தி பிரைஸ்ட் (மலையாளம்),The Priest
Advertisement
3.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி
டைரக்சன் : சாபின் டி.சாக்கோ
இசை : ராகுல்ராஜ்
நடிப்பு : மம்முட்டி, மஞ்சு வாரியர், நிகிலா விமல், பேபி மோனிகா, ரமேஷ் பிஷரோடி மற்றும் பலர்
வெளியான தேதி : 11 மார்ச் 2021
நேரம் : 2 மணி 27 நிமிடங்கள்
ரேட்டிங் : 3.5/5

ஆசிரமத்தில் வளர்ந்தபடியே, பள்ளியில் படிக்கும் பேபி மோனிகா யாருடனும் கலகலப்பாக பழகாமல் விசித்திரமான நடவடிக்கைகளுடன் தனித்தே இருக்கிறார். ஒருமுறை பள்ளிக்கு சென்றுவிட்டு ஆசிரமத்துக்கு திரும்பாமல் வெளியே தப்பிக்கும் பேபி மோனிகா, ஒரு கோடீஸ்வர பெண்மணியால் காப்பாற்றப்பட்டு அவருடன் தங்குகிறார். ஆனால் அன்றிரவே அந்த பெண்மணி தற்கொலை செய்துகொண்டு மரணத்தை தழுவுகிறார்.

அந்த மரணத்தை விசாரிக்க அந்தப்பகுதி போலீஸ் அதிகாரியுடன் பாதரான மம்முட்டி களமிறங்குகிறார். அந்த பெண்மணியின் குடும்பத்தை சேர்ந்த அனைவருமே குறிப்பிட்ட கால இடைவெளியில் தற்கொலைசெய்து கொண்டு மரணித்தது தெரிய வருகிறது.. ஆனால் சில தடயங்கள் மூலம் அவை அனைத்துமே கொலை என கண்டுபிடிக்கிறார் மம்முட்டி. ஆனால் கடைசியாக அந்த பெண்மணி கொலை செய்யப்பட்ட சமயத்தில், உடன் தங்கியிருந்த பேபி மோனிகா மட்டும் எப்படி கொலைகாரர்களிடம் இருந்து தப்பினார் என்கிற ஆச்சர்யம் கலந்த சந்தேகம் மம்முட்டிக்கு ஏற்படுகிறது.

அதுகுறித்து விசாரிக்க மோனிகாவின் பள்ளிக்கு செல்கிறார் மம்முட்டி. இந்தசமயத்தில் பள்ளியில் புதிதாக வேலைக்கு சேரும் ஆசிரியையான நிகிலா விமலிடம் மட்டும் நன்றாக ஒட்டிக்கொண்டு பழகுகிறார் பேபி மோனிகா. அவரும் ஆசிரமத்தில் தனியாக வளர்ந்தவர் என்பதால், மோனிகாவிடம் பாசம் செலுத்துகிறார். இதனால் மோனிகா குறித்து விசாரிக்க வரும் மம்முட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் நிகிலா.

இந்தநிலையில் சம்மர் லீவுக்கு தனது சொந்த ஊருக்கு செல்லும்போது பேபி மோனிகாவையும் அழைத்து செல்கிறார் நிகிலா விமல்.. ஆனால் அங்கே மோனிகாவின் விசித்திரமான நடவடிக்கைகள் நிகிலாவுக்கு பயத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் மம்முட்டிக்கே போன்செய்து விவரத்தை சொல்ல, அங்கே வரும் மம்முட்டி, மோனிகாவின் விசித்திரமான நடவடிக்கைகளுக்கு காரணம் என்னவென்று கொஞ்சம் கொஞ்சமாக கண்டுபிடிக்கிறார். அவர் கண்டுபிடிக்கும் தவகல்கள் நிகிலாவுக்கு மட்டுமல்ல, படம் பார்க்கும் நமக்கும் சேர்த்து, பற்பல ஆச்சர்யங்களையும் அதிர்ச்சியையும் தருகிறது. யார் அந்த மோனிகா என்கிற சஸ்பென்சை, தியேட்டருக்கு சென்று பார்த்து தெரிந்து கொள்வது தான் முறையாக இருக்கும்.

த்ரில்லர், மிஸ்ட்ரி த்ரில்லர், ஹாரர் த்ரில்லர் என விதவிதமான ஜானர்களில் வெளிவரும் படங்களின் மத்தியில் இந்தப்படம் இவை அனைத்தும் கலந்த கலவையாக, அதேசமயம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராகவும் உருவாக்கி இருக்கிறது.

படம் முழுதும் ஒரே கருப்பு உடையில் அடர்ந்த தாடியுடன் பாதர் கார்மென் பெனடிக்ட் ஆக வரும் மம்முட்டி அந்த கதாபாத்திரத்திற்கு ஏக பொருத்தம்.. இவ்வளவு அழகாக துப்பறிகிறாரே, பேசாமல் மம்முட்டிக்கு போலீஸ் கதாபாத்திரம் கொடுத்திருக்கலாமே என்று நினைக்கும்போதுதான் அவரது பாதர் கதாபாத்திரத்திற்கான காரணம் தெரிய வருவது சுவாரஸ்யம். பேபி மோனிகா பற்றிய முடிச்சுக்களை அவர் அவிழ்க்கும் விதம், மீண்டும் ஒரு மௌனம் சம்மதம் படம் பார்த்தது போல இருக்கிறது..

முதன்மை நாயகி என மஞ்சு வாரியர் இருந்தாலும் படம் முழுதும் வரும் நிகிலா விமலுக்குத்தான் கூடுதல் வேலை.. பேபி மோனிகாவுடன் சேர்ந்து அவர் தனது வீட்டில் தனியாக தங்கும் நிமிடங்கள் அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் எதிர்பாராத மிரட்சிதான்.

சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் இருந்து மமுட்டியுடன் இணைந்து நடித்திராத மஞ்சு வாரியர், முதன்முறையாக அவருடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் அதிலும்கூட, இருவரும் இணைந்து நடித்துள்ள காட்சிகள் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வருவது இருதரப்பு ரசிகர்களுக்கும் ஏமாற்றமே. க்ளைமாக்ஸ் நெருங்கும் சமயத்தில் என்ட்ரி கொடுத்தாலும் மஞ்சுவின் கதாபாத்திரம் தான் கதைக்கு ட்விஸ்ட்டே.

இந்த மூவருக்கும் ஈடுகொடுத்து மொத்தப்படத்தையும் தனது அபாரமான நடிப்பால் நகர்த்தி செல்லும் பேபி மோனிகாவை எவ்வளவு பாரட்டினாலும் தகும். பல காட்சிகளில் நமக்கே அவரை பார்க்கும்போது பயம் ஏற்படும். அந்த அளவுக்கு மிரட்டி இருக்கிறார்.

பெரும்பாலும் இருளிலேயே நடைபெறும் நிகழ்வுகளை, த்ரில்லிங் மூடு மாறாமல் தனது காமராவில் கடத்தி வந்து கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் அகில் ஜார்ஜ். நீங்கள் அவ்வப்போது சில காட்சிகளில் ஜில்லிட்டு நடுங்கினால் அதில் ராகுல் ராஜின் பின்னணி இசைக்கு பெரும்பங்கு உண்டு.

படத்தின் துவக்கமே ஏதோ ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களின் தொடர் தற்கொலைகளை பற்றி மம்முட்டி ஆராய்வதாகவும், பின்னர் அவை அனைத்தும் திட்டமிட்ட கொலையே என கண்டுபிடிப்பதாகவும் நகர்வதால் இது வழக்கமான ஒரு படம் தானே என்கிற எண்ணம் படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படும்.. ஆனால் அந்த உண்மையை அவர் படம் தொடங்கிய அரைமணி நேரத்திற்குள் கண்டுபிடித்து விடுவதால், இனி மீதிப்படத்தில் என்ன விஷயம் இருக்கப்போகிறது என்கிற லேசான எதிர்பார்ப்பு எழவே செய்கிறது. ஆனால் அந்த நேரத்தில், ஒரு யு டர்ன் எடுத்து, கதையின் ரூட்டையே மாற்றியதில் தான் அறிமுக இயக்குனர் ஜோபின் டி.சாக்கோவின் புத்திசாலித்தனமும் படத்தின் வெற்றியும் அடங்கி இருக்கிறது.

குறிப்பாக க்ளைமாக்ஸ் நெருங்கும்போது, நாம் யூகிக்க முடியாதபடி ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் ஆக வெளிப்படுவதை பார்க்கும்போது, இந்தப்படம் ஏன் வெற்றிக்கோட்டை எளிதாக தொட்டுள்ளது என்பது நமக்கே கண்கூடாக தெரிகிறது. அந்தவகையில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக அதிரடி என்ட்ரி கொடுத்துள்ளார் மம்முட்டி

தி பிரைஸ்ட் : த்ரில் அன்லிமிடெட்

 

பட குழுவினர்

தி பிரைஸ்ட் (மலையாளம்)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மம்மூட்டி

மலையாள திரையுலகினர் சூப்பர் ஸ்டார் என போற்றப்படுவர் மம்மூட்டி, 1951-ம் ஆண்டு செப்., 7ம் தேதி, கோட்டயம் அருகே உள்ள வைகோமில் முகமது குட்டியாக பிறந்தவர். சினிமாவுக்காக மம்மூட்டி என பெயரை மாற்றிக்கொண்டார். மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கு சல்பாத் என்ற மனைவியும், சுருமி, துல்கர் சல்மான் என்ற மகனும் உள்ளார். தற்போது இவரது மகனான துல்கர் சல்மானும் நடிக்க வந்துவிட்டார். இருந்தாலும் தொடர்ந்து சூப்பர் ஸ்டாராகவே வலம் வருகிறார்.

மேலும் விமர்சனம் ↓