Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஒரு யமன்டன் பிரேமகதா (மலையாளம்)

ஒரு யமன்டன் பிரேமகதா (மலையாளம்),Oru yamandan premakadha
30 ஏப், 2019 - 13:47 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஒரு யமன்டன் பிரேமகதா (மலையாளம்)

ஒரு யமன்டன் பிரேமகதா (மலையாளம்) - விமர்சனம்

நடிகர்கள் : துல்கர் சல்மான், நிகிலா விமல், சம்யுக்தா மேனன், ரெஞ்சி பணிக்கர், சௌபின் சாஹிர், சலீம்குமார் சுராஜ் வெஞ்சாரமூடு, விஷ்ணு உன்னிகிருஷ்ணன், தர்மஜன் போல்காட்டி, ஹரிஷ் கணரன் மற்றும் பலர்

கதை : விஷ்ணு உன்னிகிருஷ்ணன் - பிபின் ஜார்ஜ்

இசை : நாதிர்ஷா

டைரக்ஷன் : நவ்பல்

துல்கர் சல்மான் நடிப்பில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் வெளியாகி இருக்கும் படம்.. அதுமட்டுமல்ல அமர் அக்பர் அந்தோணி மற்றும் கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் என்கிற சூப்பர் ஹிட் படங்களுக்கு கதை எழுதிய விஷ்ணு உன்னிகிருஷ்ணன் - பிபின் ஜார்ஜ் கூட்டணி கதை எழுதி உள்ள படம் என பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள இந்த படம் அந்த எதிர்பார்ப்புகளை ஈடு கட்டியதா..?

செல்வந்தரான லாயர் ரெஞ்சி பணிக்கரின் மூத்த மகன் துல்கர் சல்மான். படிக்க இஷ்டம் இல்லாமல் தனக்கு பிடித்தமான பெயிண்டர் வேலையில் ஈடுபடுகிறார். ஊர்ப்பெண்கள் எல்லாம் அவரிடம் காதல் அப்ளிகேஷன் கொடுக்க, அவரோ தன் மனதில் யார் மேல் காதல் ஸ்பார்க் உண்டாகிறதோ அவளைத்தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். இவர் திருமணத்திற்கு தாமதிப்பதால், நல்ல வேளையில் இருக்கும் அவரது தம்பி, அவர் காதலித்த பெண்ணை திருமணம் செய்வதில் கூட சிக்கல் ஏற்படுகிறது.

இந்த குழப்பத்தை தவிர்க்க தனது மனதுக்குப் பிடித்த பெண்ணை தீவிரமாக தேடுகிறார் துல்கர். ஒரு கட்டத்தில் தனது மானசீக காதலி நிகிலா விமலை கண்டுபிடிக்கிறார்.. ஆனால் நேரில் அல்ல.. செய்தித்தாளில்.. காணவில்லை என்கிற விளம்பர போட்டோ மூலமாக.. ஒரு முறை கூட பார்த்திராத நிகிலாவை தேடி அலையும் துல்கர் சல்மான் அவரை சந்திக்கும் நாளில் எதிர்பாராத அதிர்ச்சிக்கு ஆளாகிறார். அப்படி என்ன அதிர்ச்சி..? அதன்பின் துல்கர் சல்மான் என்ன முடிவெடுக்கிறார் என்பது மீதிக்கதை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சார்லி படத்தில் பார்த்த அதே துல்கர் சல்மான் தான் இந்தப் படத்திலும்.. வசதியான வீட்டுப் பையன் என்றாலும் பிடிக்காத படிப்பை விட்டுவிட்டு, பிடித்த வேலையை பார்த்துக் கொண்டு வாழ்க்கையை அதன்போக்கில் வாழ நினைக்கும் இளைஞனை அச்சு அசலாக பிரதிபலிக்கிறார்.. கண் முன்னே லட்டு லட்டாக அழகான பெண்கள் காதலை சொல்ல வரும்போது, வெறும் பேப்பரில் மட்டுமே புகைப்படமாக பார்த்த பெண் மீது காதல் வருவதாக அவர் சொல்வதும் அவருக்காக அவர் அந்த அளவுக்கு உருகுவதிலும் அவ்வளவாக அழுத்தம் இல்லை.

துல்கரை விரட்டி விரட்டி ஒருதலையாக காதலிக்கும் சம்யுக்தா மேனன் சில காட்சிகளில் மட்டுமே வரும் சாந்தமான நிகிலா விமல் என படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும் பெயரளவிற்கு சாதாரணமாகவே கடந்து போகிறார்கள்..

படத்தில் காமெடி நடிகர் பட்டாளமே இருந்தாலும் கஜா புயலில் சிக்கியவர்களுக்கு கஞ்சித்தொட்டி அமைத்து சாப்பாடு போட்டது போல ஓரளவிற்கே பயன்பட்டிருக்கிறது.. ஹோட்டல் கடை நடத்திக்கொண்டு சாப்பிட்டவர்களுக்கு கணக்கு பார்த்து பில் சொல்ல தெரியாமல் திணறும் ஹரிஷ் கணரன், பார்வை இல்லாவிட்டாலும் பாட்டுப்பாடி இம்சை கொடுக்கும் விஷ்ணு உன்னிகிருஷ்ணன், எந்த வேலைக்கும் போகாமல் சும்மா வெட்டியாக டீக்கடை முன் உட்கார்ந்து அரட்டை அடிப்பதை கோட்ட கடினமான வேலையாக கருதும் தர்மஜன் போல்காட்டி, தான் குடிக்க வைத்திருந்த மது பாட்டில்களை வாஷ்பேஸினில் மகள் ஊற்றினாலும் அதை புத்திசாலித்தனமாக கைப்பற்றும் சலீம்குமார், ஆக்சன், காதல் என அமர்க்களப்ப்படுத்த நினைத்து அனைத்திலும் பல்பு வாங்கும் சௌபின் சாஹிர் என ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் நம்மை சிரிக்க வைத்து கடமையை முடித்துக் கொள்கிறார்கள்.. துல்கரின் தந்தையாக பணிக்கர் வழக்கம்போல கம்பீரமும்.. அதேசமயம் நிகிலா விமலின் தந்தையாக நடித்துள்ள சுராஜ் வெஞ்சாரமூடு குணச்சித்திர நடிப்பில் பின்னி பெடலெடுக்கிறார்.

இடைவேளை வரை துல்கர் சல்மான் மற்றும் அவரது நண்பர்கள் குழு அடிக்கும் லூட்டிகளும் தன்னை தேடிவரும் காதல்களை வேண்டாம் என துல்கர் சல்மான் மறுப்பதுமாக பெரிய சுவாரசியம் இன்றி கதை நகர்கிறது. இடைவேளைக்கு பிறகு ஓரளவு சூடுபிடிக்கிறது கிளைமாக்ஸ் நாம் எதிர்பாராத விதமாக அமைந்தாலும் நம் மனதில் ஒட்ட மறுக்கிறது துல்கர் தனது காதலியுடன் சேர்ந்தாரா என்பதில் மட்டும்தான் நாம் யூகிக்க முடியாத ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர் நவ்பல்.. அதற்காக அவரை பாராட்டலாம்

திரைக்கதையில் புகுந்து விளையாட நிறைய இடம் இருந்தும் கதாசிரியர்கள் இருவரும் அறிமுக இயக்குனர் நவ்பலும் சேர்ந்து மெத்தனமாகவே ஆட்டம் ஆடி இருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் நடிக்க விரும்பிய துல்கர் இன்னும் கொஞ்சம் நல்ல கதையாக தேர்ந்தெடுத்திருந்தால் ரசிகர்கள் சந்தோஷப்பட்டிருப்பார்கள்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in