
ராஜபுத்திரன்
விமர்சனம்
தயாரிப்பு : கிரசன்ட் சினி கிரியேஷன்
இயக்கம் : மகாகந்தன்
நடிகர்கள் : பிரபு, வெற்றி, லிவிங்ஸ்டன், கிருஷ்ண பிரியா, ஆர்.வி.உதயகுமார், கோமல் குமார், மன்சூர் அலிகான்,தங்கதுரை, இமான் அண்ணாச்சி
வெளியான தேதி : 30.05.2025
நேரம் : 2 மணி நேரம் 13 நிமிடம்
ரேட்டிங் : 2.5/5
கதைக்களம்
ராமநாதபுரம் அருகே கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. ஊர் மக்கள் மதிக்கும் அளவுக்கு பெரிய குடும்பத்தை சேர்ந்த பிரபுவின் மனைவி இறந்ததை அடுத்து மகன் வெற்றி மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயது முதல் மகனை செல்லமாக வளர்க்கும் பிரபு, அவனை வேலைக்கு கூட அனுப்ப மறுக்கிறார். இந்த நிலையில் அதே ஊரில் இருக்கும் கோமல் குமார் பல சட்டவிரோத செயல்கள் செய்வதோடு, வெளிநாடுகளில் பணிபுரிவோர் சொந்த ஊரில் உள்ள தங்கள் குடும்பங்களுக்கு ஏஜென்ட் மூலம் அனுப்பும் பணத்தை உரியவர்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை ஆட்களை வைத்து செய்து வருகிறார். அவருடைய வலது கையாக லிவிங்ஸ்டன் இருந்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் அப்பா பிரபுவுக்கு தெரியாமல், கோமல் குமார் இடத்தில் வேலைக்கு செல்கிறார் வெற்றி. அதே ஊரில் மற்றொரு தாதாவாக இருக்கும் ஆர்.வி. உதயகுமார், எப்படியாவது கோமல் குமார் இடத்தை பிடிப்பதற்காக லிவிங்ஸ்டன் மூலம் திட்டம் தீட்டுகிறார். இதற்கு நடுவே பணத்துடன் சென்ற வெற்றியை தாக்கிவிட்டு ஒரு கும்பல் பணத்தை பிடுங்கி சென்று விடுகிறது. தொலைந்து போன பணத்தை வசூலிப்பதற்காக வெற்றியை கடத்துகின்றனர் கோமல் குமார். இதை அறிந்த பிரபு, வீட்டு பத்திரத்தை கோமல் குமாரிடம் கொடுத்துவிட்டு வெற்றியை மீட்டு வருகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? வெற்றிடம் இருந்து பணத்தை அடித்தது யார்? இந்த சதியில் வெற்றி எப்படி சிக்கினார்? வீட்டு பத்திரத்தை எப்படி பிரபு மீட்டார்? என்பதே படத்தின் மீதி கதை.
90களில் வெளிநாட்டில் இருந்து தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்புவோர் எந்த வழியில் அனுப்பினர் என்பதை கொஞ்சம் கமர்சியல் சேர்த்து ராமநாதபுரம் மாவட்டம் பின்னணியில் கதையைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மகா கந்தன். கதைக்கு ஏற்ற இடத்தையும், கேரக்டர்களையும் தேர்வு செய்த இயக்குனர் திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார்.
படத்திற்கு பெரிய பலமாக இருப்பது பிரபுவின் நடிப்பு. ஒவ்வொரு காட்சிகளிலும் அவரின் அனுபவ நடிப்பு ரசிக்க வைக்கிறது. தனது மகனுக்காக அவர் உருகி உருகி நடிக்கும் காட்சிகளில் கைத்தட்டல் பெறுகிறார். பிரபுவின் மகனாக நடித்துள்ள வெற்றி, அவருடன் போட்டி போட்டு நடிக்க முயற்சி செய்துள்ளார். கிராமத்து இளைஞராக வில்லன்களுடன் சண்டை போடும் காட்சிகளில் ஆக்ஷன் ஹீரோவாக தெரிகிறார். காதலியுடன் ரொமான்ஸ் செய்வது மற்றும் கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணீர் விட வைப்பது என நடிப்பில் மிளிர்கிறார்.
ஹீரோயின் கிருஷ்ண பிரியா திரையில் அழகாக தெரிவதுடன், கிராமத்து கேரக்டரில் அசத்தலான நடிப்பை தந்திருக்கிறார். ஓப்பனிங் சீனில் கத்தியுடன் ஓடி வரும் காட்சிகள் மிரட்டலாக அமைந்துள்ளது. பிரபுக்கு நண்பராக வரும் இமான் அண்ணாச்சியின் எதார்த்த நடிப்பு ரசிக்க வைக்கிறது. வில்லனாக நடித்துள்ள கோமல் குமார் மிரட்டி உள்ளார். படம் முழுவதும் கையில் சுருட்டுடன் மேனரிசம் செய்துள்ளார். அவரோடு மீசையை முறுக்கியபடி லிவிங்ஸ்டன் சிறப்பாக நடித்துள்ளார். இவர்களோடு மன்சூர் அலிகான், ஆர்வி உதயகுமார் ஆகியோரின் நடிப்பு படத்துக்கு பக்க பலமாக அமைந்துள்ளது. தங்கதுரை ஒரு சில இடங்களில் காமெடி செய்து ரசிக்க வைக்கிறார்.
நவ்பல் ராஜா இசையில் பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் பின்னணி இசை பரவாயில்லை. ஆலிவர் டெனியின் ஒளிப்பதிவில் ராம்நாடு பகுதி அழகாக தெரிகிறது.
பிளஸ் & மைனஸ்
பணத்தையும், பாசத்தையும் கிராமத்து வாழ்வியலோடு எதார்த்மாக சொல்லி இருந்தாலும் இன்னும் கொஞ்சம் திரைக்கதையை மெருகேற்றி இருந்தால் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். 90களில் நடந்த சம்பவத்தை படமாக எடுத்துள்ள இயக்குனர் இன்னும் கொஞ்சம் விரிவாக ஸ்கிரிப்ட் ஒர்க் செய்திருந்தால் நிச்சயம் பெரிய ஹிட் படமாக அமைந்திருக்கும். ராமநாதபுரம் கதைக்களம் கதைக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. பிரபுவின் அனுபவ நடிப்பு மற்றும் வெற்றியின் எதார்த்தம் நடிப்பு இரண்டும் கொஞ்சம் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. இருப்பினும் ஒரு நாடகம் போல் கதை நகர்வதாலும், பல காட்சிகள் லாஜிக் மீறல்கள் இருப்பதாலும் ரசிக்க முடியவில்லை. இரண்டாம் பாதியில் எப்போது படம் முடியும் என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது.
ராஜபுத்திரன் - பெயரளவில்...
ராஜபுத்திரன் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
ராஜபுத்திரன்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்