
ரெட் சாண்டல்வுட்
விமர்சனம்
தயாரிப்பு - ஜேஎன் சினிமாஸ்
இயக்கம் - குரு ராமானுஜம்
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - வெற்றி, கணேஷ் வெங்கட்ராமன், கேஜிஎப் ராம்
வெளியான தேதி - 8 செப்டம்பர் 2023
நேரம் - 1 மணி நேரம் 34 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
சந்தன மரக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் ஆகியவை எல்லாம் பழைய பார்முலா கடத்தல் கதைகள். 'ரெட் சாண்டல்வுட்' எனப்படும் செம்மரக் கடத்தல் 'புஷ்பா' படம் வந்த பிறகுதான் பலருக்கும் தெரியும். அதற்கு முன்பாகவே ஆந்திர மாநிலத்தில் செம்மரம் கடத்தியதாகக் கூறி 20 தமிழர்களை என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொன்றார்கள். தமிழகத்திலும், ஆந்திராவிலும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த நிஜ நிகழ்வை மையமாக வைத்துத்தான் 'புஷ்பா' படத்தையே எடுத்தார்கள்.
இந்த 'ரெட் சாண்டல்வுட்' படமும் அந்த என்கவுன்டர் படுகொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு படம். ஆனால், 'புஷ்பா' படம் போல கமர்ஷியல் படமாக இல்லாமல், அந்த என்கவுன்ட்டரில் என்ன நடந்தது என்பதை ஒரு டாகுமென்டரி போலவும் பதிவு செய்திருக்கிறார்கள்.
காணாமல் போன தனது மாமா மகன் விஷ்வந்தைத் தேடி ரேணிகுண்டா வனப்பகுதிக்குச் செல்கிறார் வெற்றி. அங்கு வேறொரு நண்பனைப் பார்க்க நேரிடுகிறது. அந்த நண்பனின் லாரியில் அமர்ந்திருக்கும் போது போலீஸ் அவர்களைக் கைது செய்கிறது. வனத்துறை வசம் சிக்கிக் கொள்ளும் வெற்றி மற்றும் சிலர் பின்னர் அங்கிருந்து தப்பித்து காட்டிற்குள் ஓடுகிறார்கள். ஆனாலும், மற்றவர்களைக் கடத்தல் தடுப்புப் படையினர் கொன்றுவிடுகிறார்கள். வெற்றி மட்டும் தப்பித்து விஷ்வந்த் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கிறார். அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பித்து வந்தார்களா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.
செம்மரக் கடத்தல் பற்றியும், அதற்கு துணை போகும் காவல் துறை பற்றியும், அப்பாவி மக்கள் எப்படி அதில் போய் அகப்பட்டுக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றியும் தெள்ளத் தெளிவாகக் காட்டியிருக்கிறார் படத்தின் இயக்குனர் குரு ராமானுஜம். ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஓடும் படம். இன்னும் அரை மணி நேரக் காட்சிகளைச் சேர்த்து ஒரு கமர்ஷியல் படமாகவும் கொடுத்திருக்கலாம்.
படத்தின் கதாநாயகன் வெற்றிக்கு கடத்தல் கும்பலுடனும், காவல் துறையுடனும் சண்டை போட வேண்டியிருப்பதால் அவரை பாக்சிங் தெரிந்தவர் எனக் காட்டியிருக்கிறார் இயக்குனர். காணாமல் போன மாமா மகனைத் தேடி ஆந்திராவுக்குச் செல்கிறார் வெற்றி. கொஞ்சம் கொஞ்சமாக அவரைக் கண்டுபிடித்தும் விடுகிறார். அதற்கிடையில் அவர் சந்திக்கும் பிரச்சினைகள்தான் இந்தப் படத்தின் முக்கியக் கதை.
வெற்றிக்கு அடுத்து படத்தில் குறிப்பிட வேண்டிய கேரக்டர் கணேஷ் வெங்கட்ராமன். செம்மரக் கடத்தலைத் தடுக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அடுத்து படத்தின் வில்லன் கேஜிஎப் ராம். கொஞ்ச நேரமே வந்தாலும் மிரட்டிவிட்டுச் செல்கிறார்.
இடையில் செம்மரக் கடத்தலில் சிக்கும் அப்பாவித் தமிழர்களில் ஒருவராக எம்எஸ் பாஸ்கர். அவரைப் போல சிலரும் தங்கள் குடும்ப நிலைக்காக இந்தத் தொழிலில் வந்து சிக்கி ஏறக்குறைய அடிமைகளாகவே ஆனவர்கள். கொடூரமாய் கொல்லப்பட்டு உயிரிழக்கிறார்கள்.
செம்மரக் கடத்தலைப் பற்றிய பதிவாக இந்தப் படம் இருக்க வேண்டும் என நினைத்திருக்கிறார் இயக்குனர். அந்த விதத்தில் ஓகே தான். ஆனால், ஒரு முழு படமாகப் பார்க்க முடியவில்லை.
ரெட் சான்டல்வுட் - ரத்தத்துடன்…
பட குழுவினர்
ரெட் சாண்டல்வுட்
- நடிகர்
- இயக்குனர்
- இசை அமைப்பாளர்