மெட்ராஸ் மேட்னி,Madras matinee
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ்
இயக்கம் : கார்த்திகேயன் மணி
நடிகர்கள் : சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி கிஷோர், ரோஷினி ஹரிபிரியன், விஷ்வா, ஜார்ஜ் மரியம், சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா, சுனில் சுகதா, அர்ச்சனா.
வெளியான தேதி : 06.06.2025
நேரம் : 2 மணி நேரம் 15 நிமிடம்
ரேட்டிங் : 2.75/5

கதைக்களம்
பிரபல எழுத்தாளரான சத்யராஜ் நடுத்தர மக்களின் உணர்வுகளையும், எதார்த்த வாழ்க்கையையும் கதையாக எழுத காளி வெங்கட் வாழ்க்கையை தேர்வு செய்கிறார். இதனால் அவரது பின்னணி மற்றும் வாழ்க்கை முறையை கள ஆய்வு செய்து அதை கதையாக ரசிகர்களுக்கு விவரிக்கிறார். இனி அவர் சொல்லும் கதையை பார்ப்போம். ஆட்டோ டிரைவரான காளி வெங்கட், மனைவி ஷெல்லி கிஷோர், மகள் ரோஷ்னி ஹரிபிரியன் மற்றும் மகன் விஷ்வாவுடன் வாழ்ந்து வருகிறார். லோயர் மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்ந்து வரும் அவருக்கு வருமானம் குறைவு என்றாலும் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்கிறார். அதோடு தனது நண்பர்கள் மூலம் ஆலோசனைகளை கேட்டு தனது குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக சில முயற்சிகளை செய்கிறார். அவரது முயற்சி பலித்ததா? காளி வெங்கட் வாழ்க்கையில் நடந்த சுவாரசியம் என்ன? அவருடைய மகளும், மகனும் என்ன செய்தார்கள்? என்பதே படத்தின் மீதி கதை.

காலங்கள் மாறினாலும் மனிதர்களின் எமோஷன் மட்டும் மாறுவது கிடையாது. அதனால் மனிதநேயம் குறித்தும் மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் கதைகள் குறித்தும் எப்போது படங்கள் வந்தாலும் அவை வெற்றி பெறுகின்றன. உதாரணமாக சமீபத்தில் வந்த டூரிஸ்ட் பேமிலி மனித நேயம் குறித்து பேசியதால் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வகையில் இந்த மெட்ராஸ் மேட்னி படத்திலும் ஒரு நடுத்தர ஆட்டோ டிரைவர் வாழ்க்கையில் நடக்கும் எமோஷன்களை திரையில் அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் கார்த்திகேயன் மணி. நடுத்தர குடும்பத்தின் மகிழ்ச்சி மற்றும் உணர்வுகள் கலந்த வாழ்வியலை யதார்த்தமாக சொல்லி இருக்கிறார். அதுவும் அதை நேரடியாக நமக்கு சொல்லாமல் ஒரு எழுத்தாளர் பார்வையில் சொல்லி உள்ளார்.

காளி வெங்கட் இந்தப் படத்தில் கதை நாயகனாக, ஆட்டோ டிரைவராக வாழ்ந்திருக்கிறார். தன்னுடைய இன்பம் துன்பம் அனைத்தும் தன் குடும்பம் மட்டுமே என வாழும் சாதாரண மனிதனின் மனநிலையை அப்படியே திரையில் பிரதிபலித்திருக்கிறார். முழு படத்தையும் தனது தோளில் சுமந்து அதற்கு சின்ன சின்ன எமோஷன்கள் மூலம் நியாயம் சேர்த்திருக்கிறார். இன்றைய குடும்ப தலைவிகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தங்களை எப்படி எங்கேஜ்ட் ஆக வைத்துள்ளனர் என்பதை தனது கேரக்டர் மூலம் அழகாக நடித்து காட்டியிருக்கிறார் மலையாள நடிகை ஷெல்லி கிஷோர். காளி வெங்கட் மகளாக பொறுப்புள்ள பெண்ணாக நடித்து அசத்தியுள்ளார் ரோஷ்னி ஹரிபிரியன். ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் தனது குடும்பத்தின் மீதும் தந்தை மீதும் கொண்டுள்ள பாசத்தை பல காட்சிகளில் வெளிப்படுத்துகிறார். மகனாக நடித்துள்ள விஷ்வா.

இவர்களோடு அவ்வப்போது அட்வைஸ் சொல்லும் கேரக்டரில் சாம்ஸ் சிறப்பாக நடித்துள்ளார். எழுத்தாளராக சத்யராஜ் வந்து செல்கிறார். கே.சி.பாலசாரங்கன் இசை படத்திற்கு எலிவேஷன் ஆக அமைந்துள்ளது. ஆனந்த் ஜி.கே.வின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

பிளஸ் & மைனஸ்
ஒரு சாதாரண குடும்பத் தலைவரின் வாழ்க்கையை எமோஷன் கலந்து அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்திகேயன் மணி. இரண்டு மணி நேரம் உணர்ச்சி குவியலோடு படத்தை பார்க்கும் அளவிற்கு திரைக்கதை வைத்து இயக்கியிருக்கிறார். அதோடு அவர் கதாபாத்திரங்களை தேர்வு செய்த விதமும் பாராட்டுக்குரியது. குறிப்பாக காளி வெங்கட் கேரக்டர் கதைக்கு மணிமகுடும். அப்பா, அம்மா மீது குழந்தைகள் பாசமாக இருந்தால் மட்டும் போதாது அதையும் தாண்டி அவர்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது என்று தற்போதைய கிட்ஸ்களுக்கு அழகாக அட்வைஸ் சொல்கிறது இப்படம்.

எழுத்தாளரான சத்யராஜ், காளி வெங்கட் கதையை விவரிப்பது படத்திற்கு ஒருவித பிளஸ் என்றாலும், படம் முழுக்க அவர் கதை சொல்வது மைனஸ் ஆக உள்ளது. நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டு இருக்கும் கதைக்கு ஸ்பீடு பிரேக்கர் போல் அவருடைய பின்னணி குரல் அமைந்துவிடுகிறது. இடையிடையே அவர் பேசுவதை தவிர்த்து இருந்தால் இன்னும் படம் சுவாரசியமாக இருந்திருக்கும்.

மெட்ராஸ் மேட்னி - பேமிலி ஷோ

 

மெட்ராஸ் மேட்னி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மெட்ராஸ் மேட்னி

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓