கசடதபற,Kasada Tabara

கசடதபற - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - பிளாக் டிக்கெட் கம்பெனி, டிரைடன்ட் ஆர்ட்ஸ்
இயக்கம் - சிம்புதேவன்
இசை - யுவன்ஷங்கர் ராஜா, பிரேம்ஜி, சாம், ஷான் ரோல்டன், சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான்
நடிகர்கள்- சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், சாந்தனு, பிரேம்ஜி, வெங்கட் பிரபு, ரெஜினா, பிரியா பவானி சங்கர், விஜயலட்சுமி
வெளியான தேதி - 27 ஆகஸ்ட் 2021 (ஓடிடி ரிலீஸ்)
நேரம் - 2 மணி நேரம் 17 நிமிடம்
ரேட்டிங் - 3/5

வான்டேஜ் பாயின்ட் தியரி மற்றும் பட்டர்பிளை எபெக்ட் என்ற இரண்டு அறிவியல் கோட்பாடுகளை வைத்து இந்த தனித் தனி ஆறு கதைகளைக் கொண்ட படத்தை ஒரே படமாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன்.

“நாம ஒரு இடத்துல இருந்து பார்க்கறப்ப தெரியற ஒரு விஷயம் வேற ஒரு இடத்துல இருந்து பார்த்தால் அது வேற ஒண்ணா தெரியும். இடம் மாறுவதைப் பொறுத்து சம்பவத்தோட முடிவும் மாறுபட்டுத் தெரியும், ”, இதுதான் வான்டேஜ் பாயின்ட் தியரி தமிழில் வான்டேஜ் புள்ளி கோட்பாடு.

“நம்மால் தொடங்கப்படுகிற ஒவ்வொரு சின்ன செயலும், அடுத்தடுத்து மத்தவங்களோட செயல்கள்லயும், மாற்றத்தை உண்டு பண்ணிடும்,” இதுதான் பட்டர்பிளை தியரி, தமிழில் பட்டாம்பூச்சி கோட்பாடு.

இந்த இரண்டு கோட்பாடுகளை வைத்து தனித் தனி கதைகளை எழுதி, கடைசியில் ஆறு கதைகளும் எப்படி ஒன்றுக்கொன்று தொடர்புக்குள்ளாகி வருகிறது என அருமையான திரைக்கதையை அமைத்துள்ளா இயக்குனர் சிம்புதேவன்.

“கவசம், சதியாடல், தப்பாட்டம், பந்தயம், அறம்பற்ற, அக்கற” இந்த ஆறு கதைகள்தான் இந்த கசடதபற.

கவசம்

ஒரு மருந்து கம்பெனி குடோனில் வேலை பார்க்கும் பிரேம்ஜியின் நல்ல மனதைப் பார்த்து அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் இஞ்சினியரிங் முடித்த ரெஜினா. அந்த காதலைப் பிரிக்க நினைக்கிறார் ரெஜினாவின் அப்பா.

சதியாடல்

பிரேம்ஜி, ரெஜினாவின் காதலைப் பிரிக்க ரெஜினாவின் அப்பா தாதாவான சம்பத் உதவியை நாடுகிறார். அவர்கள் காதலைப் பிரிக்கப் போனவருக்கு தனது மகன் சாந்தனுவின் காதல் பற்றித் தெரிய வருகிறது. என்கவுண்டர் லிஸ்ட்டில் இருக்கும் சம்பத்தை அவரது மகன் சாந்தனுவே சதி செய்து போட்டுத் தள்ளுகிறார்.

தப்பாட்டம்

சில என்கவுண்டர்களை செய்ய நியமிக்கப்படும் போலீஸ் குழுவில் சந்தீப் கிஷன் நியமிக்கப்படுகிறார். ஆனால், அவரை சாதியைக் குறிப்பிட்டுப் பேசி அசிங்கப்படுத்த நினைக்கிறார் டி.சி.யான சுப்பு பஞ்சு. ஒரு கட்டத்தில் ரவுடிகளிடம் சொல்லி சந்தீப்பையே போட்டுத் தள்ளப் பார்க்கிறார் சுப்பு. ஆனால், பதிலுக்கு சுப்புவையே போட்டுத் தள்ளுகிறார் சந்தீப்.

பந்தயம்

வாழ்க்கையில் எப்படியாவது முன்னேற வேண்டும் என நரித்தனமான வேலைகளில் ஈடுபடுகிறார் இளைஞரான ஹரிஷ் கல்யாண். பணக்காரரான அரவிந்த் ஆகாஷைப் பயன்படுத்தி அவரிடமிருந்து பணம் பெற்று பல வழிகளில் தொழில் செய்து அதைப் பல கோடியாக மாற்றுகிறார். ஒரு கட்டத்தில் அரவிந்த் சாகக் காரணமாக இருந்து அவரது குடுமபத்தில் அவருக்குப் பதிலாக மகனாகவே நுழைகிறார்.

அறம்பற்ற

மீனவ கிராமத்தில் சத்துணவு சமையல் வேலை செய்யும் விஜயலட்சுமியின் மகனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்படுகிறது. மகனைக் காப்பாற்ற பள்ளியிலிருந்து பணத்தைத் திருடிக் கொண்டு சென்னைக்கு சிகிச்சை செய்ய வருகிறார். மகனைக் காப்பாற்றியும் விடுகிறார். அவர் மகனைப் போலவே கிராமத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களைக் காப்பாற்ற முதல் கதையில் வந்த மெடிக்கல் குடோனிலிருந்து மருந்தை வாங்கிக் கொண்டு ஊருக்குச் செல்கிறார். அந்த மருந்தை எடுத்துக் கொண்ட சில குழந்தைகள் இறந்து போகிறார்கள்.

அக்கற

மெடிக்கல் குடோனில் வேலை செய்யும் வெங்கட் பிரபுவை அந்த குழந்தைகளின் மரணத்துக்குக் காரணம் என போலீஸ் கைது செய்கிறது. அவை போலி மருந்துகள் என்பது தெரிய வருகிறது. வெங்கட் பிரபுவை எப்படியாவது காப்பாற்றி விடுகிறேன் என்கிறார் முதலாளி டி.சிவா. ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. நீதிமன்றத்தில் வெங்கட் பிரபுவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்த ஆறு கதைகளையும் ஒரேயொரு பைல் இணைக்கிறது. அது எப்படி என்பதுதுன் இந்தப் படத்தின் சுவாரசியம்.

ஒவ்வொரு தனிக்கதை முடியும் போதும் நாம் எதிர்பார்க்காத ஒரு திருப்புமுனை வருகிறது. அதுதான் இந்த ஆறு கதைகளையும் தூக்கி நிறுத்துகிறது.

இப்படத்தை ஒரு ஆந்தாலஜி படம் என்றும் சொல்லலாம். இதுவரை வெளிவந்த ஆந்தாலஜி படங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு அற்புதமான கதை, திரைக்கதை, சுவாரசிய முடிச்சு என பரபரப்புடன் படத்தை நகர்த்தி இருக்கிறார்கள்.

ஆறு கதைகளிலும் யார் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்று சொன்னால், முதல் கதையில் வரும் பிரேம்ஜி, ரெஜினா ஆகிய இருவரைத்தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அந்தக் கதையிலும், அவர்களது நடிப்பிலும் ஒரு ஜீவன் இருக்கிறது.

அவர்களுக்கடுத்து மீனவ கிராமத்து ஏழை அம்மாவாக நடித்திருக்கும் விஜயலட்சுமி யதார்த்தமாக நடித்திருக்கிறார். தன் தாலியைத் திருடியவர்களை எதிர்த்துப் போராடும் காட்சியில் அதிரடி காட்டியிருக்கிறார். ஆறு கதைகளிலும் மற்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களில் யார் சிறப்பு என்றால், இந்தக் கதையில் வரும் டாக்டர் கதாபாத்திரம் சங்கிலி முருகன்தான் சிறப்பு. டாக்டர் என்றால் வெள்ளை கோட் போட்டிருக்க வேண்டுமா என யதார்த்தம் பேசுகிறார்.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் சந்தீப் கிஷன் ஆக்ஷனில் அதிரடி காட்டுகிறார். அக்மார்க் அயோக்கியத்தனத்தில் ஹரிஷ் கல்யாண் ஆச்சரியமூட்டுகிறார். நாற்காலி மீதான வெறியில் ஒரு மகன் இப்படி கூட நடந்து கொள்வாரா என சாந்தனு ஷாக்காக வைக்கிறார். இதை விட ஒரு அப்பாவி இந்த உலகத்தில் இல்லை என வெங்கட் பிரபு வியக்க வைக்கிறார்.

சந்தீப் கிஷன் மனைவியாக பிரியா பவானி சங்கர் சில நிமிடங்கள் வந்து சில வசனம் பேசுகிறார். அவருக்கு அதிக வேலையில்லை. சாந்தனு காதலியாக யார் அது சாந்தினியா, ஒரு குளோசப் கூட வைக்கவில்லை.

“அறை எண் 305ல் கடவுள், சதுரங்க வேட்டை” உள்ளிட்ட சில பல படங்களை சில கதைகள் ஞாபகப்படுத்துகின்றன.

ஆறு ஒளிப்பதிவாளர்கள், ஆறு இசையமைப்பாளர்கள், ஆறு எடிட்டர்கள் என ஒவ்வொருவரும் அவரவர் பெயரை முத்திரை பதிக்க உழைத்திருக்கிறார்கள். சில கதைகளில் சில பாடல்கள் வந்து செல்கின்றன, ஆனால், மனதில் பதியவில்லை.

இப்படி ஒரு கதை(களை), அதற்கான புத்திசாலித்தனமான திரைக்கதை, கதைக்களம், டைட்டிலிலேயே தென்சென்னைக் கதைகள் எனப் போடுகிறார்கள். (வட சென்னை படங்கள் மீது ஏதாவது கோபமோ ?).

முதல் கதையில் ஆரம்பமாகும் ஒரு சுவாரசியம், விறுவிறுப்பு போகப் போக இன்னும் அதிகமாக வேண்டும். ஆனால், இடையிடையில் வேகத் தடை போல சில சினிமாத்தனமான காட்சிகள் வந்து அதைத் தடுத்து விடுகிறது.

ஓடிடி வெளியீடு என்று முன்னரே முடிவு செய்திருக்க மாட்டார்கள் போலும். இரண்டு கதைகளை வழக்கமான திரை அளவை விட பழைய 35 எம்எம் முறை அளவில் காட்டுகிறார்கள். அதனால் எந்த ஒரு ஈர்ப்பும் ஏற்படவில்லை.

ஓடிடி என படம் வரும் போது ஒலி அளவிலும், இசை மிக்சிங் அளவிலும் கவனம் செலுத்துவது நல்லது. பல காட்சிகளில் வசனம் புரியவேயில்லை. பின்னணி இசை திடீர் திடீரென ஏறுகிறது, இறங்குகிறது.

ஓடிடியில் வரும் படங்கள், அதிலும் ஆந்தாலஜி வகைப் படங்கள் நம் பொறுமையை நிறையவே சோதிக்கிறது என நினைத்த ரசிகர்களுக்கு இந்த கசடதபற நிச்சயம் ஒரு மாற்றத்தைக் கொடுக்கும். புதிய முயற்சிகளை மனமார வரவேற்போம்.

கசடதபற - ரசிக்க வைக்கும் வல்லினம்

 

கசடதபற தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

கசடதபற

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓