Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

தொடரி

தொடரி,thoodari
21 அக், 2016 - 11:37 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தொடரி

பிரபு சாலமன் இயக்கத்தில், தனுஷ், கீர்த்தி சுரேஷ், ஜோடி நடிக்க ராதாரவி, தம்பி ராமைய்யா, கருணாகரன், சின்னி ஜெயந்த், ஆர்.வி.உதயகுமர், ஹரீஸ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராம், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட், பிரேம், கும்கி அஸ்வின்... உள்ளிட்டோர் நடிக்க, சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜான் வழங்க, பிரபு சாலமனின் காட் பிக்சர்ஸ்வுடன் இணைந்து செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன் இருவரும் தயாரித்திருக்கும் படம் தான் "தொடரி".


கதைப்படி, தனுஷ் டில்லி டூ சென்னை சி.டி. எக்ஸ்பிரஸ் ரயிலில், பேட்ரி கேண்டின் பாயாக வேலை செய்கிறார். ஒரு நாள், அதே ரயிலில் "முழுசா நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு?" உள்ளிட்ட படங்களில் நடித்த முன்னணி ஹீரோயின் ஸ்ரீஷாவும் பயணிக்கிறார். அந்நாயகியின் டச்சப் கேர்ளாக கீர்த்தி சுரேஷும் உடன் வருகிறார். அவரைப் கண்டவுடன் தனுஷுக்கு காதல் வருகிறது. ஓடும் ரயிலில் உருவான அந்த காதல் கைகூடியதா? காலை வாரியதா..? என்பதுடன் அந்த இரயிலுக்கு இன்ஜின் டிரைவரின் எதிர்பாரா மரணத்தால் ஏற்படும் பெரும் ஆபத்து குறித்தும் அதிலிருந்து, அந்த இரயிலையும், அதில், பயணிக்கும் மத்திய அமைச்சரையும், தன் காதலையும், காதலியையும் தனுஷ் ஹீரோயிசம் காட்டி எப்படி? காபந்து செய்கிறார்..? என்பது ‛‛தொடரி படத்தின் களமும், மொத்தக்கதையும்!


கேன்டின் பாயாக, ட்ரையின் பேட்ரி பூச்சியப்பனாக தனுஷ், கீர்த்தியிடம் "நான் டீ கேனு, நீ குடை அவ்வளவு தான்..." என்பதும் அதே, கீர்த்தியிடம் ஹார்ட் ஷேப் கட்லெட், சூப்பில் ஹார்ட் படம் போட்டும் கொடுத்து காதலை தெரியப்படுத்தும் தனுஷ்., கவிஞர் வைரமுத்துவின் நண்பர் எனக் கூறி பாடகி ஆசையுடன் திரியும் சரோஜா - கீர்த்தியை கவிழ்ப்பதும் ஹாஸ்யம்.


அதே நேரம் ரயிலில் சாதாரண பேட்ரி தொழிலாளி தனுஷ், மினிஸ்டர் ராதாரவி பாதுகாப்பாக வரும் கமாண்டோ படை வீரரிடம் மோதுவதும், கேன்டின் மேனேஜர் தம்பி ராமைய்யாவிடம் காமெடி என்ற பெயரில் அடிக்கடி மோதுவதும் சற்றே போர். அதிலும், கீர்த்தியின் வசம் இருக்கும் நாய்குட்டியை கமெண்டோ வீரரிடம் கொடுத்து பார்த்து கொள்ள சொல்வதும் கண்ணா பார்த்துக்கணும், உன் கன் மாதிரி பார்த்துக்ககூடாது... என்பதும் ரசனை. இதுமாதிரி., வார்த்தை விளையாட்டுகளாலேயே முதல் பாதியை கடத்துகிறார் இயக்குனர்.


"வைரமுத்துசாரிடம் கொஞ்சம் சிவாஜி வாய்ஸ்..." என்ற படி தனுஷை வைரமுத்துவின் நண்பராக வெள்ளாந்தியாக நம்பும் சரோஜா - கீர்த்தி, ஓடும் ரயிலிலேயே தனுஷூடன் பாடல் பதிவில் இறங்குவதும் தனுஷ் சூட்டிய சித்ரா கோஷல் எனும் பெயருடன் பாடகி கனவில் பரிதவிப்பாய் துடிக்கும் காட்சிகளும் முன்பாதி படத்தை தொய்வில்லாமல் பார்த்துக் கொள்கிறது.


ரயிலில் வரும் சென்ட்ரல் மினிஸ்டராக ராதாரவி, கேன்டின் மேனேஜர் தம்பி ராமைய்யா, கவிதை எனக்கடிக்கும் கேன்டின்பாயாக கருணாகரன், தனது சர்வீஸின் கடைசி பயணமாக அந்த டிரையினை இயக்கும் ஆர்.வி.உதயகுமர், ராதாரவியின் பாதுகாப்பு கமாண்டோ படை வீரராக தனுஷூடன் மல்லுக்கு நிற்கும் ஹரீஸ் உத்தமன், டி.டி.ஆர். இமான் அண்ணாச்சி, இன்ஜின் டிரைவர் உதயகுமாருடனும், தன் குடும்பத்துடனும் குடித்துவிட்டு சண்டை போட்டு பாதி வழியில் ரயிலை கோட்டை விடும் உதவி இன்ஜின் டிரைவர் போஸ் வெங்கட், மற்றும் பிற பாத்திரங்களில் வரும் பிரேம், கும்கி அஸ்வின்... கணேஷ் வெங்கட்ராம், சின்னிஜெயந்த், ஏ.வெங்கடேஷ், அனுமோகன், கு.ஞானசம்பந்தம்.... உள்ளிட்டவர்களில் ராதாரவியும், நடிகையின் அம்மாவாக வரும் சேச்சியும் யதார்த்தம்.


வி.மகேந்திரனின் ஒளிப்பதிவில் இரயிலும், அது பயணிக்கும் இடங்களும் ஒவிய காட்சிப் பதிவாக ஜொலிக்கிறது. எல்.வி.கே.தாஸின் படத்தொகுப்பு, முன்பாதியைக் கட்டிலும், பின்பாதியில் பக்கா பதிவு. டி.இமான் இசையில் பழைய பெப் "தொடரி"யில் தொடரவில்லை.... என்பது பலவீனம்.


பிரபு சாலமனின் இயக்கத்தில், டி.இமானின் இசையில் மைனா, கும்கி, கயல் எல்லாம் சேர்ந்த கலவை தான் இமானின் இசை... என்றால் மிகையல்ல .


இன்ஜின் டிரைவர் இல்லா இரயில், அந்த பாலத்தை கடக்கும் காட்சி பதட்டத்தை இரண்டு மடங்காக்குகின்றது. அதே நேரத்தில் தொலைக்காட்சி மீடியாக்களையும் அரசியல்வாதியையும், பிரபு சாலமன் வெளுத்து வாங்கியிருப்பது படத்திற்கு பலமா?, பலவீனமா.? ரசிகர்களும், மீடியாக்களும் தான் முடிவு செய்ய வேண்டும்.


ஆரம்பித்தது முதல் இடைவேளை வரும் வரை படம் எதை நோக்கி செல்கின்றது என்றே தெரியவில்லை. காமெடி மட்டுமே ஆறுதல். அதே நேரம் பின்பாதியில் தனுஷே ரயில் மேல் ஏறி., ஒடும் போது, ரயிலில் இருக்கும் போலீஸ் மேலே ஏறி இரயிலை நிறுத்த உதவலாமே? என எல்லா இடத்திலும் லாஜிக் கேள்விகள் எழுகின்றது. க்ளைமாக்ஸுக்கு முன், மிகவும் பதட்டமான காட்சியில் கூட காமெடி தான் என்றாலும், தேவை தானா? என்ற கேள்வியும் எழுகிறது.


பிரபு சாலமன் படம் என்றாலே பார்த்தவுடன் காதல் தீப்பிடிக்க, அதன்பிறகு என் உடம்புக்குள்ள புகுந்து என் உசுர எடுத்துட்டன்ற வசனத்துடன் ஒரு காதல் வரும், அதே காதல் தான் இதிலும்.... அதை ஒடும் ரயிலில் சக பயணிகளுடன் ஓட விட்டு... ரசிகனை உசுப்பேற்ற பார்த்து அதில், காமெடி, காட்சி இழுத்தடிப்பு... என்ற முன் பாதியில் தோல்வியையும், பின் பாதியில் வெற்றியும் கண்டிருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன்.


நம்ப முடியாத கதையுடன் கூடிய, லாஜிக் மிஸ்டேக்குகள் நிரம்பிய பிரபு சாலமனின் தொடரி - தனுஷின் ஹிட் கேரியரை சற்றே "இடறி" விட்டிருக்கிறது பாவம்.


ஆக மொத்தத்தில், "தொடரி" தனுஷின் கேரியரை "இடறி" விட்டு ரசிகனின் "பிடரி"யிலும் அடிக்கிறது பாவம்!
------------------------------------------------


கல்கி சினி விமர்சனம்
ரயில் அல்லது எக்ஸ்பிரஸ் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லாகத் தொடர்வண்டி என்பதை அனுமானித்து அதைத் தொடரி என்று சுருக்கியிருக்கிறார்கள். புதுமையான பேரும் வைத்தாயிற்று! வரிவிலக்கும் வழி செய்தாகிவிட்டது. சரிதான். கொஞ்சம் சொந்தமாகக் கதை செய்வதிலும் இந்த ஆர்வத்தை காட்டியிருந்தால் நன்றாக இருக்கும். சரி உருவல் மேட்டருக்கு வருவோம்.

1976ஆம் வருடம் சில்வர் ஸ்ட்ரிக் என்று ஒரு படம் வந்தது. அந்தப் படத்தில் லாஸ் ஏஞ்சலிஸிலிருந்து சிகாகோ நோக்கிச் செல்லும் ரயிலிலேயே மன்னிகவும் - தொடரியிலேயே கதை முழுதும் நடக்கும்.

ஒரு கட்டத்தில் எஞ்சின் டிரைவர் இறந்துவிட, அதிபயங்கர வேகத்தில் அந்தப் பயணிகள் ரயில் சீறிப் பாய்ந்து செல்லும். எமர்ஜென்ஸி பிரேக்ககளும் செயலிழந்த நிலையில் கதாநாயகன், எஞ்சினையும் மற்ற பெட்டிகளையும் இணைக்கும் கப்ளிங்கை நீக்குவார். ஆளில்லாத எஞ்சின் மட்டும் ராட்சச வேகத்தில் தனியே போய், ஒரு ஸ்டேஷனைத் தரைமட்டமாக்கும்; பயணிகள் காப்பாற்றப்படுவார்கள்.

தொடரியின் மையக் கரு இதுதான்!

படத்தின் சுவாரசியத்தை மட்டுப்படுத்தத் தேவையானவற்றைச் செய்து, கேசரியைக் கடுகு, மிளகாய் போட்டுத் தாளித்திருக்கிறார்கள்.

தனுஷ் நன்றாக நடித்திருக்கிறார் என்பது, விலைவாசி நாளுக்குநாள் உயருகிறது என்பதைப் போன்று சாதாரண விவரணையாகிவிடும்.

மீடியாக்களைப் புரட்டி எடுத்துவிடுகிறார் இயக்குநர்.

குடித்துவிட்டு பணிக்கு வருவது, குடும்பப் பிரச்னைகளைப் பணி நேரத்தில் பேசுவதால் வரும் மன அழுத்தம் ஆகியன போகிறபோக்கில் - ஆனால் அழுத்தமாகச் சொல்லப்படுகின்றன.

மத்திய அமைச்சராக வரும் ராதாரவி, ரயில்வே நிலைய அதிகாரியான சின்னி ஜெயந்த் இருவரும் மிக நிதானமாகப் பிரச்னைகளைக் கையாளு பாணிக்கு ஒரு சபாஷ்!

கீர்த்தி சுரேஷ் அப்பாவித்தனம், காதல், அச்சம் எனக் கலவையான உணர்வுகளை மிகையின்றி அற்புதமாக வெளிப்படுத்துகிறார்.

கிட்டத்தட்ட ஆயிரம் பயணிகளின் உயிர் ஊசல், ரயிலோ கட்டுபபாடில்லாமல் பறக்கிறது. எஞ்சினில் சிக்கித் தவிக்கும் காதலி... இந்தச் சமயத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக ஓடும் ரயில் பெட்டியின் கூரையில் நின்று தனுஷ் நடனம் ஆடுவார் பாருங்கள், ரசிகர்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.

மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் சீறும் ரயிலில் பற்றிக் கொள்ளும் தீயை அதே வேகத்தில் பக்கத்துச் சாலையில் வரும் தீயணைப்பு வணி, அணைப்பது படத்தின் அதிகபட்ச நகைச்சுவை.


தொடரி; ஏறுகிறது பிடரியில்!
திரையரங்கில் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த நண்பர்கள் பாலு, கோகுள், தினேஷ், வினோத் மற்றும் ராம் ஆகியோரின் கருத்து: இடைவேளைக்கு முன்னால் மிக மெதுவாகப் போகிறது. பின்பாதி தேவலை.. படம்....ம்ம்ம்... பார்க்கலாம்.வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in