அலங்கு,Alangu
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - டிஜி பிலிம் கம்பெனி, மாக்னஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - எஸ்.பி. சக்திவேல்
இசை - அஜிஷ்
நடிப்பு - குணாநிதி, செம்பன் வினோத், காளி வெங்கட்
வெளியான தேதி - 27 டிசம்பர் 2024
நேரம் - 2 மணி நேரம் 9 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

புதுப்புதுக் கதைகளைத் தேடி தமிழ் சினிமா இயக்குனர்கள் வலம் வருகிறார்கள் என்பதற்கு இந்தப் படம் ஒரு சாட்சி. கேரளாவில் தெரு நாய்களைக் கொன்ற ஒரு விவகாரம் சில வருடங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை மையமாக வைத்து ஒரு கதையை எழுதி இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழக - கேரள எல்லைப் பகுதியில் ஒரு மலையோர தமிழக கிராமத்தில் வசிப்பவர் குணாநிதி. இறக்கும் தருவாயில் உள்ள ஒரு நாயைக் காப்பாற்றி வளர்க்கிறார். அதன் மீது அதிக பாசம் வைக்க ஆரம்பிக்கிறார். குடும்பக் கடனை அடைப்பதற்காக கேரள மாநிலத்தில் உள்ள ரப்பர் தோட்டத்திற்கு தனது இரண்டு நண்பர்களுடன் வேலைக்குச் செல்கிறார். கூடவே அவருடைய நாயையும் கூட்டிச் செல்கிறார். வேலைக்குப் போன இடத்தில் முதலாளி செம்பன் வினோத்தின் மகளை நாய் ஒன்று கடித்துவிடுகிறது. அதனால், ஊரில் உள்ள அனைத்து நாய்களையும் அவரது அடியாட்களிடம் கொல்லச் சொல்கிறார் செம்பன். அவர்களிடம் குணாநிதியின் நாயும் சிக்கிக் கொள்கிறது. நாயை மீட்கச் சென்ற போது அடியாளான சரத் அப்பானியின் கையை வெட்டி விடுகிறார் குணாநிதி. அந்த ஊரிலிருந்து தப்பித்து தங்களது ஊருக்குத் திரும்ப முயற்சிக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தமிழக, கேரள மலைப் பகுதிகள், கிராமம், காடு, மலை, நீர் வீழ்ச்சி என கதை நகரும் பகுதிகள் அனைத்தும்தான் படத்திற்கு ஒரு சரியான காட்சிப் பதிவைக் கொடுத்திருக்கிறது. அதற்காக படத்தின் ஒளிப்பதிவாளர் பாண்டிக்குமாரை முதலிலேயே பாராட்டிவிடலாம். யதார்த்தமான கதாபாத்திரங்கள், அதற்கான நட்சத்திரத் தேர்வு, அவர்களிடமிருந்து பெறப்பட்ட யதார்த்த நடிப்பு இயக்குனரைப் பாராட்ட வைக்கிறது.

தர்மன் என்ற கோபக்கார இளைஞன் கதாபாத்திரத்தில் குணாநிதி. தனது அம்மாவின் பேச்சையும் மீறி கேரளாவுக்கு வேலைக்குச் செல்கிறார். அவருடைய இயல்பான தோற்றம் அவருடைய கதாபாத்திரத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது. குணாவின் நண்பர்களாக நடித்திருக்கும் இருவரும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

படத்தின் முக்கிய வில்லன் செம்பன் வினோத். தன் மகளை நாய் கடித்துவிட்டது என்பதற்காக ஊரிலுள்ள அனைத்து நாய்களையும் கொல்லச் சொல்லும் அளவிற்கு மகள் மீது பாசம் உள்ளவர். அவருடைய வலது கரமாக நடித்திருக்கும் சரத் அப்பானிக்குத்தான் செம்பன் வினோத்தை விட காட்சிகள் அதிகம். ரவுடியிசத்தில் மிரட்டியிருக்கிறார் சரத். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னைப் பற்றிப் பேச வைக்கும் நடிப்பை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளார் காளி வெங்கட். குணாவின் அம்மாவாக நடித்திருப்பவர் கண்களிலேயே மிரட்டுகிறார்.

படத்தில் இரண்டு, மூன்று பாடல்கள் சிறப்பாக இருந்திருந்தால் படத்திற்கு உதவியாக இருந்திருக்கும். ஆனாலும், காடு, மலை சார்ந்த காட்சிகளில் இயற்கையோடு இணைந்த இசையைக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் அஜிஷ்.

நாய்களைக் கொல்லச் சொல்லும் வெறி பிடித்த மனிதன் ஒருவனுக்கும், நாய்களைக் காப்பாற்றத் துடிக்கும் மனிதன் ஒருவனுக்குமான மோதல்தான் கதை. அதை இன்னும் பரபரப்பான மோதலோடு காட்டியிருக்கலாம். சம்பந்தப்பட்ட இருவருமே நேருக்கு நேர் மோதாமல் இருப்பது திரைக்கதையில் மைனஸ் ஆக உள்ளது. அது போல நாயகனுக்காக நாய் ஏதோ செய்யப் போகிறது என்று எதிர்பார்த்தால் அதிலும் ஏமாற்றமே. இடைவேளைக்குப் பிறகான காட்டுப் பயணம் போரடிக்க வைக்கிறது.

அலங்கு - அன்பு

 

அலங்கு தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

அலங்கு

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓