
விமர்சனம்
தயாரிப்பு - ரெயின்போ புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - வரதாராஜ்
இசை - ஜுடா சாண்டி
நடிப்பு - ராஜ்கமல், ஸ்வேதா பண்டிட்
வெளியான தேதி - 7 ஜனவரி 2021
நேரம் - 2 மணி நேரம்
ரேட்டிங் - 2.25/5
டிஜிட்டல் யுகத்தில் பெண்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக சொல்லியிருக்கும் படம் இது. சமூக வலைத்தங்கள், மொபைல் போன்கள் பயன்பாடுகள் அதிகமான பிறகு பெண்கள் ஏமாறுவதும் அதிகமாகித்தான் வருகிறது.
நல்லவர்களைப் போல நடித்து, பெண்களை ஏமாற்றி அவர்களது தனிப்பட்ட விஷயங்களை வீடியோவாக எடுத்து அதை விற்று பணம் சம்பாதிக்கும் ஒரு கூட்டத்தைப் பற்றிய கதைதான் இந்தப் படம்.
சர்ச்சை வர வேண்டும் என்பதற்காகவே இப்படியான தலைப்பை வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. நல்லவேளையாக தணிக்கையில் 'பெண்' என்பதை 'பென்' என மாற்றச் சொல்லியிருக்கலாம். இருந்தாலும் இந்தக் காலத்தில் எழுத்துப் பிழை வந்தாலும் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்களே.
கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு கேமராக்கள் வந்துவிட்ட பிறகு அதை எங்கு வேண்டுமானாலும் வைத்து எதை வேண்டுமானாலும் வீடியோவாக எடுக்கலாம் என்ற நிலை வந்துவிட்டது. அப்படி வீடுகளில் உள்ள குளியலறை, பூங்காக்கள் என பல இடங்களில் வைத்து சில வீடியோக்களை எடுத்து விற்பதற்கென்றே பல இளைஞர்கள் சுற்றித் திரிகிறார்கள். அப்படியானவர்களில் ஒருவர்தான் படத்தின் நாயகன் ராஜ்கமல். நல்லவனாக நடித்து, பல பெண்களைக் காதலித்து, அவர்களுடதன் தனிமையில் இருந்து அதை வீடியோவாக எடுத்து விற்பவர். அவரிடம் அடுத்து சிக்கியவர் ஸ்வேதா பண்டிட். ராஜ்கமலால் ஏமாற்றப்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொள்ள அந்த வழக்கும் விசாரிக்கப்படுகிறது. ராஜ்கமல் பிடிபட்டாரா, ஸ்வேதா காப்பாற்றப்பட்டாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் ஆரம்பத்தில் எப்படியெல்லாம் பெண்களின் வீடியோக்களை எடுக்கிறார்கள் என விதவிதமாகக் காட்டுகிறார்கள். அதன்பின்னர்தான் படத்தின் கதை நாயகன், நாயகி பக்கம் வருகிறது. இடைவேளைக்குப் பின் படம் விசாரணை கட்டத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்த்தால் ராஜ்கமல், ஸ்வேதா இடையிலான காதல் காட்சிகள், பாடல்கள் என நேரத்தை வீணடிக்கிறார்கள்.
பெண்களை காதலித்து ஏமாற்றும் இளைஞராக தனது கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருக்கிறார் ராஜ்கமல். இவரையும், ஸ்வேதாவையும் ஆரம்பத்திலிருந்தே காதலர்களாகக் காட்டியிருப்பதால் இவர் மீது எந்த சந்தேகமும் வரவில்லை. இவரது கதாபாத்திரம் மீதான சஸ்பென்ஸை இயக்குனர் நன்றாகவே மெயின்டைன் செய்திருக்கிறார். இவரும் ஒரு குற்றவாளிதான் எனத் தெரிய வரும் போது அதிர்ச்சியாகத்தான் உள்ளது.
காதலால் ஏமாறும் பெண்களுக்கு ஸ்வேதா பண்டிட் கதாபாத்திரம் ஒரு உதாரணம். இவருடைய உதட்டசையும், டப்பிங்கும் பொருத்தமில்லாமல் இருக்கிறது. ஆரம்பத்தில் வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி அநியாயமாகக் கொல்லப்படுகிறார். பிறகு அந்த வழக்கை மற்றொரு அதிகாரியான மது விசாரிக்க ஆரம்பிக்கிறார். இவர்தான் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து வழக்கையும் முடித்து வைக்கிறார். வீடியோ எடுக்கும் இளைஞர்களின் தலைவனாக மெயின் வில்லன் கிறிஸ் பெப்பி, பார்வையிலேயே மிரட்டுகிறார்.
பெண்களுக்கு எப்படியெல்லாம் பாதிப்பு வரும் என்ற விழிப்புணர்வு தரும் படம். அதையே பெண்களை கிளாமராகக் காட்டி, ஏன் கொஞ்சம் ஆபாசமான காட்சிகளை வைத்தும் காட்டுவது பெரும் முரண்.
பட குழுவினர்
பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே
- நடிகர்
- இயக்குனர்