தினமலர் விமர்சனம்
சின்னத்திரை நடிகர் ராஜ்கமல், பெரிய திரை நாயகராக அடியெடுத்து வைக்க, புதியவர் அன்பு மதியின் எழுத்து, இயக்கத்தில் இளம் காதலர்களின் செல்பி மோகத்தால் ஏற்படும் விபரீதத்தை வித்தியாசமாக சொல்கிறேன் பேர்வழி.... என விபரீதமாக சொல்லியிருக்கும் படமே சண்டிக் குதிரை.
மண்குதிரைகளை செய்து விற்பனை செய்யும் நாயகர் ராஜ்கமலும், அதே ஊர் அழகி மானஸாவும் காதலர்கள். இவர்களை மாதிரியே, ராஜ்கமலின் பக்கத்து வீட்டு பள்ளி மாணவி திவ்யாவும், அதே ஊரைச் சேர்ந்த இளைஞன் ஹரியும் காதலர்கள். தன் காதலி திவ்யாவுடன் நெருக்கமாக தான் இருப்பதை ஆர்வக்கோளாறால் ஆசை, ஆசையாக படம் பிடிக்கிறார் ஹரி. அந்த செல்பி வீடியோ பதிவால் ஏற்படும் விபரீதங்களால், அவமானம் தாங்காமல் திவ்யா தூக்கில் பிணமாக தொங்குகிறார். காதலர் ஹரி, மனநிலை பாதிக்கப்பட்டு தன் நிலை இழந்து அலைகிறார். இதனால் வெகுண்டெழும் மண்குதிரை பொம்மை விற்பனையாளர் ராஜ்கமல், சண்டிக் குதிரை அவதாரமெடுத்து வில்லனை பழி தீர்ப்பதும் .,அதனால் அவருக்கு ஏற்படும் இன்னல்களும், இழப்புகளும் தான் "சண்டிக் குதிரை" மொத்தப் படமும்!
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு புரமோஷன் ஆகியிருக்கும் ராஜ்கமலிடம் அழகும், திறமையும் இருக்கிறது. எமோஷன் காட்சிகளில் தேவைக்கு அதிகமாக எகிறி நடித்திருந்தாலும், காதல் காட்சிகளில் நாயகி மானஸாவுடன் சேர்ந்து மனம் ஈர்க்கிறார். தன் தங்கை மாதிரியான திவ்யாவின் மரணத்தை ஜீரணிக்க முடியாமல் கதறும் போது கவனம் ஈர்க்கிறார். கீப் இட் அப் ராஜ்கமல்.
நாயகி மானஸா, ரொம்பவும் சின்னப் பெண்ணாக தெரிந்தாலும் கதைக்கேற்ற குட்டச்சியாக களையான முகம், தேவையான கவர்ச்சி தேகம்... என கலக்கியிருக்கிறார். ராஜ்கமலுடன் சேர்ந்து சேற்றுக் குட்டை ஏரியில் மீன் பிடிக்கும் காட்சியிலும் இன்னும் பிற கிளாமர் காட்சிகளிலும் ரசிகனை வாய் பிளக்க வைக்கும் அம்மணி நிச்சயம் பிழைத்துக் கொள்வார். யெஸ்.
திவ்யா அப்பாவி கிராமத்து இளம் பெண், அவருக்கு ஏற்படும் முடிவு அடப்பாவி ரகம்.
திவ்யாவின் காதலராக வரும் ஹரி, ஊர்பெரிய மனிதரின் மருமகன் அருள், அப்பா கேரக்டரர்ஸ் டெல்லி கணேஷ், சூர்யகாந்த் ஆகியோர் தங்கள் நடிப்பின் வாயிலாக கவனிக்க வைக்கின்றனர். காட்டு புலியாக வரும் கஞ்சா கருப்பும் அவரது உதவியாளர் போண்டா மணி உள்ளிட்டவர்களும் சில இடங்களில் கலகலப்பு .பல இடங்களில் கடுப்பு.
வீராவின் ஒளிப்பதிவில் அவ்வளவாக இல்லை ஈர்ப்பு, வார ஸ்ரீயின் அச்சச்சோ ஆசை வச்சேன்... ", "நீ ஒரு கவிதை...", "அடிக்கிற..." உள்ளிட்ட பாடல்கள் மற்றும் இசை பரவாயில்லை ரகம், ராகம். காட்சிக்கு காட்சி படத்தொகுப்பாளர் ஜூட் தேடன்ஸை தேட வேண்டியுள்ளது. அப்படி ஜூட் விட்டிருக்கிறார் மனிதர்... என்பது படத்திற்கு பெரும் பலவீனம்.
அன்பு மதியின் எழுத்து, இயக்கத்தில் கடைசி வரை மெயின்டையின் ஆகும் கொலையாளி சண்டாளன் யார்? எனும் சஸ்பென்ஸ் தவிர, மிகவும் மெதுவாக நகரும் திரைக்கதை, மண்குதிரை பொம்மைகளை பெயரளவிற்கு கூட ஒரு காட்சியிலும் செய்யாத ஹீரோ என சண்டிக் குதிரை பல காட்சிகளில் நொண்டியடிக்கிறது .
ஆக மொத்தத்தில், அன்பு மதியின் எழுத்து, இயக்கத்தில் இருக்கும் அன்பும் மதியும் இயக்கத்தில் பெரிதாக இல்லாதது சண்டிக் குதிரையை சப்பானிக் குதிரையாக்கி விடுகிறது!