நவரசா,Navarasa

நவரசா - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

நடிகர்கள் : சூர்யா, பிரக்யா மார்டின், விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, பார்வதி, அதர்வா முரளி, பாபி சிம்ஹா, யோகி பாபு, ரம்யா நம்பீசன், பிரசன்னா, டெல்லி கணேஷ், அதிதி பாலன், ரித்விகா, ரமேஷ் திலக் மற்றும் பலர்....
இயக்குனர்கள் : பிஜாய் நம்பியார், ப்ரியதர்ஷன், கவுதம் மேனன், அரவிந்த் சாமி, கார்த்திக் சுப்பராஜ், வஸந்த் எஸ்.சாய், ரதீந்திரன் ஆர்.பிரசாத், சர்ஜூன், கார்த்திக் நரேன்
நேரம் : 5 மணி நேரம் 6 நிமிடம்
வெளியான தேதி : ஓடிடி (நெட்பிளிக்ஸ்)
ரேட்டிங் : 2.75/5

மணிரத்னம், ஜெயேந்திரா பஞ்சாபகேசன் தயாரிப்பில், நவரசங்களான “கோபம், கருணை, தைரியம், அருவெறுப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சரியம்” என 9 உணர்வுகளின் அடிப்படையில், 9 இயக்குனர்களின் இயக்கத்தில் பிரபல நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ள ஓடிடி படம் நவரசா.

இதற்கு முன்பு வெளிவந்த ஆந்தாலஜி வகைப்படங்களில் இருந்து இந்தப் படம் மாறுபட்டிருக்கும் என எதிர்பார்த்தால் வழக்கம் போல அதில் ஏமாற்றமே. ஒரு சில கதைகளைத் தவிர மற்ற கதைகள் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆந்தாலஜி படம் என்றாலே இப்படித்தான் இருக்க வேண்டுமோ என்ற வரையறைக்குள் இருந்து இந்தப் படமும் ஏன் மாறவில்லை என்பது வியப்புதான்.


நவரசம் - கருணை
படம் - எதிரி

இயக்குநர் - பிஜாய் நம்பியார்
நடிகர்கள் - விஜய் சேதுபதி , பிரகாஷ் ராஜ், ரேவதி
ரேட்டிங் - 2.25/5

தனது அண்ணன் கொலைக்குக் காரணமாக இருந்த ரேவதியின் கணவர் பிரகாஷ்ராஜைக் கொலை செய்கிறார் விஜய் சேதுபதி. தான் செய்த கொலைக்கு ரேவதியிடம் பாவ மன்னிப்பு கேட்க முயற்சிக்கிறார். ரேவதி அவரை மன்னித்தாரா இல்லையா என்பதுதான் கதை.

விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ் இருவருமே இந்தக் கதையில் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். கணவரைப் பறிகொடுத்த சோகத்தில் ரேவதி எப்போதுமே அழுது கொண்டிருக்கிறார். அசோக் செல்வன் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை.

உணர்வுபூர்வமாக, அழுத்தமாக சொல்லப்படாத எதிரி ஏமாற்றத்தைத் தருகிறார்.


நவரசம் - நகைச்சுவை
படம் - சம்மர் ஆப் 92

இயக்குநர் - ப்ரியதர்ஷன்
நடிகர்கள் - யோகி பாபு, ரம்யா நம்பீசன் நெடுமுடி வேணு
ரேட்டிங் - 2.0/5

பள்ளியில் நான்கைந்து வருடம் 9வது வகுப்பில் பெயிலான யோகி பாபு, பிரபல நடிகராக பள்ளி நூற்றாண்டு விழாவிற்கு வருகை தருகிறார். அப்போது தன்னுடைய பள்ளி நாட்களைப் பற்றிப் பேசுகிறார். அதில் நகைச்சுவை என்ற பெயரில் ஒரு மட்டமான ரசனையை சேர்த்திருக்கிறார்கள்.

மேடையில் பிளாஷ்பேக்கை ஒரு 5 நிமிடம் சொல்லி தன் வேலையை முடித்து விடுகிறார் யோகி பாபு. பிளாஷ்பேக்கில் பள்ளி மாணவனாக அவருக்குப் பதில் வேறு ஒரு பையன் நடித்திருக்கிறார். பள்ளி முதல்வர் நெடுமுடி வேணு, அவரது மகள் டீச்சர் ரம்யா நம்பீசன். ரம்யா ஆசையாய் வளர்க்கும் நாயை வைத்து கிளைமாக்சில் நகைச்சுவை என்று நாற்றமடிக்க வைத்துவிட்டார்கள்.

மதிய உணவு சாப்பிடும் நேரத்தில் சரியாக அந்த கிளைமாக்ஸ் காட்சி. உவ்வே....வாந்தி வந்ததுதான் மிச்சம். அதையும் அந்த பீ குட்டையை அவ்வளவு குளோசப்பிலா காட்டுவீர்கள் ?.

சிரிப்பு வந்ததை விட ச்சீச்சீ....என்று சொல்ல வைத்ததுதான் மிச்சம்.


நவரசம் - ஆச்சரியம்
படம் - புராஜக்ட் அக்னி

இயக்குநர் - கார்த்திக் நரேன்
நடிகர்கள் - அர்விந்த் சுவாமி, பிரசன்னா, பூர்ணா
ரேட்டிங் - 3/5

இந்தப் படத்தைப் பார்த்து முடித்ததும் கார்த்திக் நரேன், இதற்கான கதையை எங்கிருந்து சுட்டிருப்பார் என்றுதான் யோசிக்க வைத்தது. சயின்ட்டிஸ்ட்டான அரவிந்த்சாமி நிஜத்தை விட மனதில் நினைப்பதற்கான சக்தி அதிகம் இருக்கிறது என தனது நண்பன் பிரசன்னாவிற்கு புரிய வைக்க முயற்சிக்கிறார். கடந்த காலத்திற்குச் சென்று தனது வரலாற்றில் சில மாற்றங்களைச் செய்ததால் மனைவி, மகனை நிகழ்காலத்தில் இழக்கிறார். அவர் சொல்வது நிஜமா, பொய்யா என்பதுதான் புராஜக்ட் அக்னி.

ஒரு அறைக்குள்ளேயே அரவிந்த்சாமி, பிரசன்னா இருவரும் ஆங்கிலத்தில்தான் அதிகமாகப் பேசிக் கொள்கிறார்கள். அதற்காக வரும் சப்-டைட்டிலில் அவ்வளவு எழுத்துப் பிழை. அதையும் மீறி இந்தப் படத்தை ரசிக்க வைப்பது அந்த கிளைமாக்ஸ் டிவிஸ்ட். யாருமே எதிர்பார்க்காத ஒரு திருப்பம். நவரசத்தில் ஆச்சரியம் என்பதை அழுத்தமாய் உணர்த்தியிருக்கிறார் கார்த்திக் நரேன். அரவிந்த்சாமி, பிரசன்னா இருவருமே அவரவர் கதாபாத்திரங்களில் பொருத்தமாய் நடித்திருக்கிறார்கள்.

புராஜக்ட் அக்னி ஆச்சரியம் கலந்த ஆஹா.


நவரசம் - அருவெறுப்பு
படம் - பாயாசம்

இயக்குநர் - வசந்த் S சாய்
நடிகர்கள் - டெல்லி கணேஷ், ரோகிணி, அதிதி பாலன், கார்த்திக் கிருஷ்ணா
ரேட்டிங் - 3/5

1965களில் நடக்கும் கதை. திருமணமான 90 நாட்களிலேயே விதவையான தனது மகள் அதிதி பாலனின் நிலைமையை நினைத்து தவிப்பவர் டெல்லி கணேஷ். தனது அண்ணன் பேத்தியின் திருமணத்திற்கு வேண்டா வெறுப்பாகச் சென்று அங்கு ஒரு பாயாசத்தில் ஒரு விஷயத்தைச் செய்கிறார். அதுதான் இப்படத்தின் கதை.

1965ம் ஆண்டை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்தக் காலத்து பிராமண சமூகத்து வீடு. அந்தக் காலத்து கார், குதிரை வண்டி, கல்யாண வீடு, கதாபாத்திரங்கள் என கடுமையாக உழைத்திருக்கிறார் இயக்குனர் வசந்த் சாய்.

எந்த ஒரு இடத்திலும் டெல்லி கணேஷ், ரோகிணி, அதிதி பாலன், கார்த்திக் கிருஷ்ணா, பகவதி பெருமாள் ஆகியோர் நடித்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாத அளவிற்கு யதார்த்தமான நடிப்பு.

பாயாசம் என்ற இனிப்பில் வாழ்க்கையின் கசப்பைச் சொல்லியிருக்கிறார் வசந்த்.


நவரசம் - அமைதி
படம் - அமைதி

இயக்குநர் - கார்த்திக் சுப்புராஜ்
நடிகர்கள் - சிம்ஹா, கவுதம் வாசுதேவ் மேனன், மாஸ்டர் தருண்
ரேட்டிங் - 2.5/5

ஈழத்தில் முன்னொரு காலத்தில் என டைட்டில் வந்ததுமே ஜகமே தந்திரம் படத்தை நினைக்க வைத்து பயமுறுத்துகிறார் கார்த்திக் சுப்பராஜ். எங்கே மீண்டும் குழப்பமான ஈழ அரசியலைப் பேசி விடுவாரோ என்று எதிர்பார்த்தால், போர்க்களத்தில் காணாமல் போன தனது நாய்க்குட்டியைத் தேடி வரும் சிறுவனுக்கு உதவி, தனது இன்னுயிரை விடுகிறார் பாபி சிம்ஹா.

கவுதம் மேனன் ஆங்கிலம் கலந்த தமிழைத்தான் பேசுவார். இந்தப் படத்தில் ஈழத்துத் தமிழைப் பேசியிருக்கிறார். என்ன புரிந்தது என்று திரும்பவும் போட்டுப் பார்த்தால்தான் புரியும்.

ஒரே இடத்தில் நடக்கும் கதை. உயிரின் மகத்துவத்தை யார் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லும் படம்.

அமைதி, அன்பால் கொஞ்சம் கலங்க வைக்கும்.


நவரசம் - கோபம்
படம் - ரௌத்திரம்

இயக்குநர் - அர்விந்த் சுவாமி
நடிகர்கள் - ரித்விகா, ஸ்ரீராம், அபிநய ஸ்ரீ, ரமேஷ் திலக், கீதா கைலாசம்
ரேட்டிங் - 3.25/5

அரவிந்த்சாமிக்குள் இப்படி ஒரு இயக்குனர் ஒளிந்திருக்கிறாரா என்று ஆச்சரியப்பட வைக்கிறது. கந்து வட்டி வாங்கும் அழகம் பெருமாளைக் கொலை செய்கிறார் ஸ்ரீராம். அவர் ஏன் கொலை செய்தார் என்பதுதான் ஒரு ஏழைக் குடும்பத்தின் கண்ணீர்க் கதை.

பெண் போலீஸ் அதிகாரியாக சரியான மிடுக்கு காட்டியிருக்கிறார் ரித்விகா. மறைந்த இயக்குனர் கே பாலசந்தர் மருமகள், கீதா கைலாசம் ஏழைத் தாயாக ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். ஸ்ரீராம், அபிநய ஸ்ரீ இருவருமே இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

நிகழ்காலத்தையும், கடந்த காலத்தையும் இணைக்கும் திரைக்கதை யுக்தியை சுவாரசியம்.

இந்த நவரசாவின் 9 கதைகளில் உருக வைக்கும் கதை இது மட்டுமே.


நவரசம் - பயம்
படம் - இன்மை

இயக்குநர் - ரதீந்திரன் R பிரசாத்
நடிகர்கள் - சித்தார்த், பார்வதி திருவோத்து, அம்மு அபிராமி
ரேட்டிங் - 3.5/5

ஒரு 30 நிமிடக் கதையில் ஒரு முழு நீளப் படத்திற்குண்டான சுவாரசியத்தைக் கொடுத்திருக்கும் படம் இதுதான். பணத்திற்கு ஆசைப்பட்டு வயதானவரைத் திருமணம் செய்து கொண்டு அவரைக் கொன்று பணத்தை அடைந்து வசதியான வாழ்க்கை வாழும் பார்வதியை சித்தார்த் எதற்காகப் பழி வாங்குகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.

சித்தார்த், பார்வதி இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். அதிலும் தன்னுடைய பழைய வாழ்க்கையைப் பற்றி சித்தார்த் சொல்லச் சொல்ல பார்வதி தவிக்கும் தவிப்பு, வாவ் போட வைக்கிறது. நவசரத்தில் பயம் என்பதை யதார்த்தமாக நடித்து மற்ற 8 பட நடிகர், நடிகைகளுக்கும் சரியான சவால் விட்டிருக்கிறார் பார்வதி. அவருக்கு சிறிதும் சளைக்காமல் ஈடு கொடுக்கிறார், சிறு வயது பார்வதியாக அம்மு அபிராமி. அவருடைய கண்களே அவருடைய பேராசையைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது.

இன்மை என்பதை இனிமை என்றே சொல்ல வேண்டும்.


நவரசம் - தைரியம்
படம் - துணிந்த பின்

இயக்குநர் - சர்ஜூன்
நடிகர்கள் - அதர்வா, அஞ்சலி, கிஷோர்
ரேட்டிங் - 2.5/5

நக்சலைட்டுகளைப் பிடிக்க இருக்கும் படையில் புதிதாகச் சேரும் அதர்வா, சண்டையில் அடிபட்ட நக்சலைட்டான கிஷோரை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் சொல்ல பணிக்கப்படுகிறார். அவரிடமிருந்து கிஷோர் தப்பிக்க அடுத்து என்ன என்பதுதான் கதை.

புதிய அதிரடிப்படை வீரராக அதர்வா. மிடுக்காக இருந்தாலும் துணிச்சல் இல்லாமல் இருக்கிறார். அவருக்கே துணிச்சல் வரவைக்கும் அளவிற்கு ஆலோசனை சொல்கிறார் நக்சலைட்டான கிஷோர். கணவன் அதர்வாவைக் காணாமல் போலீஸ் நிலையத்தில் வம்பளக்கும் காட்சியோடு நின்றுவிடுகிறது அஞ்சலி நடிப்பு.

தைரியமாக சில அரசியல் வசனங்களைச் சேர்த்திருக்கலாம்.


நவரசம் - காதல்
படம் - கிடார் கம்பியின் மேலே நின்று

இயக்குநர் - கவுதம் வாசுதேவ் மேனன்
நடிகர்கள் - சூர்யா, ப்ரயகா ரோஸ் மார்டின்
ரேட்டிங் - 2.75/5

காதல் என்றாலே கவுதம் மேனன் என்று சொல்லுமளவிற்கு ஆகிவிட்டது. இருபது வருடங்களுக்கும் மேலாக இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கும் காதலைக் கடத்தி விடுகிறார்.

இசையமைப்பாளராகத் துடிக்கும் சூர்யா, அவரிடம் பாட வரும் ப்ரயகா இருவரும் காதலில் விழுகிறார்கள். அந்தக் காதல் என்ன ஆனது என்பதுதான் கதை. சூர்யாவை விடவும், ஒவ்வொரு நொடியிலும் காதல் பார்வையை தன் கண்களாலே வீசி வசீகரிக்கிறார் ப்ரயகா. வாரணம் ஆயிரம் சூர்யாவை மீண்டும் கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள் கவுதமும், சூர்யாவும். சீக்கிரம் முழு நீள காதல் படம் பண்ணுங்கள் என கேட்க வைக்கிறார்கள்.

சூர்யாவும், ப்ரயகாவும் பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். எந்த டுவிஸ்ட்டும் இல்லை. ஆனாலும், ஏனோ பிடித்துவிடுகிறது.

காதல் எங்கு வேண்டுமானாலும் நிற்கும், தோற்றாலும் நினைவில் நிற்கும்.


நவரசா என்ற இந்த 9 அரை மணி நேரத்திற்கும் சற்று கூடுதலான கதைகளில் சில கதைகள் சரியான அழுத்தத்துடன், உணர்வுடன், களத்துடன் சொல்லப்பட்டிருக்கின்றன. சில கதைகள் சொல்ல வந்ததை சரியாகச் சொல்லாமல் சிக்கித் தவிக்கின்றன. சில கதைகளின் படமாக்கம் ஒளிப்பதிவாளர்களாலும், சிலவற்றின் உணர்வு இசையமைப்பாளர்களாலும் ரசிக்க வைக்கிறது.

5 மணி நேரம் 6 நிமிடங்கள் ஓடக் கூடிய கதையைத் தொடர்ச்சியாகப் பார்ப்பது கடினமான ஒன்று. வேண்டுமென்பதை தேர்வு செய்து பார்க்கலாம். ஆனாலும், மணிரத்னத்தின் தயாரிப்பு என்பதால் அனைத்து கதைகளையுமே ரசிக்க வைத்து விடுவார் என்ற எதிர்பார்ப்புடன் பார்க்க முடியவில்லை என்பது வருத்தமே.

நவரசா - சில ரசனை, சில சோதனை...

 

நவரசா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

நவரசா

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓