காடன்,Kaadan

காடன் - பட காட்சிகள் ↓

காடன் - சினி விழா ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஈராஸ் மோஷன் பிக்சர்ஸ்
இயக்கம் - பிரபு சாலமன்
இசை - ஷாந்தனு மொய்த்ரா
நடிப்பு - ராணா டக்குபதி, விஷ்ணு விஷால், ஜோயா ஹுசைன்
வெளியான தேதி - 26 மார்ச் 2021
நேரம் - 2 மணி நேரம் 15 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

மக்களின் பிரச்சினைகள், நாட்டின் பிரச்சினைகள் ஆகியவற்றைப் பற்றித்தான் அதிகமான திரைப்படங்கள் வந்துள்ளன. ஆனால், விலங்குகளின் பிரச்சினைகளைப் பற்றி எடுத்துச் சொல்லும் படங்கள் இதுவரையில் வந்திருக்கிறதா என்பது சந்தேகம்தான்.

நாட்டில் நடமாடும் மனிதர்கள் நலமாக வாழ, காட்டில் நடமாடும் விலங்குகளும், காடும் நன்றாக இருக்க வேண்டும் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும். என்று காடுகள் அழிகிறதோ, மரங்கள் அழிகிறதோ, விலங்குகள் அழிகிறதோ அன்று மனிதர்களும் அழிந்து போவார்கள் என்பதுதான் இயற்கையான உண்மை.

இயற்கையே ஒரு சுழற்சிதான். காடு, நாடு, மனிதர்கள், விலங்குகள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்ந்தால்தான் இந்த பூமி இருக்கும் என்ற பேருண்மையை சொல்லியிருக்கும் படம்தான் இந்த காடன்.

இயக்குனர் பிரபு சாலமன் எடுத்துக் கொண்ட கருவும், கதையும் மிக மிகச் சிறப்பு. ஆனால், அதை திரைக்கதை வடிவமாக்கி சுவாரசியமாகத் தருவதில்தான் பாதை மாறிவிட்டார். திரைக்கதையில் எந்த ஒரு விறுவிறுப்போ, திருப்பமோ இல்லாததுதான் குறையாகிவிட்டது.

கோயம்பத்தூருக்கு அருகில் உள்ள காட்டில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய காட்டுப் பகுதியில் லட்சம் மரங்களை நட்டு, அங்குள்ள யானைகள் உள்ளிட்ட மிருகங்களுக்கும் காவலனாக இருக்கிறார் காடன் ராணா டகுபதி. அந்த இடத்தில் ஒரு டவுன்ஷிப்பை உருவாக்க மத்திய அமைச்சர் அவரது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார். அதை எதிர்த்து தடை வாங்குகிறான் காடன். அவர் மீது வீண் பழி சுமத்தி சிறையில் தள்ளுகிறார்கள். அவர்கள் சிறையிலிருந்து வருவதற்குள் மிருகங்கள் வருவதைத் தடுக்க டவுன்ஷிப்புக்குண்டான காம்பவுண்டு சுவரைக் கட்டி முடிக்கிறார்கள். சிறையிலிருந்து விடுதலையாகி காட்டிற்குத் திரும்பும் காடன் மீண்டும் அந்த டவுன்ஷிப்பிற்கு எதிராக களமிறங்குகிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அசாம் மாநிலத்தில் பாரஸ்ட் மேன் ஆப் இந்தியா என்றழைக்கப்பட்ட ஜாதவ் பாயன்ங் என்பவர் சுமார் 1300 ஏக்கர் பரப்பளவிற்கு அங்கு மரங்களை நட்டு பெரிய காடு ஒன்றை உருவாக்கியவர். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சில நிஜ சம்பவங்களுடன் கற்பனை கலந்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் காடன் ஆக ராணா டகுபட்டியின் நடிப்பு இயல்பாக அமைந்துள்ளது. ஆனால், உடல்மொழியை மட்டும் பிதாமகன் விக்ரமிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறார். ராணா தன்னால் இப்படிப்பட்ட கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என நிரூபித்திருக்கிறார்.

சில காட்சிகளில் அவரை கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல காட்டியிருக்கத் தேவையில்லை. இந்திய அரசிடமிருந்து விருது வாங்கிய ஒரு கதாபாத்திரத்தை யாரோ ஒரு மனிதர் போல பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளுகிறார்கள், கொடுமைப்படுத்துகிறார்கள்.

விஷ்ணு விஷால், கும்கி யானையை வைத்திருப்பவராக நடித்திருக்கிறார். வழக்கம் போல கூடவே இருக்கும் ஒரு மாமா கதாபாத்திரம், தம்பி ராமையாவை நடிக்க வைத்தால் கும்கி படம் போல வந்துவிடும் என இப்படத்தில் தெலுங்கு நடிகரை நடிக்க வைத்திருக்கிறார்கள். விஷ்ணுவும் இக்கதாபாத்திரத்தில் வேறு விதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய யானை விபத்தில் சிக்கியதும் அவர் கதறித் துடிக்கும் போது நமக்கு கலங்கிவிடுகிறது. இடைவேளைக்குப் பிறகு அவர் கதாபாத்திரம் மீண்டும் வரும் என்று எதிர்பார்த்தால் இயக்குனர் ஏமாற்றிவிட்டார்.

சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய படம் என்று வரும் போது எப்படியாவது ஒரு கதாபாத்திரத்தையாவது பத்திரிகையாளர் என வைத்துவிடுவார்கள். அப்படி இந்தப் படத்திலும் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது, அவர்தான் படத்தின் கதாநாயகி. காட்டில் திரியும் தீவிரவாதப் பெண்ணாக இரண்டாவது கதாநாயகி. அவரைப் பார்த்ததும் விஷ்ணு விஷால் காதலிக்க ஆரம்பிக்கிறார். இரண்டு கதாநாயகிகளுமே ஒரு பக்கம் வசனம் பேசியிருந்தால் அதிகம்.

மத்திய அமைச்சராக ஆனந்த் மகாதேவன். பல தமிழ்ப் படங்களில் பார்த்த அதே டெம்ப்ளேட் வில்லன் கதாபாத்திரம்.

கோயம்பத்தூர் பக்கம் கதை நடப்பதாக உள்ளது. ஆனால், வட இந்திய நகரங்களில் உள்ள கட்டிடங்களைக் காட்டுகிறார்கள். ஒரே சமயத்தில் ஹிந்தி, தெலுங்கு என படமாக்கியதால் ஹிந்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. காவல் துறையினர் அணிந்திருக்கும் சீருடையின் வண்ணம் கூட தமிழ்நாடு காவல் துறையினருடையது அல்ல. இப்படி சில காட்சிகள், கதாபாத்திரங்கள் நமக்கு அந்நியமாக இருப்பதால் படத்தில் ஒன்ற முடியவில்லை. ராணா, விஷ்ணு தவிர மற்ற முகங்கள் அனைத்துமே ஹிந்தி முகங்களாகவே உள்ளது. நட்சத்திரத் தேர்வில் இயக்குனர் கவனம் செலுத்தியிருக்கலாம்.

எடுத்துக் கொண்ட கதைக்காக மட்டும் பாராட்டலாம். இந்த ஆண்டிற்கான சிறந்த சுற்றுச்சூழல் படத்திற்கான தேசிய விருதைப் பெறும் தகுதி இந்தப் படத்திற்கு உண்டு.




காடன் - காட்டின் காவலன்

 

காடன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

காடன்

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓