தெலுங்கு திரை உலகில் முதன்முறையாக நீருக்கு அடியில் படமாக்கப்பட்ட திரைப்படம் எனும் பெருமையுடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் காஸி, இந்திய கப்பல் மற்றும் கப்பற்படையை பற்றியது. காஸி எனும் புத்தம் எழுதிய சங்கல்ப் ரெட்டி அதனை திரைப்படமாகவும் மாறியுள்ளார். இயக்குனராக சங்கல்ப் ரெட்டி இப்படம் முதல் படமாகும். ராணா, டாப்சி, கேகே மேனன், அதுல் குலர்னி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
1970களில் பாகிஸ்தான் இராணுவம் வங்கதேசத்துடன் போர் புரிந்த போது, தனது வீரர்களுக்கு உதவிட ஹசி எனும் போர்கப்பலை இந்திய எல்லை வழியாக பாகிஸ்தான் அனுப்புகிறது. வங்கதேசத்தை அடைய இந்திய எல்லையில் உள்ள விக்ராந்த் எனும் கப்பலை கடந்துதான் காஸி சென்றாக வேண்டும். இதனால் காஸி கப்பலை தடுத்து நிறுத்த, கப்பற்படை அதிகாரி அர்ஜூன் வர்மா தலைமையில் எஸ்-21 எனும் போர்க்கப்பலை இந்திய அரசு அனுப்பியது. இந்த வரலாற்று நிகழ்வை காஸி எனும் பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளனர். இதில் அர்ஜூன் வர்மாவாக ராணா நடித்துள்ளார்.
திரைப்படங்களில் பெரிதாக பேசப்படாத இந்திய கப்பற்படையை மையப்படுத்தி காஸி எனும் திரைப்படத்தை உருவாக்கிய இளம் இயக்குனர் சங்கல்ப் ரெட்டிக்கு சபாஷ் போடலாம். பாகுபலியில் வில்லனாக மிரட்டிய ராணா, காஸி படத்தில் ஸ்டையிலான கப்பற்படை அதிகாரியாக ஜொலிக்கின்றார். அதிரடியான சண்டைக்காட்சிகளிலும், உணர்ச்சிவசமான காட்சிகளிலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுதியுள்ள ராணா தனி ஆளாய் திரைக்கதையை சுமந்துள்ளார்.
நடிகை டாப்சி பாகிஸ்தான் அகதியாக கவனம் ஈர்கின்றார். கேகே மேனன், அதுல் குல்கர்னி, சத்யதேவ் போன்றோர் பாத்திரம் அறிந்து பளிச்சிடுகின்றனர். கதாபாத்திர தேர்வில் இயக்குனர் தனி கவனம் செலுத்தியது வீண்போகவில்லை. ராணா, கேகே மேனன், அதுல் குல்கர்னி இம்மூவரையும் மையப்படுத்தி நகரும் முதல் பாதி விறுவிறுப்பை கூட்டுகின்றது. முழுப்படமும் செட்டில் படமாக்கப்பட்டது என்று சொன்னால் நம்ப முடியாத அளவிற்கு தத்ரூபமாக கடல் மற்றும் கப்பல் சண்டைகளை கண்முன் நிறுத்திய கலை இயக்குனர் தனி பாராட்டுக்களை அள்ளுகின்றார்.
காஸி எனும் போர்க்கப்பலை பற்றிய படம் எனவே ஏராளமான கப்பல் சண்டைக் காட்சிகளை காணலாம் என்ற எண்ணத்துடன் திரையரங்கிற்கு வரும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். VFX குழுவினரின் மெனக்கெடல் திரையில் மிளிர்கின்றது. கடல் அடியிலான காட்சிகளில் கிராபிக்ஸ் பணிகள் நேர்த்தியாக வந்துள்ளன. பல இடங்களில் சுமாராகவும் சில இடங்களில் சூப்பராகவும் ஒலிக்கின்றது பின்னணி இசை.
வழக்கமான தெலுங்கு பட பாணியில் மசாலா வாடை எதுவும் இல்லாமல் முதல் படத்திலேயே தனித்துவமான கதையை தேர்வு செய்து அதனை திரைக்கதையிலும் மெருகேற்றி கவனம் ஈர்க்கின்றார் சங்கல்ப் ரெட்டி. ஆனால் மசாலா பிரியர்களான டோலிவுட் ரசிகர்களுக்கு இப்படம் தீணி போடுமா என்றால் சந்தேகம்தான். அக்கட தேசத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம் எனும் பெருமையை தட்டிச் செல்லும் காஸி ராணாவின் திரை உலக வாழ்க்கையில் முக்கிய இடம்பெறும் என்பது மட்டும் உண்மை
‛காஸி - கண்களுக்கு விருந்தளிக்கும் போர்க்கப்பல்!
-------------------------------------------------------------
குமுதம் சினிவிமர்சனம்
பங்களாதேஷ் பிரச்னையில் இந்தியா மேல் கோபம் கெண்ட பாகிஸ்தான், காஸி என்ற நீர்மூழ்கிக் கப்பல் மூலம் இந்தியாவின் ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலை அழிக்க சதி செய்ய, அதை இந்திய கப்பற் படை வீரர்கள் எப்படி முறியடிக்கிறார்கள் என்பதுதான் காஸி படத்தின் கதை.
பாகிஸ்தான் சதித்திட்டம் உயர் அதிகாரிகளான ஓம்புரி, நாசருக்கு தெரியவரும்போதே ஒருவித பதட்டத்தை நமக்கு ஊட்டிவிடுகிறார்கள். ஒரு நீர்மூழ்கிக் கப்பலுக்குள் என்னென்ன நடக்கும் என்பதை காட்டக்காட்ட வியப்பு. கூடவே தேசப்பற்றும் சேர்த்துக் கொள்ள, சுவாரஸ்யம் கூடுகிறது.
ராணா டகுபதி, கடற்படை கேப்டனுக்கு செம பொருத்தம். நடையில் காட்டும் கம்பீரம், வசன உச்சரிப்பு எல்லாமே நமக்கு ஒரு வெறியை ஏற்படுத்துகிறது.
கோபக்கார கேப்டன் கே.கே. மேனன் அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருக்காமல் எதிரிகளைக் கண்டதும் அழிக்கத் துடிக்கும் ஆக்ரோஷம் டாப், அவர் இறந்த பின் ஜலசமாதி செய்வது உடம்பைப் புல்லரிக்க வைக்கிறது.
இன்னொரு கேப்டன் அதுல்குல்கர்னி இவர்களுக்கு ஈடுகொடுத்து நடித்திருப்பது கச்சிதம். அகதியாக வரும் டாப்ஸி, சிறுமி - சோகத்தை ஊட்டுகிறார்கள். இந்தியக் கப்பலான எஸ்.21ல் அதிகாரிகளாக வரும் ஓம்புரி, நாசர், வீரர்கள் என அனைவரின் நடிபபும் நம்மை ஒரு ஆழ்கடல் போரை கண்முன் காட்டிய திருப்தி. அதற்கு ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் இசையுமே முழுக்காரணம்.
ஹாலிவுட் படங்களுக்கு இணையானது என்று சொல்லும் அளவிற்கு திரைக்கதை அமைந்திருக்கும் இயக்குநர் சங்கல்ப் ரெட்டிக்கு ஒரு சல்யூட்.
காஸி, ஆஸம்!
குமுதம் ரேட்டிங்: நன்று