அக்கா குருவி,Akka Kuruvi
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - மதுரை முத்து மூவீஸ், கனவு தொழிற்சாலை
இயக்கம் - சாமி
இசை - இளையராஜா
நடிப்பு - மாஸ்டர் மஹீன், பேபி தாவியா
வெளியான தேதி - 6 மே 2022
நேரம் - 2 மணி நேரம் 33 நிமிடம்
ரேட்டிங் - 2.75

பிரபல ஈரானிய திரைப்பட இயக்குனர் மஜித் மஜிதி அறிமுக இயக்குனராக இயக்கி 1997ல் வெளிவந்த ஈரானிய திரைப்படம் 'சில்ட்ரன் ஆப் ஹெவன்'. அப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் தான் இந்த 'அக்கா குருவி'.

தமிழில் சர்ச்சைக்குரிய 'உயிர், சிந்து சமவெளி' உள்ளிட்ட படங்களை இயக்கிய சாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு ஈரானிய திரைப்படத்தை முடிந்த அளவிற்கு நமது மண்வாசனையுடன் கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஒரிஜனலில் இல்லாத காதல் கதை ஒன்று இந்த தமிழில் ரீமேக்கில் கிளைக் கதையாக இடம் பெற்றிருப்பது கதையோடு ஒட்டி வந்தாலும், அது தேவையா என்ற கேள்வியை எழுப்புகிறது. இருப்பினும் ஒரு சிறுவன், சிறுமியை முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து இப்படி ஒரு உணர்வுபூர்வமான படத்தைக் கொடுத்திருப்பதற்கு இயக்குனரைப் பாராட்ட வேண்டும்.

கொடைக்கானல் அருகில் உள்ள பூம்பாறை என்ற மலை கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அண்ணன், தங்கையான தேவா, சாரா. குடும்பம் ஏழ்மையாக இருந்தாலும் தங்களது குழந்தைகளை கான்வென்ட்டில் படிக்க வைக்கிறார் அவர்களின் அப்பா. ஒரு நாள் தங்கை சாராவின் ஷு தொலைந்து போய் விடுகிறது. அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறான் அண்ணன் தேவா. அதேசமயம் ஷு இல்லாமல் பள்ளிக்குச் செல்ல முடியாது என்பதால், காலையில் பள்ளிக்குச் செல்லும் தங்கை சாரா, அண்ணனின் ஷுவை அணிந்து கொண்டு செல்கிறாள். தங்கை வந்த பின் மதியம் அண்ணன் தேவா ஷுவை அணிந்து கொண்டு செல்கிறான். அண்ணனும் தங்கையும் அடிக்கடி காணாமல் போன ஷுவைத் தேடிக் கொண்டு செல்கிறார்கள். அது கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இந்தக் காலத்தில் குழந்தைகளை மையப்படுத்திய கதைகள் அதிகம் வருவதில்லை. அந்த ஒரு குறையை இந்தப் படம் போக்கியிருக்கிறது. படத்தின் அண்ணன், தங்கையாக நடித்திருக்கும் சிறுவன் மஹீன், சிறுமி தாவியா இருவரும் அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள். தங்கையின் ஷுவை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று தவியாய் தவிக்கிறார் அண்ணன். உடல்நலமில்லாத அம்மாவுக்குத் துணையாக அவ்வளவு சிறு வயதிலேயே வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்கிறார் சிறுமி தாவியா. ஒவ்வொரு காட்சியும் அதற்கேற்ற முகபவாங்களை அவ்வளவு யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார் தாவியா. தன்னுடைய ஷு மீண்டும் கிடைத்துவிடாதா, இல்லை தனக்கு ஒரு புது ஷு கிடைக்காதா என்ற அவரது ஏக்கப் பார்வை இன்னமும் கண்முன் நிற்கிறது.

படத்தில் கிளைக்கதையாக இளம் காதல் ஒன்றும் நகர்கிறது. 97ல் நடக்கும் கதை என்பதாலும் படத்திற்கு இளையராஜா இசை என்பதாலும் அந்தக் காதல் கதையை இளையராஜாவின் ஹிட் பாடல்களை வைத்தே நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் சாமி. அதில் காதல் ஜோடியாக வரும் ஹரிஷை விடவும் மீனாட்சி அதிகம் கவர்கிறார். குழந்தைகளின் பெற்றோராக விஎஸ் குமார், தாரா ஜகதாம்பி இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.

இளையராஜாவின் இசையில் பாடல்கள் மிகச் சுமார் தான். இருந்தாலும் காதல் கதையில் அடிக்கடி வரும் அவரது பழைய பாடல்கள் இப்போது கேட்டாலும் அவ்வளவு பிரஷ்ஷாக இருக்கின்றன. வழக்கம் போல பின்னணியில் ஜமாய்த்திருக்கிறார்.

கொடைக்கானல் என்றாலே மலையின் அழகைத்தான் ஒளிப்பதிவாளர்கள் காட்டுவார்கள். இந்தப் படத்தில் கொடைக்கானல் மலையின் மற்றொரு யதார்த்த பக்கத்தைக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் உத்பல் வி நாயனார்.

எளிமையான கதை, அதை உணர்ச்சி மிகு காட்சிகளால் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். ஷு தான் படத்தின் மையக் கரு என்றாலும் அதைச் சுற்றி சேர்த்த காதலை விட அந்த சிறுவன், சிறுமியின் கல்வி பற்றிய முக்கியத்துவத்தை இன்னும் அழுத்தமாகச் சேர்த்திருக்கலாம் என்ற எண்ண வைக்கிறது.

அக்கா குருவி - சிறகடிக்கும்…

 

அக்கா குருவி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

அக்கா குருவி

  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓