தினமலர் விமர்சனம்
அர்ஜூன் நடித்த கண்ணோடு காண்பதெல்லாம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, விக்ரம் நடித்த கிங் உள்ளிட்ட ஏழெட்டு படங்களை இயக்கியவர்...என்றாலும் மைனா படத்தின் மூலம் தான், தனது., வெற்றி கணக்கை தொடங்கினார் பிரபு எனும் சாலமோன் அலைஸ் பிரபுசாலமன். மைனா, கும்கி படங்களில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இயக்கி இருக்கும் கயல், நம் ரசிகர்களின் கயல்விழிகளையும் கவருமா? என பார்ப்போம்...
கதைப்படி., ஆரோன் எனும் அறிமுகநாயகர் சந்திரனும், சாக்ரடீஸ் எனும் வின்சென்ட்டும் சேர்த்து என்னத்த எடுத்துட்டு போகப்போறோம்...செலவழித்து சந்தோஷப்படுவோம்..என வருஷத்தில் பாதிநாள் வேலை மீதிநாள், இனப சுற்றுலா...என இந்தியாவை சுற்றுபவர்கள். ஊரும், உறவுமில்லாத அனாதைகள். இவர்களது வாழ்க்கையில் எதிர்பாராமால் குறுக்கிடுகிறார் கதாநாயகி கயல்விழி எனும் ஆனந்தி!.
குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி ஜமீன் வீட்டு பெண், தன் கல்யாணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் காதலனுடன் ஓடிப்போக உதவியதாக தவறாக அடையாளம் காணப்பட்டு ஜமீனுக்கு அழைத்துவரப்பட்டு, அடி, உதைபட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆரோனுக்கு அந்த ஜமீன் வீட்டு சமையல் சிறுமி (?) கயல் எனும் கயல்விழி அலைஸ் ஆனந்தி மீது கண்டவுடன் காதல் வருகிறது. கயலுக்கும் அடிபட்டு கிடக்கும் ஆரோன் மீது ஏற்படும் இரக்கமோ என்னவோ...ஒருமாதிரி நெஞ்சை பிசைகிறது.
ஆனாலும் கயலை பார்ப்பதற்கு முன்பே., "நாங்கள் காதலர்கள். ஓடிப்போக உதவவில்லை. கீழே அவர்கள் விட்டுச்சென்ற பையை தான் எடுத்துக்கொடுத்தோம்... என எல்லாவிசயத்திலும் அதிகப்படியாக பேசும் ஆரோனும், அவரது நண்பரும் (போலீசையே முதல் இரண்டு சீனில் கலாய்க்கும்...)வாயை திறந்து கூறாதது வாயில் என்ன? இருவருக்கும்கொழுக்கட்டையா இருக்கிறது..? என கேட்க தூண்டுகிறது. சரிபோகட்டும் ஒருவழியாக ஓடிப்போன ஜமீன் வீட்டுப்பெண், ஜமீன் ஆட்களால் தேடிப்பிடித்து இழுத்து வரப்பட்டதும் இவர்களுக்கும் அந்தப்பெண் ஓடியதற்கும் எந்த சம்பந்தமுமில்லை..எனும் உண்மை தெரிய வந்து இவர்கள் விடுவிக்கப்படும் தருணத்தில் கயலைப் பார்க்கும் ஆரோன்., அத்தனைபேர் எதிரிலும் தைரியமாக சாவடி வாங்கியபடியே தன் காதலை போட்டுடைக்கிறார். அவர் மீது பெட்ரோல் ஊற்றி, கயல் கையாலேயே இவர்களை கொளுத்திவிட ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஆனால், அதற்குள் ஜமீன் வீட்டுப்பெண் திரும்ப இழுத்துவரப்பட., மிரட்டி அனுப்பி வைக்கப்படுகின்றனர் ஆரோனும் அவரது நண்பர் சாக்ரடீசும். ஆனாலும், கயல்-ஆரோன் இருவருக்குள்ளும் கொழுந்துவிட்டு எரியும் காதல் தீ., தடை பல கடந்து ஆரோனையும் - கயலையும் ஜோடி சேர்த்ததா? அல்லது காதலர்கள் ஜோடி சேரும் தருவாயில் கன்னியாகுமரி கடற்பகுதியில் ஏற்படும் சுனாமி பேரலை இன்னும் பல உயிர்களுடன் இந்த காதல் ஜோடியின் உயிரையும் பறித்ததா? என்பது எதிர்பாராத திக் திக் கிளைமாக்ஸ்!.
ஆரோனாக வரும் அறிமுக நாயகர் சந்திரன், கயலாக கதாநாயகியாக வரும் ஆனந்தி, சாக்ரடீஸாக ஆரோனின் நண்பராக வரும் வின்சென்ட், பேராசிரியையாக வரும் ஆர்த்தி, ஜெமினி ராஜேஸ்வரி, யார் கண்ணன், பாரதி கண்ணன், போலீஸ் இன்ஸ் ஜேக்கப், ஜமீன் வீட்டு சைலன்ட் - வயலண்ட் தாதா யோகி தேவராஜ், ஜானகி செளந்தர், ஜமீன் பெண்ணின் தந்தை பிளாரென்ட் சி.பெரேரா, வெற்றிவேல் ராஜா, பாலசுப்பிரமணியம், மைம்கோபி, தரணி, அன்புமதி, ஜிந்தா, ஜென்னிஷ் உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
டி.இமானின் இசையில் ஏழு பாடல்கள். ஏழில் டியாலோ , டியாலோ தவிர்த்து மீதி ஆறு பாடல்களும் அறுசுவை விருந்து. வி. மகேந்திரனின் ஒளிப்பதிவு ஓவியப்பதிவு. ஆனால், ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் ஆரம்பத்தில் ஆரோனும், சாக்ரடீஸீம் படத்தில் பேசுவதை பார்த்து ஏதோ புதிதாக சொல்லப்போகிறார் பிரபுசாலமன் என நிமிர்ந்து உட்காரும் ரசிகன்., லாஜிக் இல்லாத வழக்கமான கயல் - ஆரோனின் காதலைப்பார்த்து சலிப்புக்கு உள்ளாகி்றான்!. அதிலும் கயல் மீதான காதலை, ஆரோன் அடி- உதைகளுக்கு இடையே சொல்லும் போது அவ ஏழை வீட்டுப்பெண் என்றாலும் எங்க வீட்டு பொண்ணு., எங்க ஜாதிப் பொண்ணு... என எகிறும் யோகி தேவராஜ். கயல் வீட்டை விட்டு காதலனைத் தேடி மூட்டை முடிச்சுகளுடன் போகும்போது ., நாசமா போ..என காசு கொடுத்து அனுப்புவது..நம்ப முடியாத லாஜிக் ஹம்பக்!. அப்புறம் நாயகனும், நாயகியும் அருகருகே இருந்தும் சந்திக்க முடியாமல் அடிக்கடி தட்டிப்போவது வழக்கமான தமிழ்சினிமா - காதில் பூச்சுற்றும் கடுப்பேற்றல்!!!.
பொதுவாக ஒரு பகுதியில் கடல் உள்வாங்கினால் மற்றொரு பகுதியில் தான் சுனாமி பேரலை ஏற்படும் எனும் அறிவியல் , கயல் - கடல் அலைகளில் அடித்து செல்லப்படுவது, ஆரம்ப காட்சிகளில் இந்தியா முழுதையும் சுற்றும் நாயகனும் , நண்பரும் கல்கத்தா காளி, கங்கை நதி, காசி, கைலாசம், இமயமலை...உள்ளிட்ட (ஹிந்து ) டூரிசம் பகுதிகள் பக்கம் தங்கள் வாடை கூட படாமல், இயக்குநர் சாலமன் பார்த்துக்கொள்வது... உள்ளிட்ட குறைகளையும், இது எல்லாவற்றுக்கும் மேல் இறந்தபின் குடும்பத்திற்கு பணம் வரும் இன்சூரன்ஸ் எதற்கு? எனும் கேள்வியும், தேவாலயத்தில் கமர்ஷியல் ஆட்டமும், பாட்டமும் வைத்து மேலும் வெறுப்பேற்றுவது உள்ளிட்ட குறைகளையும் களைந்திருந்தால் கயல் ரசிகர்களை மையல் கொள்ள வைத்திருக்கும்!.
அவ்வாறு இல்லாதது கயல் காதல் புயலோ, சூறாவளியோ, இப்படத்தில் வருவது மாதிரியான சுனாமியோ அல்ல...அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர எனும் ரீதியில் இருக்கிறது! மொத்தத்தில் கயல் -காதில் பூச்சுற்றல்!!