்பவர் கிஷன்தாஸ். ஒரு ஆபரேஷனில் தனது சக அதிகாரியைக் கொன்றதற்காக சஸ்பென்ட் ஆகிறார். அவர் மீதான விசாரணை சென்னையில் நடக்கிறது. அங்கு வந்து நண்பனுடன் தங்குகிறார். அப்போது ஸ்மிருதி வெங்கட்டைப் பார்க்க அவர் மீது காதல் வருகிறது. இருவருக்கும் திருமண நிச்சயமும் ஏற்பாடுகிறது. இதனிடையே, ஸ்மிருதியின் அபார்ட்டிமென்ட்டில் உள்ள ராஜ் ஐய்யப்பாவைக் கொன்று விடுகிறார் ஸ்மிருதி. அந்தக் கொலையை மறைக்க கிஷன் தாஸ், ஸ்மிருதி முயற்சிக்கிறார்கள். எதனால், ராஜ் ஐய்யப்பாவை ஸ்மிருதி கொன்றார், செய்த கொலையை அவர்கள் மறைத்தார்களா, மாட்டிக் கொண்டார்களா என்பதுதான் மீதிக் கதை.
கிஷன்தாஸை ஒரு ஹீரோ என நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவருக்கு ஆரம்ப காட்சியிலேயே ஒரு அதிரடி தாக்குதல் காட்சியை வைத்திருக்கிறார்கள். அதன்பின் பத்துப் பதினைந்து பேருடன் ஒரு சண்டைக் காட்சியையும் வைத்து அவர் ஒரு போலீஸ் அதிகாரி என்று நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள். காதல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் தேறுகிறார் கிஷன். ஆனால், அதைக் கூட மான்டேஜ் பாடல்களில் சேர்த்துவிட்டுள்ளார்கள். நடிக்க இன்னும் பயிற்சி தேவை.
ஸ்மிருதி வெங்கட் கதாபாத்திரம் தெளிவில்லாமல் இருக்கிறது. கிஷன்தாஸைக் காதலிக்கிறார். ஆனால், எதிர் வீட்டில் உள்ள ராஜ் ஐய்யப்பாவுடன் நெருக்கமாகவும் பழகுகிறார். குறுகிய நாட்களிலேயே இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிடுகிறார்கள். சென்னை அபார்ட்மென்ட் வாழ்க்கையில் பல வருடங்கள் ஆனாலும் இப்படியெல்லாம் பழக மாட்டார்கள்.
துணை கதாபாத்திரங்களில் பால சரவணன், கீதா கைலாசம் ஆகியோர் சில காட்சிகளில் வந்து போகிறார்கள்.
தர்புகா சிவா இசையில் பாடல்கள் கேட்கும்படியாக இல்லை. ஒரு அபார்ட்மென்ட் வீட்டிற்குள் முடிந்த வரையில் காட்சிகளின் கோணத்தை விதவிதமாக எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி.
படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரு இலக்கில்லாமல் நகர்கிறது திரைக்கதை. ஒரு கொலை, அதை மறைக்க நினைக்கும் கொலையாளிகள் என்றால் திரைக்கதை எப்படி பரபரப்பாக இருக்க வேண்டும். இந்தப் படத்தில் அது துளியும் இல்லை. ஏதோ போகிற போக்கில் திரைக்கதை போய்க் கொண்டே இருக்கிறது. ஒரு கொலையை செய்துவிட்டோமோ என்ற பதட்டம் ஸ்மிருதியிடமோ அல்லது அந்தக் கொலையை மறைக்க உதவும் கிஷன்தாஸிடமோ இல்லை. இருவரும் பல கொலைகளை செய்தவர்களைப் போல சர்வ சாதாரணமாக நடந்து கொள்கிறார்கள். பக்கத்து ரூமில் பிணத்தை வைத்துவிட்டு ஒரு கட்டத்தில் ஸ்மிருதி தூங்கவும் செய்கிறார். 20 தளங்கள் மேல் உள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் ஒரு பிணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் போவது அவ்வளவு சுலபமான வேலையா ?. படத்தில் ஒரு லாஜிக், இரண்டு லாஜிக் அல்ல பல லாஜிக் மீறல்கள் உள்ளது.
தருணம் - கொலை வேளை…