தீர்ப்புகள் விற்கப்படும்,Theerpugal virkapadum
Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - அல் டாரி மூவீஸ்
இயக்கம் - தீரன்
இசை - SN பிரசாத்
நடிப்பு - சத்யராஜ், ஸ்மிருதி வெங்கட்
வெளியான தேதி - 31 டிசம்பர் 2021
நேரம் - 1 மணி நேரம் 59 நிமிடம்
ரேட்டிங் - 3/5

நாட்டில் நடக்கும் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் பலரிடம் உள்ளது. அந்த எண்ணத்தின் அடிப்படையில் ஒரு அதிரடியான கதையைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தீரன்.

சத்யராஜ் ஒரு அரசாங்க டாக்டர். அவரது ஒரே மகள் ஸ்மிருதி வெங்கட்டும் ஒரு டாக்டர். மகள் ஸ்மிருத்திக்கும் டாக்டரான யுவன் மயில்சாமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்மிருத்தியை மூன்று இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார்கள். தன் மகளுக்கு நேர்ந்த இந்த பெரும் கொடுமையை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறார் சத்யராஜ். ஆனால், அந்த மூன்று இளைஞர்களில் ஒருவரது அப்பாவான கோடீஸ்வரர் மதுசூதனன் அவரது பண பலத்தால் வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுகிறார். இதனால், ஆத்திரமடையும் சத்யராஜ், அந்த மதுசூதனின் மகனைக் கடத்தி, அவரது ஆண் உறுப்பை ஆபரேஷன் செய்து எடுத்து விடுகிறார். அந்த உறுப்பைத் தர வேண்டுமென்றால் சில கொலைகளைச் செய்ய வேண்டும் என மதுசூதனனுக்கு நிபந்தனை வைக்கிறார் சத்யராஜ். அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஆரம்பக் காட்சிகள் சில மட்டும்தான் அலைக்கழிப்பால் தடுமாற்றமாக இருக்கிறது. அதன்பிறகு காட்சிகள் விறுவிறுப்பாகவே நகர்கின்றன. இப்படி ஒரு தண்டனையை இதுவரை எந்த ஒரு ஹீரோவும் வில்லனுக்குக் கொடுத்ததில்லையே என்பதுதான் படத்தின் சுவாரசியம். இன்னும் சில பல கரெக்ஷன் செய்திருந்தால் பக்காவான ஆக்ஷன் படமாக அமைந்திருக்கும். இருந்தாலும் வேற்று மொழிகளில் ரீமேக் செய்பவர்கள் அவற்றைச் சரி செய்வார்கள். சொல்லப் போனால், ரஜினிகாந்த் எல்லாம் இம்மாதிரியான கதைகளில் நடித்திருந்தால் படத்தின் லெவலே வேறு விதமாக இருந்திருக்கும்.

சத்யராஜ் தன் மகள் ஸ்மிருதி மீது அவ்வளவு பாசம் வைத்துள்ளார். தாய் இல்லாத மகளை, அன்பாக வளர்த்து அவரையும் டாக்டராக்கி, நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற ஒரு சராசரி அப்பவாக பாசக் காட்சிகளில் கண் கலங்க வைக்கிறார். அதே சமயம் பழி வாங்கல் எண்ணம் வந்ததும் வழக்கமான சத்யராஜை படத்தில் பார்க்க முடிகிறது. தன் கையால் யாருக்கும் எந்த தண்டனையும் கொடுக்காமல் எதிராளிகளின் கையை வைத்தே அவர்களை அடிக்க வைப்பதும் தனி ஹீரோயிசம் தான்.

அன்பான மகளாக ஸ்மிருதி வெங்கட். கொஞ்ச காட்சிகளில் வந்தாலும் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார். அவரைக் காதலித்து கை பிடிக்க நினைக்கும் கதாபாத்திரத்தில் யுவன் மயில்சாமி. மெயின் வில்லனாக மதுசூதனன். படம் முழுவதும் வருகிறார். அவருக்கு உறுதுணையாக ஹரிஷ் உத்தமன். ஒரு காலத்தில் பல படங்களில் வில்லனாக கலக்கிய சத்யராஜின் முன் இவர்களது வில்லத்தனம் தடுமாறத்தான் செய்கிறது. சார்லி, ரேணுகா ஆகியோரும் படத்தில் உண்டு.

இம்மாதிரியான படங்களுக்கு பாடல்கள் அவசியமில்லை. எஸ்என் பிரசாத்தின் பின்னணி இசை காட்சிகளின் தாக்கத்திற்கு இன்னும் விறுவிறுப்பைக் கூட்டுகிறது.

'தீர்ப்புகள் விற்கப்படும்' என்பது படத்திற்குப் பொருத்தமான தலைப்புதான். ஆனால், ஏதோ ஒரு நாவல் தலைப்பு போல உள்ளதே தவிர, படத்தின் தலைப்பு போல இல்லை. நச்சென்று ஒரு தலைப்பு வைத்திருந்தால் அது படத்திற்கு வேறு ஒரு வரவேற்பைத் தந்திருக்கும்.

பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு இந்தப் படத்தில் காட்டப்படும் கடும் தண்டனைகளை சட்டப்படி நிறைவேற்றினால் அந்தக் கொடுமைகள் கண்டிப்பாகக் குறையும். குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கும் சரியான பயம் வரும்.

தீர்ப்புகள் விற்கப்படும் - தண்டனைகள் தாமதமாகாது…

 

தீர்ப்புகள் விற்கப்படும் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

தீர்ப்புகள் விற்கப்படும்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓